google-site-verification: googled5cb964f606e7b2f.html ஏப்ரல் 2025 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 26 ஏப்ரல், 2025

குறுவை பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்களும் அதன் பண்புகளும்

  • தமிழ்நாட்டில் நெல் சாகுபடியில் பல்வேறு பருவங்கள் இருந்தாலும் பிரதான பருவமாக குறுவை பருவம் திகழ்கிறது. குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. 
  • ஜூன்-ஜூலை மாதங்களில் தொடங்கும் குறுவை பருவம் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் முடிவதால் சுமார் 125 நாட்கள் வாழ்நாள் உடைய நெல் ரகங்கள் தேர்வு செய்து பயிரிடப்படுகிறது.
  • பொதுவாக இந்த பருவத்தில் போதுமான தண்ணீர் வசதி இருப்பதால் நேரடி நெல் விதைப்பு அல்லது புழுதி விதைத்து செய்யப்படுவதில்லை மாற்றாக, பெரும்பான்மையாக நடவு முறையே மேற்கொள்ளப்படுகிறது. இந்த குறுவை பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

TPS-5

  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திருப்பதிசாரம் ஆராய்ச்சி நிலையத்தால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ரகம் குண்டு நெல் வகையைச் சார்ந்தது. 
  • இதன் சராசரி வாழ்நாள் 110 முதல் 115 நாட்கள் 
  • நெல் பயிர்கள் சாயாமல் இருப்பதுடன் அதிக விளைச்சல் தரக்கூடியது. ASD 16 ரகத்தை விட 10-15  சதவீதம் கூடுதல் விளைச்சல் தரும்.
  • சராசரி ஏக்கருக்கு 2500 கிலோ மகசூல் கிடைக்க வல்லது. 
  • ஓரளவிற்கு தண்டுப்புழு, புகையான் மற்றும் இலை சுருட்டு பூச்சிகளின் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் உடையது.

ASD -16

  • அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 1986 ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ரகம் குண்டு நெல் வகையை சார்ந்தது.
  • இது மொத்த வாழ்நாள் 110 முதல் 115 நாட்களாகும். 
  • ஏக்கருக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவைப்படும். சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2000-2250 கிலோ கிடைக்கும். 
  • புகையான் பூச்சி தாக்குதலுக்கு ஓரளவிற்கு எதிர்ப்பு திறன் உடையது.

ADT-36

  • ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த ரகத்தின் மொத்த வாழ்நாள் சராசரியாக 110 முதல் 115 நாட்கள் ஆகும். 
  • இது நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்தது ஆகும். 
  • பல்வேறு வகையான இலை கருகல் நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உடையது மேலும் புகையான் பூச்சி தாக்குதலுக்கும் தாங்கி வளரும் தன்மை உடையது. 
  • இதன் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 1800 கிலோ ஆகும். 

ADT -37

  • இந்த நெல் ரகத்தின் சராசரி வாழ்நாள் 105 நாட்கள். 
  • குண்டு நெல் ரகத்தை சார்ந்த இந்த ரகம் அதிக விளைச்சல் தரக்கூடியது. 
  • நெல் பயிரில் தோன்றும் பல்வேறு நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன் உடையது. 
  • இதன் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2500 கிலோ ஆகும்.

ADT 43

  • நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்த இந்த ரகத்தின் சராசரி வாழ்நாள் 110 நாட்களாகும். 
  • சற்று உயரமாக அதிக எண்ணிக்கையிலான தூர்களுடன் காணப்படும்.
  • இதன் சராசரி விளைச்சல் 2300 கிலோ ஆகும்.

ADT 45

  • நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்த இந்த ரகத்தின் சராசரி வாழ்நாள் 110 நாட்களாகும். 
  • இந்த ரகத்தின் சராசரி விளைச்சல் 2500 கிலோ ஆகும்.
  • பல்வேறு நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன் உடையது குறிப்பாக புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் உடையது.

MDU -5

  • 95 முதல் 100 நாட்கள் வாழ்நாள் உடைய நடுத்தர சன்ன நெல் ரகமாகும். 
  • தண்ணீர் பற்றாக்குறை காணப்படும் பகுதிகளுக்கு உகந்தது. 
  • ஏக்கருக்கு சுமார் 2000 கிலோ இதன் சராசரி விளைச்சல் ஆகும். 

MPR 404

  • மகேந்திரா என்று அழைக்கப்படும் இந்த ரகத்தின் சராசரி வாழ்நாள் 120 நாட்களாகும். 
  • இது குண்டு முதல் நடுத்தர நெல் வகையை சார்ந்த ரகம் எனவே நல்ல விளைச்சல் தரக்கூடியது. 
  • ஏக்கருக்கு சுமார் 20 கிலோ விதை அளவு மட்டுமே தேவைப்படும். 
  • இந்த ரகத்தின் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2500 கிலோ ஆகும். 

CO 51

  • 105 முதல் 110 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம் பல்வேறு நோய் மற்றும் பூச்சிகளை தாங்கி வளரும் தன்மை உடையது. 
  • இந்த ரகத்தின் சராசரி விளைச்சல் 2600 முதல் 2650 கிலோ ஆகும்.
  • நெல் பயிரை பிரதானமாக தாக்கும் பல்வேறு வகையான கருகல் நோய் மற்றும் புகையான் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் உடையது.

CO 45

  • நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்த  இந்த ரகத்தின் மொத்த வாழ்நாள் 120 முதல் 125 நாட்களாகும். 
  • இந்த ரகம் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • பல்வேறு வகையான  கருகல் நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உடையதுடன் பூச்சி தாக்குதலை தாங்கி  வளரும் தன்மை உடையது.
  • இதன் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2500 கிலோ ஆகும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் (WhatsApp) குழுவில் இணைந்து பயன் பெறவும்.https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


செவ்வாய், 22 ஏப்ரல், 2025

சவுக்கு மரம் சாகுபடியில் இரகத் தேர்வில் கவனிக்கப்பட வேண்டியவை

 

  • விவசாயக் கூலி ஆட்கள் பற்றாக்குறை, மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் மேலும் இடு பொருட்களின் விலை போன்ற பல்வேறு காரணங்கள் விவசாயிகள் நீண்ட நாட்கள் பயிரை தேர்வு செய்து சாகுபடி செய்து வருகின்றனர்.
  • அந்த வகையில் சவுக்கு மரம் சாகுபடி தென் தமிழகத்தில் ஒரு இன்றியமையாத மரப்பயிராக மாறி வருகிறது. 
  • காகிதம் தயாரித்தல், விறகு, கம்பங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டிற்காக சாகுபடி செய்யப்படும் சவுக்கு மரமானது காற்று தடுப்பானாகவும் வளர்க்கப்படுகிறது. 
  • அனைத்து வகையான மண் அமைப்பிலும் வளரக்கூடிய திறனுடையது. குறைந்த செலவினம், குறைந்த ஆள் தேவை, நோய் மற்றும் பூச்சிகள் தாக்குதல் இல்லாமல் இருத்தல், நல்ல விலை போன்ற காரணங்களால் சவுக்கு சாகுபடி செய்யப்படுகிறது. 
  • சவுக்கு மரத்தில் பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் குறிப்பிட்ட சில நேரத்தில் பண்புகள் விளைச்சலை இருமடங்காக உதவி புரியும். 
  • கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள தேசிய அளவிலான மரப்பயிர் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் சிறந்த ரகங்களை வெளியிட்டுள்ளது. 
  • விதை பண்ணை விதைகள் கலப்பின ரகங்கள், Clone வகைகள் பல்வேறு ரகங்களை வெளியிட்டுள்ளது. 
  • உதாரணத்திற்கு, IFGTB- CH -1, IFGTB- CH -2, IFGTB- CH -5. இதில் குறைந்த வாழ்நாள் திறன் அதிக மகசூல் கொடுக்க கூடிய ரகமாக CH -5 திகழ்கிறது.

CH -5 சவுக்கு ரகத்தின் சிறப்பு பண்புகள்...

  • தமிழ்நாட்டின் அநேக மாவட்டங்களிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
  • தொடர்ச்சியாக தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களை தவிர மற்ற இடங்களில் சாகுபடி செய்ய மிக உகந்தது. 
  • அனைத்து வகையான மண் வகைகளும் சாகுபடி செய்யலாம். 
  • மரங்கள் சீரான மற்றும் ஒருமித்த வளர்ச்சியுடன் காணப்படும்.
  • தண்டுப் பகுதிகள் தொடர்ச்சியாகவும் நேராகவும் வளரும் திறன் உடையது. 
  • சராசரியாக 30 மாத காலத்தில் அறுவடைக்கு தயாராகும். 
  • வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது. 
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் கொண்டது. 
  • மற்ற ரகங்களை விட அதிக விளைச்சல் சராசரியாக விளைச்சலை இருமடங்காக்கும் திறனுடையது. 
  • மற்ற ரகங்கள் சுமார் 40 டன் விளைச்சல் கொடுக்கக் கூடியதாக இருக்கும் நிலையில் இந்த ரகம் 70 முதல் 80 டன் மகசூல் தரக்கூடியது. 
  • சாகுபடி செய்யும் விவசாயிகள் தரமான கன்றுகளை தேர்வு செய்வது மிக மிக அவசியம். 
  • இதை எளிதாக்கும் வகையில் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு ஆராய்ச்சி நிறுவனம் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு சில நிறுவனங்கள் மற்றும் தனியார் நர்சரிகளை உரிமம் கொடுத்து இந்த ரகங்களை விற்பனை செய்து வருகிறது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


தென்னையில் மெக்னீசியம் ஊட்டச்சத்தின் பயன்களும் குறைபாட்டு அறிகுறியும்

    தென்னை ஒரு பல்லாண்டு தாவரம் என்பதால் தொடர்ச்சியாக அதில் வேர் வளர்ச்சி, தண்டு வளர்ச்சி, இலை, பூ மற்றும் காய்கள் உற்பத்தி நடைபெற்று வரும். எனவே தென்னை சாகுபடியில் சரிவிகித அளவில் ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்பட்டால் மட்டுமே மரங்கள் வளமாக இருப்பதுடன் விளைச்சலும் போதுமான அளவு காணப்படும். தென்னை மரங்களுக்கு அநேக ஊட்டச்சத்துக்கள் தேவைப்பட்டாலும் 

    அவற்றில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது சாம்பல் சத்து அதனைத் தொடர்ந்து தழைச்சத்து, கால்சியம், மெக்னீசியம், மணிச்சத்து  மற்றும் போரான் ஆகும். இதில் இரண்டாம் நிலை ஊட்டச்சத்தான மெக்னீசியம், தென்னை சாகுபடிக்கு எவ்வாறு மிகவும் இன்றியமையாதது என்பதை பற்றி விரிவாக காண்போம்.

தென்னையில் மெக்னீசியம் ஊட்டச்சத்தின் பணிகள்:

  • இது பட்சையத்தின் ஒரு அங்கமாக திகழ்ந்து ஒளி, காற்று மற்றும் நீரை பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்கிறது.
  • இலைகள் நன்கு செழித்து பச்சையாக காண்பதற்கு இதுதான் முதன்மை காரணம்.
  • புரத உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து செடிகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு அடிப்படையாக திகழ்கிறது.
  • தென்னையில் அதிகப் பெண் மலர்கள் தோன்ற இது காரணமாக திகழ்கிறது.
  • பூ உதிர்வதை மட்டுப்படுத்தி அதிக காய்கள் உருவாவதற்கு துணை புரிகிறது.
  • தேங்காய் எண்ணெயில் lecithin எனப்படும் மூலக்கூறை அதிகப்படுத்துகிறது. இந்த எண்ணெயை உணவு மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் போது இதை மனிதர்களுக்கு நன்மை பயக்கும்.

இதன் இதர பணிகள்:

  • மெக்னீசியம் ஊட்டச்சத்தை சரியான விகிதத்தில் தென்னை மரங்களுக்கு கொடுக்கும்போது நிலத்தில் இருக்கும் மற்றும் நாம் இடும் பொட்டாசியம் எனப்படும் சாம்பல் சத்தை எளிதில் செடிகளுக்கு கிடைக்க செய்கிறது.
  • போதுமான அளவு மெக்னீசியம் சத்து கிடைக்கவில்லை எனில் மணி சத்துக்கள் செடிகளுக்கு சரியாக கிடைக்காது. இதனால் பூ பூத்தலில் பின்னடைவு ஏற்படும்.
  • சரியான விகிதத்தில் கால்சியம் சத்து செடிகளுக்கு கொடுத்தால் தான் தழைச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாஸ் செடிகளுக்கு கிடைக்கப்பெறும்.
  • போதுமான அளவுக்கு குளோரின் (chlorine) சத்து கிடைக்கப்பெறும் போது தான் வேர்கள் எளிதில் பொட்டாசியம் பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியத்தை எடுத்துக் கொள்கிறது.
  • இந்தக் காரணத்திற்காக தான் நான் தென்னம் பிள்ளைகளை நடவு செய்ய போதும் மற்றும் வருடத்திற்கு இரண்டு முறை உப்பு இட வேண்டும் என்று கூறுகிறோம்.
  • இது மட்டுமின்றி கால்சியம் மற்றும் மெக்னீசியம்  சத்து செடிகளுக்கு போதுமான அளவு கிடைக்கவில்லை என்றால் செடிகளின் இரும்பு சத்து குறைபாடு தெளிவாக காணப்படும்.

மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:

  • செடிகளின் அடி இலைகளில் திட்டு திட்டாக கருகியது அல்லது எரிஞ்சது போன்று காணப்படும்.
  • முதன்மையாக இலைகளின் ஓரங்களில் வெளிர் பழுப்பு நிற பட்டைகள் தோன்றும்.
  • இலைகளின் நுனிப்பகுதி முழுமையாக காய்ந்த நிலையில் காணப்படும்.
  • செடிகளில் போதுமான உணவு உற்பத்தி நடைபெறாது வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இளம் வயதிலேயே செடிகளை பார்க்கும் போது வயதான செடிகள் போன்ற தெரியும்.
  • அறிகுறிகள் நாளடைவில் இளம் இலைகளிலும் தென்படும்.
  • பார்ப்பதற்கு சாம்பல் சத்து பற்றாக்குறை அறிகுறிகள் போன்றே காணப்படும்.

மேலும் விவரங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.  https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


Recent Posts

Popular Posts