சாமந்தி பயிரில் பூ கருகல் (Botrytis blight) நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|
ஜூலை 19, 2024
In நோய் மேலாண்மை |
முன்னுரை:
- ஆடி மாதத்தில் நடவு செய்யப்படும் காய்கள் மற்றும் பூக்களுக்கு அறுவடை தருணத்தில் நல்ல விலை கிடைக்கும் என்பது பொதுவான கருத்து அதனால் தமிழ்நாட்டில் பரவலாக காய்கறிகள் மற்றும் பூ பயிர்கள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- தற்போது சாகுபடியில் இருக்கும் சாமந்தி பூக்களில் பல்வேறு விதமான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுகிறது. அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய நோயாக Botrytis எனப்படும் பூ கருகல் நோய். ஏனெனில் இது நேரடியாக பூக்களை பாதித்து உடனடியாக பூக்களின் தரத்தை குறைப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
- Botrytis எனப்படும் பூஞசானத்தால் ஏற்படக்கூடிய இந்த நோயானது கிரே மோல்ட் (Gray mold) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோயானது பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பூ பயிர்களை தாக்கும் வல்லமை படைத்தது. உதாரணத்திற்கு செவ்வந்தி, சாமந்தி, ரோஸ், துளிப் மற்றும் பல பூ பயிர்களின் வணிக ரீதியாக தேவைப்படும் பகுதியை பாதித்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
நோயின் அறிகுறிகள்:
- பூ இதழ்களில் பழுப்பு/ காவி நிற புள்ளிகள் ஆரம்பத்தில் காணப்படும்.
- நாளடைவில் இந்த புள்ளிகள் விரிவடைந்து கருகல் போன்று காணப்படும்.
- இதன் அறிகுறி மற்ற இதழ்களுக்கும் பரவி பூக்களை முழுவதும் பாதித்துவிடும்.
- பின்னாளில் அழுகல் ஏற்பட்டு உருமாற்றம் ஏற்பட்டு இதழ்கள் உதிரும்.
- தீவிர தாக்குதலின் போது இதன் அறிகுறிகள் மொட்டுகள், இலை மற்றும் தண்டுப் பகுதியிலும் காணப்படும்.
- தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாம்பல் நிற பூஞ்சான வளர்ச்சியை காண இயலும்.
நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை:
- தொடர்ச்சியான மழைப்பொழிவு, தூறல், பனிப்பொழிவு மற்றும் மேக மூட்டமான தட்பவெப்ப சூழ்நிலை.
- அதிகளவு நீர் பாய்ச்சுதல் மற்றும் வடிகால் வசதி இல்லாமல் இருத்தல்.
- நெருங்கிய நடவு
- பூக்கும் தருணத்தில் தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்துவது.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- பூக்கும் தருணம் பருவ மழைக்கு இணையாக வராத அளவிற்கு நடவு மேற்கொள்ளும்.
- மேட்டுப் பாத்தி அமைத்து நல்ல வடிகால் வசதியுடன் சாகுபடி செய்ய வேண்டும்.
- அடி உரமாக பயன்படுத்தும் தொழு உரத்துடன் ஏக்கருக்கு தலா 1.5 கிலோ Trichoderma மற்றும் Pseudomonas கலந்து ஊட்டமேற்றி இட வேண்டும்.
- போதுமான பயிர் இடைவெளி இருக்க வேண்டும் அப்போதுதான் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.
- மாதம் ஒருமுறை அல்லது மழைப்பொழிவு காலத்தில் மாதம் இருமுறை என ஏக்கருக்கு இரண்டு லிட்டர் Trichoderma vridae பாசன நீர் வழியாக கொடுக்க வேண்டும்.
- வாரம் ஒரு முறை Bacillus subtilis/ Pseudomonas fluorescence இலை வழியாக நன்கு தெளிக்க வேண்டும்.
- மழைப்பொழிவு காலத்தில் ஏக்கருக்கு 50 கிலோ அமோனியம் சல்பேட் மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு கலந்து மண்ணில் இட வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பூக்கள் அல்லது செடிகளை முழுமையாக அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
- பயிர்கள் பூக்கும் தருணத்தில் இருந்து தெளிப்பு நீர் பாசன வழியாக நீர் விடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- பயிர்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் தருணத்தில் வயலில் எவ்வித பணியையும் மேற்கொள்ளக்கூடாது.
- வயலில் களைகள் அல்லது இதர குப்பைகள் இல்லாதவாறு சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
- தழைச்சத்து உரம் அதிகம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பொட்டாசியம், போரான், மக்னீசியம் மற்றும் சிலிக்கான் ஊட்டச்சத்துக்கள் சரிவிகித அளவில் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும்.
- தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு நேரத்தில் பயிர்களுக்கு வெப்பநிலையை ஏற்படுத்தக்கூடிய ரசாயன மருந்துகளை தெளிக்கலாம்.
- மாலை நேரத்தில் மருந்துகளோ அல்லது நீரில் கரையும் உரத்தினையோ தெளிக்க கூடாது. ஏனெனில் இது இரவு முழுவதும் ஈரப்பதத்தை ஏற்படுத்தி நோய் தாக்குதலை ஊக்குவிக்கும். காலை நேரத்தில் தெளிப்பதால் வெப்பநிலை காரணமாக ஈரப்பதம் நீங்கிவிடும்.
- நாற்றுகளை இயற்கை வழி பூஞ்சான கொல்லி மற்றும் உயிர் உரம் பயன்படுத்தி நேர்த்தி செய்து நடவு செய்யலாம். அல்லது Carbendazim+ Mancozeb என்ற ரசாயன மருந்தை பயன்படுத்தியும் நேர்த்தி செய்யலாம்.
- நோய் தாக்குதலின் தீவிரம் அதிகமாக காணப்படும் தருணத்தில் இது கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். (கொடுக்கப்பட்டுள்ள அளவு 10 லிட்டர் தண்ணீருக்கு)
Captan -25 கிராம்
Zineb- 25 கிராம்
Carbendazim+ Mancozeb- 25 கிராம்
Chlorothaonil- 15 கிராம்
Thiophenate methyl - 15-20 கிராம்
Azoxystrobin+Mancozeb - 10 மில்லி
இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA




0 Comments:
கருத்துரையிடுக