google-site-verification: googled5cb964f606e7b2f.html ஏப்ரல் 2026 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 21 ஏப்ரல், 2026

🌞கோடை பயிரும் 🥀பாக்டீரியா வாடல் நோயும்

முன்னுரை:

  • கோடைகாலத்தில் சாகுபடி செய்யப்படும் கத்தரி, தக்காளி, மிளகாய், உருளை மற்றும் வெள்ளரி குடும்பத்தைச் சார்ந்த பல்வேறு காய்கறி பயிர்களில் பாக்டீரியா வாடல் நோய் தாக்குதல் அதிகம் காணப்படும். நோயால் பாதிக்கப்பட்ட பயிர்கள் திடீரென வாடி இறந்துவிடும்.
  • இதனால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. சராசரியாக 30 லிருந்து 70% வரை கூட இந்நோய் தாக்கதால் மகசூல் இழப்பீடு ஏற்படும்.
  • இந்த நோயானது _Ralstonia solanacearum_என்று அழைக்கப்படும் பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. மண் மற்றும் பயிர் கழிவுகளில் இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை அமையும் பொழுது பல்கிப் பெருகி சாகுபடி பயிரில் நோய் தாக்குதலை ஏற்படுகிறது. 

கோடைகாலத்தில் ஏன் அதிகம்? 

  • கோடைகாலத்தில் பயிர்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தம், அதிக சுற்று சூழல் வெப்பநிலை மற்றும் மண் வெப்ப நிலையில் ஏற்படும் அதீத மாற்றங்கள் ஆகிய காரணங்களினால் கோடைகாலத்தில் பாக்டீரியா வாடல் நோய் அதிகம் காணப்படுகிறது. 
  • கோடைகாலத்தில் மண் வெப்பநிலை அதிகமாக (30-40 டிகிரி செல்சியஸ்) உயரும் தருணத்தில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாம் தண்ணீர் பாச்சும் பொழுது திடீரென மண் வெப்பநிலை குறையும் சூழலில் விரும்பி விரும்பி வாழும். இதன் காரணமாக தீமை செய்யும் பாக்டீரியாக்கள் வேகமாக பெருக்கமடைந்து பயிரை தாக்கும். 
  • கூடுதலாக தொடர்ச்சியாக ஒரே பயிரை சாகுபடி செய்வது, முந்தைய பயிர் கழிவு எச்சங்கள் முழுமையாக அகற்றாமல் இருப்பது மற்றும் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட நாற்றுகளை பயன்படுத்துவது நோய் தாக்குதலை அதிகரிக்கும். 

🪾நோய் தாக்கம்: 

  1. மண்ணில் மிக நீண்ட நாட்களுக்கு உறக்க நிலையில் இருக்கும் பாக்டீரியாக்கள் சாதகமான நேரத்தில் பயிரின் வேர்களை தாக்கும். 
  1. மண்ணிலிருந்து வேர் வழியாக தாவரங்களின் வாஸ்குலார் திசுக்களை சென்றடைவதால் போதிய தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்காமல் திடீரென வாடி இறந்துவிடும். 

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 


  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது பகல் நேரங்களில் இலைகள் சற்று வாடி காட்சியளிக்கும். 
  • மாலை மற்றும் இரவு நேரத்தில் தற்காலிகமாக பயிர்கள் நன்றாக இருப்பது போன்ற தோன்றும். 
  • ஆனால் நோய் தாக்குதல் சற்று தீவிரம் அடையும் பொழுது திடீரென பயிர்கள் வாடி இறந்துவிடும். 
  • பயிர் மற்றும் இலைகள் அனைத்தும் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும். பூஞ்சை வாடல் நோயால் ஏற்படும் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இங்கு முற்றிலும் இருக்காது. 
  • பாதிக்கப்பட்ட பயிரின் தண்டு பகுதியை பிளந்து பார்த்தால் நிறமாற்றம் காணப்படும். 
  • வயலில் அங்கு இங்குமாக திட்டாக காணப்படும் இது போன்ற அறிகுறிகள் நாளடைவில் பரவ ஆரம்பிக்கும். 
  • முறையாக கட்டுப்படுத்தவில்லை எனில் பயிர் இழப்பீடு பெரிய அளவில் ஏற்படும். 

🌱கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஒரே பயிரை மீண்டும் மீண்டும் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். மாற்று பயிராக பயிறு வகை பயிர்களை பயிரிடலாம். 
  • தரமான விதை அல்லது நாற்றுகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். கோடை பருவத்திற்கென பரிந்துரைக்கப்படும் ரகங்களை தேர்வு செய்து சாகுபடி மேற்கொண்டால் சிறந்தது. 
  • அடி உரமாக நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு திரவங்களை பயன்படுத்தி ஊட்டமேற்றி இட வேண்டும். 
  • இயற்கை இடு பொருட்களை பயன்படுத்தி சாகுபடி செய்யும் பொழுது அதிக வெப்பநிலையை தாங்கி வளருவதுடன் நோய் எதிர்ப்பு திறனுடன் காணப்படும். 
  • மூடாக்கு அமைத்து பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மண் அதிகம் வெப்பமடைவதை தவிர்க்கலாம் மேலும் மண் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். 
  • கோடைப் பருவத்தில் முன்னெச்சரிக்கையாக 15 நாட்களுக்கு ஒரு முறை trichoderma அல்லது bacillus உயிரியல் திரவம் மற்றும் ஈயம் கரைசல் ஏக்கருக்கு தலா மூன்று லிட்டர் என்ற அளவில் தரை வழியாக கொடுக்கவும். 
  • காலை அல்லது மதிய நேரத்தில் நீர் பாய்ச்சுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாலை ஐந்து மணிக்கு மேல் அல்லது இரவு நேரங்களில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவது மிகவும் உகந்தது.
  • நோய் தாக்குதல் தென்பட்டால் உடனடியாக பாதித்த செடிகளை வேரோடு அப்புறப்படுத்தி அகற்றவும். 
  • பாதித்த செடிகள் இருந்த இடம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள செடிகளுக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் trichoderma/ bacillus, 200 மில்லி ஈயம் கரைசல் மற்றும் 100 மில்லி ஹியூமிக் அமிலம் கலந்து வேர் மண்டலம் நனையும்படி ஊற்றவும். 
  • வயலில் எப்போதும் மிதமான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்யவும். மண் அதிக வெப்பமடைந்தால் பாக்டீரியாக்கள் பெருக்கம் அதிகமாகும். 
  • தட்பவெப்ப சூழ்நிலை, பயிர் மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப உரிய இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். 
  • இரசாயன முறையில் கட்டுப்படுத்த காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை பரிந்துரைக்கப்பட்ட அளவில் வேர் மண்டலத்தில் ஊற்ற வேண்டும். 

  • மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

சனி, 11 ஏப்ரல், 2026

காய்கறி சாகுபடியில் இனக்கவர்ச்சி பொறியின் முக்கியத்துவம்


முன்னுரை :

  • உணவின் ஓர் அங்கமாகவும் ஊட்டச்சத்து மிகுந்த உணவாகவும் காய்கறிகள் கருதப்படுகிறது. காய்கறி சாகுபடியில் விவசாயிகளுக்கு சவாலனாக திகழ்வது பூச்சி/புழு தாக்குதலால் ஏற்படும் சேதங்களும் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புமே. இதனை கட்டுப்படுத்த அளவுக்கு அதிகமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றது.
  • இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளில் சுமார் 15 முதல் 16 சதவீதம் காய்கறி பயிர்களுக்கு மட்டுமே தெளிக்கப்படுகிறது. மேலும் குறுகிய கால இடைவெளியில் இம்மருந்துகள் பயன்படுத்தப்படுவதால் எஞ்சிய நஞ்சு உணவு வழியாக மனித உடலில் கலக்கிறது. இது மட்டும் இன்றி அதிக உற்பத்தி செலவு, காற்று மாசுபடுதல், நன்மை செய்யும் பூச்சிகளை இழத்தல், நிலத்தடி நீர்  மாசுபடுதல், பூச்சிகள் எதிர்ப்பு திறன் பெறுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. 

  • நீடித்த விவசாயத்திற்கு நிலையான தீர்வு ஒருங்கிணைந்த பூச்சி  மேலாண்மையே. அதன் ஒரு அங்கமாக திகழும் இனக்கவர்ச்சி  பொறியை பற்றி விரிவாக பார்ப்போம்.

இனக்கவர்ச்சி  என்றால் என்ன?

  • பெண் அந்துப் பூச்சிகள் தனது இனப்பெருக்கத்திற்காக  ஆண் அந்துப் பூச்சிகளை ஈர்க்க,  அதன் உடலில் இருந்து ஒரு வித வேதிப்பொருள்களை வெளியேற்றும். 
  • இந்த வேதிப்பொருளின் நறுமணத்திற்கு ஆண் அந்தப் பூச்சிகள் கவரப்பட்டு இனப்பெருக்கம் நடைபெறும். 
  • இதை அடிப்படையாக வைத்து, ஆய்வுக்கூடங்களில் இந்த வேதிப்பொருள்கள் தயாரிக்கப்பட்டு   இனக்கவர்ச்சி பொறியாத பயன்படுத்தப்படுகிறது. 
  • காய்கறி சாகுபடியில் காணப்படும் அநேக அந்து பூச்சி வகை புழு தாக்குதலை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி பெரிதும் உதவும். 
  • உதாரணத்திற்கு கத்திரியில் குருத்து மற்றும் காய்ப்புழு, தக்காளியில் காய்ப்புழு, பருத்தியில் இளஞ்சிகப்பு காய் குழு, மக்காச்சோளம், சோளம், நெல், நிலக்கடலை போன்ற பயிர்களில் படைப்புழு தாக்குதல், பருத்தி, துவரை, கொண்டைக்கடலை, தக்காளி, மிளகாய் மற்றும் பல பயிர்களில் அமெரிக்கன் காய்ப்புழு தாக்குதல், பல்வேறு  பயிர்களில் சேரத்தை ஏற்படுத்தும் புகையிலை கம்பளிப்பு, நெல் தண்டு  துளைப்பான், தக்காளியில் ஊசித் துளைப்பான், முட்டைக்கோசு, காலிஃப்ளவர் போன்ற பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும்  வைர முதுகு பூச்சி.
  • ஆண் பூச்சிகள் சுரக்கும் வேதிப்பொருள்கள் எதிரி பூச்சிகளை எதிர்க்கவும் பெண் பூச்சிகளை கவரும் உதவுகிறது. இந்த வேதிப்பொருளை பயன்படுத்தி ஒரு சில இன கவர்ச்சி பொரியல் மட்டுமே உள்ளது. (Aggregation pheromon)
  • நாம் பயன்படுத்தும்  பெரும்பான்மையான இனக்கவர்ச்சி பொறியின் அடிப்படை பெண் அந்தப் பூச்சிகளின் உடம்பில் சுரக்கும்   வேதிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. (Attractant pheromon)
  • ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் இனக்கவர்ச்சி பொறிகளை முறையாக பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் அளப்பரியது. 
  • முறையாக பயன்படுத்தினால் சுமார் 50 லிருந்து 60% பூச்சி தாக்குதலை மட்டுப்படுத்தலாம். 
  • இதனுடன் பூச்சி விரட்டி திரவங்கள் தெளித்தல், நன்மை செய்யும் பூச்சிகளை கவருதல், வரப்பு  மற்றும் பொறி பயிர் சாகுபடி செய்தல், ஊடு பயிர், கலப்பு பயிர் மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி போன்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் பின்பற்றும்பொழுது ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான தேவை 90 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிடும். 

பயன்படுத்தும்போது கவனிக்கப்பட வேண்டியவை:

  • தேவையான எண்ணிக்கையில்    இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்த வேண்டும்.
  • பயிருக்கு ஏற்றவாறு  இன கவர்ச்சி பொறிகளை உரிய எண்ணிக்கையில் பயன்படுத்த வேண்டும்.
  • உதாரணத்திற்கு பருத்தி, நிலக்கடலை, மிளகாய் போன்ற பல்வேறு  பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் புகையிலை  கம்பளி புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 12 எண்கள் இனக்கவர்ச்சி பொறிகள் பயன்படுத்த வேண்டும். கத்தரியில் குருத்து மற்றும் காய் புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 12 முதல் 16 எண்கள் இன கவர்ச்சி பொறி பயன்படுத்த வேண்டும். 
  • இனக்கவர்ச்சி பொறிகளை பயிரின் உயரத்திற்கு ஏற்றவாறு நிறுவ வேண்டும். மேலும் பயிர் வளர வளர இதன் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். 
  • இனக்கவர்ச்சி பொறியில் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை உரிய இடைவெளியில் மாற்ற வேண்டும். பயிரில் காணப்படும்   புழுவின் தன்மை கேட்ப இதன் கால இடைவெளி மாறுபடும். உதாரணத்திற்கு கத்தரி பயிரில் 30 முதல் 40 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். 
  • இதன் மூலம் கவரப்படும் பூச்சிகளை  கண்டறிவது மட்டுமின்றி அதிக அளவில் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். 
  • இனக்கவர்ச்சி பொறிகளை  மிக அருகில் வைக்காமல் உரிய இடைவெளியில் வைத்து பராமரிக்க வேண்டும். 
  • என்ன விதமான பூச்சி தாக்குதல் என்பதை கண்டு இருந்து அதற்கு ஏற்றவாறு இன கவர்ச்சி பொறிகளை பயன்படுத்த வேண்டும்.
  • இனக்கவர்ச்சி பொறியில் கவரப்படும் பூச்சிகளை அவ்வப்போது அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். 
  • ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிக்கடி தெளித்தால்  இனக்கவர்ச்சிப்  பொறியில் அஞ்சு பூச்சிகள் கவரப்படும் சதவீதம் சற்று குறையும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp  குழுவில் இணைந்து  பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE

Recent Posts

Popular Posts