தென்னை சாகுபடி செய்யப்படும் அநேக இடங்களில் காணப்படும் ஒரு பொதுவான நோயாக கருதப்படும் இந்த இலை கருகல் நோய் Lasiodiplodia theobromae எனப்படும் பூஞ்சை தாக்குதலால் ஏற்படுவதாகும்.
வருடம் முழுவதும் நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடிய இந்த பூஞ்சை தாக்குதலால் 15 முதல் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் அபாயம் உள்ளது.
நோய் தாக்குதலின் அறிகுறிகள்:
இலை மற்றும் காய்களில் நோய் தாக்குதல் அறிகுறி காணப்படும்.
சிறு கன்றுகள் முதல் காய்ப்பில் உள்ள பெரிய மரங்கள் வரை அனைத்து வயதுடைய தென்னை மரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி அறிகுறிகளை தோற்றுவிக்கும்.
ஆரம்ப நிலை அறிகுறியாக வட்ட முதல் ஒழுங்கற்ற வட்ட வடிவில் சிறிய இலை புள்ளிகள் காணப்படும். நாளடைவில் இது ஒன்றோடு ஒன்று இணைந்து கருகல் நோயாக மாறும்.
மரத்தின் அடி இலைகள் ஆரம்பத்தில் அறிகுறிகளை தோற்றுவிக்கும். நாளடைவில் மேல்நோக்கி அடுத்தடுத்த இலைகளுக்கு அறிகுறிகள் பரவுவதை காண இயலும்.
கருகல் நோயின் விளிம்புகளில் தெளிவான கோடுகள் தெரிவதை காண இயலும்.
ஓலைகள் நுனியில் இருந்து மேலோக்கி கருக ஆரம்பித்து இலை பரவி முழுவதும் கருகி காணப்படும்.
பூங்கொத்து மற்றும் காய்களிலும் இலை கருகல் நோயின் அறிகுறி காணப்படும்.
காய்களின் நுனிப்பகுதியில் பழுப்பு நிறத்தில் நிறம் மாற்றம் காணப்படுவதுடன் அதன் விளிம்புகள் வளைந்து நெளிந்து காணப்படும்.
இந்த வழியாக பூஞ்சை காயின் உள் நுழைந்து அழுகல் நோயை ஏற்படுத்தும்.
இவ்வாறு பாதிப்படைந்த காய்கள் சில நேரங்களில் சுருங்கி, வளைந்து நெளிந்து காணப்படுவதுடன் முதிர்ச்சி அடையும் முன்னரே உதிர்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
நோயால் பாதித்த மரத்தின் இரண்டு அல்லது மூன்று அடி இலைகளை தண்டுப் பகுதியிலிருந்து சுமார் இரண்டு அடி தள்ளி வெட்டி வயலை விட்டு அப்புறப்படுத்தவும்.
அதேபோன்று நோய் தாக்கி உதிர்ந்த காய்கள் மற்றும் பூங்கொத்துகளை முழுமையாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
ஏனெனில் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்கு காற்று வழியாக இந்த பூஞ்சைகள் பரவும் தன்மை உடையது.
போதுமான அளவு ஊட்டச்சத்து மற்றும் தண்ணீர் கொடுக்க வேண்டும் ஏனெனில் பராமரிப்பு அல்லாத மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மிக எளிதில் நோய் தாக்குதலுக்கு உட்படும்.
நோயால் பாதிப்படைந்த மரங்களுக்கு தலா 200 கிராம் Pseudomonas மற்றும் bacillus ஆகியவற்றை 25 கிலோ நன்கு முக்கிய தொழு உரம் மற்றும் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து இடவும்.
மரத்தின் வயதிற்கு ஏற்ப தலா 20 முதல் 50 மில்லி Pseudomonas மற்றும் bacillus ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீரில் கலந்து மரம் ஒன்றிற்கு நன்கு தெளிக்க வேண்டும்.
ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் Carbendazim+ Mancozeb அல்லது Copper Oxychloride பத்து லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட அளவில் ஊட்டச்சத்துக்களை கொடுத்து வர வேண்டும். தேவையின் அடிப்படையில் பொட்டாசியம் ஊட்டச்சத்தை சற்று கூடுதலாக தரலாம்.
வேர் வழியாக மருந்துகளை செலுத்த விரும்பினால் Hexaconazole இரண்டு முதல் ஐந்து மில்லி வரை பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப கொடுக்கலாம்.
0 Comments:
கருத்துரையிடுக