google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்: மற்றவைகள்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

மற்றவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மற்றவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஜூலை, 2024

தென்னையில் குரும்பை/காய்கள் உதிர்வதற்கான காரணங்கள் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள்:

முன்னுரை:

பொதுவாக இளம் தென்னை மரங்களில் குரும்பை மற்றும் காய்கள் உதிர்வது இயற்கையான ஆகும். ஆனால் வளர்ந்த மற்றும் நன்கு பராமரிக்க கூடிய மரங்களில் குரும்பை மற்றும் காய் உதிர்வு என்பது பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டதாகும். குரும்பை மற்றும் காய்கள் உதிர்வு காரணமாக சுமார் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

காரணங்கள்: 
மண்ணின் கார அமிலத்தன்மை: 

  • மண்ணின் கார அமிலத்தன்மை 5 -க்கு குறைவாக இருந்தால் அதனை அமிலத்தன்மை உடைய மண் என்பார்கள். இதனை சரி செய்ய மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு சுண்ணாம்பு சத்து இடவேண்டும். அதேபோன்று மண்ணின் கார அமிலத்தன்மை 8-க்கு அதிகமாக இருந்தால் உவர்/களர் மண் என்பார்கள் இதனை சரி செய்ய தேவையான அளவு ஜிப்சம் இடவேண்டும். 
  • மண்ணின் கார அமிலத்தன்மையை பொறுத்தே நாம் மண்ணில் இடும் ஊட்டச்சத்துக்கள் பயிர்களை சென்றடையும். நாம் எவ்வளவுதான் ஊட்டச்சத்துக் கொடுத்து பராமரித்தாலும் மண்ணின் கார அமிலத்தன்மை குறிப்பிட்ட நிலையை தாண்டும் பொழுது ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைப்பதில் கண்டிப்பாக பற்றாக்குறை ஏற்படும்.

ஊட்டச்சத்து பற்றாக்குறை: 

  • போரான் நுண்ணூட்ட சத்து குறைபாட்டால் குரும்பை மற்றும் காய்கள் உதிரும் என நாம் அறிந்ததே. ஆனால் சரிவிகித முறையில் மற்ற ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கொடுக்கவில்லை என்றாலும் குறும்பை உதிர்வு காணப்படும். எனவே பேருட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை சரிவிகித அடிப்படையில் மரங்களுக்கு கொடுக்க வேண்டும்.
  • மரம் ஒன்று இருக்கு நன்கு மக்கிய தொழு உரம் 15 முதல் 25 கிலோ, தழைச்சத்து 1.5 கிலோ, மணிச்சத்து 2 கிலோ, சாம்பல் சத்து 2 கிலோ, நுண்ணூட்டச் சத்து 150-200 கிராம், Humic குருணை - 250 கிராம் மற்றும் VAM -100 கிராம் ஆகியவற்றை மரம் ஒன்றிற்கு என வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இடலாம்.
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தென்னை டானிக் 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன் கலந்து மரம் ஒன்றுக்கு வேர் வழியாக வருடத்திற்கு இரண்டு முறை கொடுத்தல் குறும்பை மற்றும் இளம் காய்கள் உதிர்வை தவிர்க்கலாம்.

நீர் மேலாண்மை: 

  • கடுமையான வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை தென்னையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஒருமுறை தென்னை மரங்கள் கடுமையான வறட்சியை சந்தித்து விட்டால் சுமார் 2 முதல் 3 வருடங்கள் வரை அதன் பாதிப்பு மறைமுகமாக இருக்கும். எனவே சராசரியாக மரம் ஒன்று இருக்கு சொட்டுநீர் பாசன வழியாக தினசரி 50 லிட்டர் எனவும் வாய்க்கால் வழி பாசன மரங்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை 400 லிட்டர் என்ற முறையிலும் நீர் பாய்ச்ச வேண்டும். 
  • மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து சுமார் ஒரு மீட்டர் தள்ளி சொட்டுநீர் அளவு பட்ட பாதி அமைத்து நீர் விட வேண்டும். நீர் இழப்பீட்டை தவிர்க்க பசுந்தாள் பயிர்களை வளர்த்தல், மூடாக்கு இடுதல், தென்னை நார் கழிவு மற்றும் மண் புழு உரம் இடலாம். உப்பு/உவர் தண்ணீர் உடைய நிலங்களுக்கு மாதம் ஒருமுறை ஈயம் அல்லது வேஸ்ட் டீ கம்போசர் பயன்படுத்த வேண்டும். கோடை காலங்களில் அதிக அளவு குறும்பை/இளம் காய்கள் உதிர்வதால் அதற்கு ஏற்றவாறு நீர் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.

மண் மேலாண்மை: 

மரத்தை சுற்றி உள்ள மண் அதிக இறுக்கம் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். மரத்தைச் சுற்றி 1.5 மீட்டர் வரை வருடத்திற்கு நான்கு முறை கொத்தி விட்டு கலைகள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். அதிக மழைப்பொழிவு நேரத்தில் சிறிதளவு உப்பு மற்றும் அம்மோனியம் சல்பேட் இடுவதால் ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். தொடர்ச்சியாக மண் இறுக்கமாக இருந்தால் கால்சியம், போரான் மாங்கனிசு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் செடிகளுக்கு கிடைப்பதில் பின்னடைவு ஏற்படும்.

போரான் ஊட்டச்சத்து குறைபாடு:

  • பொதுவாக ஊட்டச்சத்து குறைபாடு காய் மற்றும் பூக்கள் உதிர காரணமாக இருந்தாலும் தென்னையில் போரான் நுண்ணூட்ட சத்து  குறைபாட்டை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி விரிவாக ஏற்கனவே நமது வலைதளத்தில் பதிவு செய்துள்ளோம் அதனை கீழே காணவும்.
  • போரான் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய மரம் ஒன்று இருக்கு வருடம் 250 முதல் 500 கிராம் போராக்ஸ் இட வேண்டும்.

மகரந்த சேர்க்கை: 

  • தென்னை மரம் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக காய்களை உருவாக்குகிறது. அதாவது காற்று மற்றும் பூச்சிகளின் உதவியால் ஒரு பூக்களில் இருந்து மற்றொரு பூக்கள் மகரந்தம் சென்று இனப்பெருக்கம் அடைவதால் காய்கள் உருவாகிறது. 
  • அளவுக்கு அதிகமான மழை அல்லது வெப்பம் காரணமாக போதுமான அளவு மகரந்த சேர்க்கை நடைபெறாத காரணத்தினால் பல்வேறு நிலைகளில் பூ மற்றும் காய்கள் உதிர்கிறது. மகரந்த சேர்க்கையை ஊக்குவிக்க தேனீ பெட்டிகள் வைக்கலாம், மரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பூச்செடிகளை வளர்க்கலாம் என பல வழிமுறைகள் உள்ளது. 

தேர்வு செய்யும் ரகத்தின் செயல்பாடுகள்: 

  • ஒவ்வொரு தென்னை ரகங்களும் தனக்கே உரித்தான பண்புகளை கொண்டிருக்கும் அதன்படி குட்டை ரகங்களில் அதிகப்படியான பூ மற்றும் காய் உதிர்வு காணப்படும். குட்டை வகை தென்னை ரகங்களில் 50 முதல் 95 சதவீதம் வரையிலும் நெட்டை ரகங்களில் 40 முதல் 75 சதவீதமும் குறும்பை மற்றும் இளம் காய்கள். எனவே நாம் தேர்வு செய்யும் ரகத்தின் பண்புகளை தெரிந்து கொண்டு பின்னர் சாகுபடி செய்ய வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகளின் செயல்பாடு:

  • இயற்கையாகவே எந்த ஒரு மரங்களும் தனக்கு தேவையான வளர்ச்சி ஊக்குகளை உற்பத்தி செய்யும். ஆனால் அசாதாரண சூழ்நிலை காரணமாக தன்னால் உற்பத்தி செய்ய இயலாத வளர்ச்சி ஊக்கியை நாம் செடிகளுக்கு வழங்க வேண்டும். அதன்படி தென்னை மரங்கள் பூக்கும் தருணத்தில் NAA எனப்படும் நாப்தலின் அசிட்டிக் ஆசிட்டை 10 லிட்டர் தண்ணீருக்கு இரண்டு முதல் மூன்று மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை: 

எந்த ஒரு பயிரிலும் நோய் மற்றும் பூச்சியை முறையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மறைமுகமாக பயிர்களின் உற்பத்தி திறனை பாதித்து மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். தென்னையில் பூக்கள் வெடிக்கும் தருணத்தில் அதிக அளவு பூஞ்சாண மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் தாக்கும் அதை சரியாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://www.blogger.com/blog/post/edit/4214495925679616483/3870744730597550618

செவ்வாய், 2 ஜூலை, 2024

இலாபம் தரும் சவுக்கு மரம் சாகுபடி

முன்னுரை:

குறைந்த நாட்களில் செலவில்லாமல் மர பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்ட நினைக்கும் விவசாயிகளுக்கு சவுக்கு மரம் சாகுபடி செய்வது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. காகிதம் தயாரித்தல், மரச்சாமான்கள் தயாரித்தல், விறகு, மரக்கட்டை என பல்வேறு பயன்களை கொண்டுள்ள சவுக்கு மர சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஏன் சாகுபடிக்கு உகந்தது: 

  • அனைத்து மண் வகைகளிலும் வளரும் 
  • குறைந்த சாகுபடி செலவினம் 
  • வேலையாட்கள் பெரிய அளவில் தேவையில்லை 
  • நீர் தேவை மிகவும் குறைவு 
  • எளிதில் விற்பனை செய்ய இயலும் 
  • வனவிலங்குகள் தொல்லை இல்லை 
  • நோய் அல்லது பூச்சி தாக்குதல் இல்லை 
  • சராசரி விலை கிடைக்கப் பெறுகிறது.

ரகம் தேர்வு செய்தல்: 

  • பல்வேறு நாட்டு, ஒட்டு  மற்றும் கலப்பின ரகங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து முழு விலையிலும் மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகத்தை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது. நாட்டு சவுக்கு மற்றும் இந்தோனேசிய வகை ரகங்கள் கொண்டு கலப்பினம் அல்லது ஒட்டுக் கட்டிய ரகங்களை முறையாக தேர்வு செய்து பயிரிடுவதால் நல்ல விளைச்சல் பெற இயலும்.
  • குறிப்பாக TNPL நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும் கலப்பின ரகங்கள் நல்ல மகசூல் கொடுக்கக் கூடியதாக திகழ்கிறது எனவே இதனையும் தேர்வு செய்து நடவு செய்யலாம். 

நிலம் தயார் செய்தல்: 

இரண்டு முறை கலப்பை உழவு செய்து பின்னர் ரோட்டா வேட்டர் பயன்படுத்தி மண் கட்டிகளை உடைக்க வேண்டும்.

பயிர் இடைவெளி: 

இரண்டு வரிசைக்கு இடைப்பட்ட இடைவெளி ஐந்து முதல் ஆறு அடி எனவும் இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி மூன்று முதல் மூன்று அடி வரை இருக்கலாம். இதன் மூலம் ஏக்கருக்கு சுமார் 2500 மரங்கள் பெற இயலும்.

குழி எடுத்தல்: 

30 சென்டிமீட்டர் நீளம், அகலம் மற்றும் ஆழம் உடைய குழிகளை தயார் செய்து 15 நாட்கள் ஆற விட வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு நன்கு மக்கிய தொழு உரம், உயிர் உரங்கள், VAM மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இடவேண்டும்.

நடவு செய்தல்: 

போதுமான நீர் வசதி இருந்தால் எப்போது வேண்டுமானாலும் நடவு செய்யலாம். மன வரி பூமியில் நடவு செய்ய விரும்பினால் பருவ மழை காலத்தில் நடவு மேற்கொள்ளலாம்.

களை மேலாண்மை:

ஆரம்ப காலத்தில் களை மேலாண்மை மிகவும் அவசியம். அதாவது முதல் வருடம் சுமார் 4 முறையாவது களையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உர மேலாண்மை: 

இந்த மரம் வளிமண்டலத்தில் இருக்கும் தழைச்சத்தை கிரகிக்கும் தன்மை உடையது அதற்கேற்றவாறு உரமிடுதலை திட்டமிடலாம். வருடத்திற்கு இரண்டு முறை போதுமான அளவு ஊட்டச்சத்து பருவமழை தருணத்தில் கொடுக்க வேண்டும்.

சொட்டுநீர் பாசனம் அமைத்தல்: 

சொட்டுநீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்வதால் வேலையாட்கள் குறைக்கப்படுகிறது, களைகள் அதிகம் வளர்வதில்லை, நீர் தேவையும் குறைவு, அனைத்து வகையான நிலங்களுக்கும் உகந்தது, நீரில் கரையும் உரங்களை கொடுக்க இயலும். இதனால் நல்ல மகசூல் எதிர்பார்க்கலாம்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:

இதில் பெரிய அளவு நோய் அல்லது பூச்சி தாக்குதல் இருப்பதில்லை அவ்வாறு இருந்தால் அதனை எளிதில் இயற்கை முறையில் கட்டுப்படுத்தி விடலாம்.

ஊடுபயிர் இடுதல்: 

அனைத்து வகையான காய்கறி பயிர்கள், நிலக்கடலை,உளுந்து, எள், பயிறு வகை பயிர்கள் என குறைந்த வாழ்நாள் கொண்ட அனைத்து பயிர்களையும் முதல் ஒரு வருடம் சாகுபடி செய்யலாம்.

அறுவடை மற்றும் விளைச்சல்: 

அதிக வாழ்நாள் திறன் கொண்ட பயிராக இருந்தாலும் சுமார் மூன்று முதல் நான்கு வருடங்களில் நாம் அறுவடை செய்து லாபம் ஈட்டலாம். கலப்பின கன்றுகளை பயன்படுத்தும் பொழுது ஏக்கருக்கு சுமார் 60 முதல் 70 டன் வரை மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது ஏக்கருக்கு குறைந்தபட்சம் 3 லட்சம் வரை நிகர லாபம் எடுக்க இயலும். 

இது போன்ற வேளாண் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


சனி, 29 ஜூன், 2024

காய்கறி பயிர்களில் ஒட்டுக்கட்டுதலும் அதன் நன்மைகளும்

முன்னுரை: 

  • மனிதர்களின் அன்றாட வாழ்வில் காய்கறிகளின் பண்பாடு தவிர்க்க இயலாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காய்கறி சாகுபடியில் ஏற்படும் அதிக நோய் மற்றும் பூச்சி தாக்குதல், அதிக உர பயன்பாடு, மகசூல் குறைவு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக பழ பயிர்களில் ஒட்டுக்கட்டி வீரிய ரகங்களை பெறுவது போன்றே காய்கறி பயிர்களிலும் ஒட்டுக்கட்டுதல் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம். 

ஒட்டு கட்டுதல் என்றால் என்ன: 

  • ஒட்டுக்கட்டுதல் என்பது ஒரே இனம் அல்லது குடும்பத்தைச் சார்ந்த இரண்டு செடிகளின் பாகங்களை இணைத்து அதன் சிறப்பு பண்புகளை புதிய செடி வடிவில் உருவாக்கும் தொழில் நுட்பம் ஆகும். 
  • இந்தச் செடியின் அடிப்பாகத்தை வேர்ச்செடி எனவும் மேல் பாகத்தை தண்டுக்குச்சி எனவும் அழைப்பார்கள். பொதுவாக வேர்ச்செடிகள் வறட்சியை தாங்கி வளரும் தன்மை, அதிக நீர் அல்லது உப்பை தாங்கி வளரும் தன்மை, வேர் வழியாக பரவக்கூடிய பல்வேறு நோய்களுக்கு எதிராக எதிர்ப்பு தன்மை அல்லது தாங்கி வளரும் தன்மையை கொண்டிருக்கும். 
  • தண்டுக்குச்சியானது நோய் அல்லது பூச்சி எதிர்ப்பு திறன் அல்லது தாங்கி வளரும் திறன், மேம்பட்ட ஊட்டச்சத்து, அதிக விளைச்சல் என பல்வேறு பண்புகளை கொண்டிருக்கும். இந்த இரண்டு பண்புகளையும் ஒருங்கிணைத்து புதிய செடியாக மாற்றி நாம் விரும்பிய பண்புகள் மற்றும் பல்வேறு நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன் கொண்ட புதிய செடியை உருவாக்குவது ஒட்டுக்கட்டுதல் நிகழ்வாகும்.

கத்தரி செடியில் ஒட்டு கட்டும் முறை:

  • நல்ல வேர் அமைப்பு, அதிக ஆண்டு நிலைத்திருக்கும் தன்மை, வறட்சியை தாங்கி வளர்தல், நோய், பூச்சி மற்றும்  நூற்புழுக்களுக்கு எதிரான செயல்படும் கத்திரி இனத்தைச் சேர்ந்த சுண்டைக்காய் செடியை வேர் செடியாக பயன்படுத்த வேண்டும். 
  • அதேபோன்று நாம் விரும்பிய பண்புகளைக் கொண்டுள்ள கத்திரி ரகத்தை தண்டு குச்சியாக பயன்படுத்த வேண்டும். இதன் இரண்டு தண்டு பகுதியும் ஒரே அளவு உதாரணத்திற்கு பென்சில் தடிமன் உடையதாக இருக்க வேண்டும். 
  • சுண்டைக்காய் செடியில் செங்குத்தாக வளரும் கிளைப் பகுதியில் உள்ள குச்சியை தேர்வு செய்து அதே தடிமன் உடைய கத்தரி தண்டு குச்சியை ஒன்றிணைத்து ஒட்டு கட்ட வேண்டும். அதாவது வேர்ச்செடியின் பாகத்தை சுமார் பத்து சென்டிமீட்டர் உயரத்தில் கத்தி முழுமையாக இருப்பது போன்று தயார் செய்ய வேண்டும் அதில் தண்டுக்குச்சியின் பகுதியை V வடிவத்தில் தயார் செய்து குச்சியின் பகுதியுடன் இணைத்து பிளாஸ்டிக் பயன்படுத்தி இணைத்து கட்ட வேண்டும். 
  • இவ்வாறு செய்தால் அதிக அளவு உணவு இந்த ஒட்டு பகுதிக்கு செல்வதால் எளிதில் ஒட்டுக்கட்டுதல் ஒருங்கிணைந்து புதிய செடியாக உருவாகும். போதுமான வேர் வளர்ச்சி அடைந்தவுடன் இதனை தனியாக பிரித்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு கடினப்படுத்தி பின்பு வயலில் நடவு செய்ய வேண்டும். 
  • இதற்கு 70 முதல் 80 சதவீதம் காற்று ஈரப்பதம் இருக்கும் இடத்தில் பத்து நாட்களும் பிறகு நிழல் வலை கூடாரத்தில் பத்து நாட்களும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு உருவாகும் ஒட்டுச் செடியில் தண்டு குச்சி மற்றும் வேர்ச்செடி ஆகிய இரண்டு பண்புகளும் ஒருங்கிணைந்து கிடைப்பதால் விவசாயிகளுக்கு சாகுபடி செலவினும் குறைவதுடன் அதிக மகசூல் பெற இயலும்.

ஒட்டு கத்திரியின் சிறப்பியல்புகள்: 

  • நல்ல வேர் அமைப்பு 
  • வறட்சியை தாங்கி வளர்தல் 
  • மண்ணின் கார அமிலத்தன்மையை தாங்கி வளர்த்தல் 
  • அதிகளவு ஊட்டச்சத்து மற்றும் நீரை பயிர்களுக்கு உறிஞ்சி கொடுப்பது 
  • இதனால் நல்ல பயிர் வளர்ச்சி மற்றும் அதிக கா
  • வேர் சம்பந்தமான அனைத்து நோய் மற்றும் பூச்சிகளை தாங்கி வளரும் தன்மை பெறுதல்
  • நீண்ட நாட்களுக்கு மகசூல் தருதல் 
  • அதிக மகசூல் தரும் தன்மையுடையது.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறவும்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


திங்கள், 24 ஜூன், 2024

நிழல் வலை கூடாரத்தில் காய்கறி சாகுபடி செய்வதன் நன்மைகள்

முன்னுரை:

  • பெரும்பான்மையான காய்கறிப் பயிர்கள் குறிப்பிட்ட பருவம் மற்றும் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு வளர்வதால் பருவமற்ற காலத்தில் இதன் சாகுபடி பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் தரம் குறைந்து விலையில் அதிக மாற்றம் திகழ்கிறது.
  • விவசாயிகள் பருவ மற்ற தருணத்தில் சாகுபடி மேற்கொள்ளும் பொழுது அசாதாரண தட்பவெப்ப சூழ்நிலை, மழை மற்றும் வெப்பநிலை காரணத்தால் இதன் உற்பத்தி பெரிதும் பாதிப்படைகிறது. குறிப்பாக தீவிர குறைந்த மற்றும் அதிக வெப்பநிலை காரணத்தால் பெரும்பான்மையான காய்கறி பயிர்களில் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு காய் பிடிப்பு திறன் மிகவும் குறைந்து காணப்படுவதால் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு விலை ஏற்றத்தை காண இயலுகிறது.
  • பல்வேறு உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளால் பயிர் சாகுபடியில் ஏற்படும் சவால்களை சரி செய்திடவும், காய்கறி உற்பத்தியை அதிகரிக்கவும், பருவ மற்ற தருணத்தில் தரமான காய்கறிகளை உற்பத்தி செய்திடவும், நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகளை வழங்கிட  நிழல்வலைக் கூடாரத்தில் காய்கறி சாகுபடி செய்வது ஒரு சிறந்த முறையாகவே கருதப்படுகிறது.

நிழல் வலை கூடாரம் என்றால் என்ன:

இதில் நிழல் வலை கூடாரம் என்பது சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளியை குறிப்பாக அல்ட்ரா வயலட் கதிர் வீச்சை தடை செய்தும், வெப்பநிலை மற்றும் காற்று ஈரப்பதத்தை பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றியும், காற்று உள் புகுந்து எளிதில் வெளி வரக்கூடிய ஒரு அமைப்பு ஆகும்.

நிழல் வலை கூடாரத்தில் நிறங்கள்:

பச்சை மற்றும் கருப்பு - இந்த நிற நிழல் வலை கூடாரங்கள் ஒளியின் அளவு மற்றும் தரத்தை மாற்றி அமைத்து கொடுக்கிறது. இதனால் பயிரின் வளர்ச்சி சீராக இருக்கும்.
வெள்ளை- ஒளியின் அளவை சற்று குறைத்து மட்டும் கொடுக்கிறது தரத்தில் எந்த மாற்றமும் செய்யாது. இதனால் பயிர் வேகமாக வளரும்.

நிழல் வலை கூடாரத்தின் நன்மைகள்:

  • கூடாரத்தின் உட்பகுதியில் வெப்பநிலையை 50 சதவீதம் வரை குறைத்துக் கொடுக்கக்கூடியது. 
  • அனைத்து பருவத்திலும் காய்கறி பயிர் சாகுபடி செய்ய உகந்தது. 
  • அதிக வெப்பநிலை மழைப்பொழிவு காற்று போன்ற அசாதாரண சூழ்நிலையில் இருந்து பயிர்களை பாதுகாக்கிறது. இதனால் மகரந்த சேர்க்கை பாதிக்கப்படாமல் அதிக அளவு பூக்கள் மற்றும் காய் பிடிப்பதை காண இயலும்.
  • வீரிய விட்டு ரகங்களை சாகுபடி செய்ய உகந்த சூழ்நிலை ஏற்படுத்தும். 
  • கிடைக்கப்பெறும் குறைந்த இடத்தில் பயிர்களை செங்குத்தாக வளர்த்து அதிக மகசூலை ஈட்ட இயலும். எனவே இதன் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் வெகுவாக அதிகரிக்கும்
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்படுகிறது.
  • இதனால் மகசூலின் தரம் மேம்பட்டு காணப்படும்.
  • இதர வேளாண் நவீன தொழில் நுட்பங்களான நிலப் போர்வை அமைத்தல், சொட்டுநீர் பாசனம் /தெளிப்பு நீர் பாசனம், பல்வேறு பயிர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தரமான காய்கறிகளை பெறலாம்.
  • தக்காளி, கத்தரி, வெள்ளரி, மிளகாய், குடைமிளகாய், கீரை வகைகள் மற்றும் அனைத்து கொடி காய்கறி வகைகள் என நாம் விரும்பிய பயிரை இதில் சாகுபடி செய்து பயன்பெறலாம். 
  • இது மட்டும் இன்றி களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல் போன்ற விவசாய பணிகளுக்கு தேவைப்படும் வேலை ஆட்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவதால் உற்பத்தி செலவும் குறைகிறது.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வெள்ளி, 14 ஜூன், 2024

சாம்பல் பூசணி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை

முன்னுரை:

  • சாம்பல் பூசணி சாகுபடியில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது நாம் எந்த பயனுக்காக சாகுபடி செய்கிறோம் என்பதுதான். திருஷ்டிக்காக சாகுபடி செய்யும் போது அதன் உருவம் சரியானதாக இருக்க வேண்டும். உணவுக்காக உற்பத்தி செய்யும் போது அறுவடை பருவம் பருவமழையை ஒத்து வரக்கூடாது. 
  • இதைத் தவிர இதிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்புக்காக சாகுபடி செய்கிறோம் என்றால் வியாபாரிகளிடம் சாகுபடிக்கு முன்னதாக ஒப்பந்தம் இட்டு கொண்டு பின்பு சாகுபடி வேலையை தொடங்கலாம்.

பருவம்: 

அறுவடை காலம் பருவமழையை நெருங்கி வரக்கூடாது. டிசம்பர் முதல் மே மாதம் இறுதி வரை அறுவடை செய்ய ஏதுவாக பயிர் செய்ய வேண்டும். ஏனெனில் அப்போதுதான் நல்ல விலை கிடைப்பதுடன் மகசூல் பாதிப்பு இருக்காது.

ரகம்: 

Mahyco, Drishti, VNR போன்ற ரகங்கள் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விதை வாங்கும்போது தரமானதா மற்றும் காலாவதி ஆகாத விதையா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

விதை அளவு: 

600-700 கிராம் ஏக்கருக்கு.

நிலம் தயார் செய்தல்: 

வாய்க்கால் அமைக்க வேண்டும். இரண்டு வாய்க்காலுக்கு இடைப்பட்ட தூரம் இரண்டு முதல் மூன்று மீட்டர் இருக்கலாம். ஒரு வாய்க்காலின் இரண்டு அணைப்பகுதிகளிலும் விதைகள் நடவு செய்ய வேண்டும். ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் இடைவெளி சுமார் ஒரு மீட்டர் இருக்கலாம்.

நீர் பாய்ச்சுதல்: 

  • வாய்க்காலில் நன்கு நீரைப் பாய்ச்சி ஈரப்படுத்தவும். விதைகள் விதைப்பதற்கு முன்பு அல்லது பின்பு களைக்கொல்லி தெளிக்கலாம். 
  • ஏக்கருக்கு சுமார் 750-1000 மில்லி Pendimethlin அல்லது Metolachlor தெளிக்கலாம். விதைப்பதற்கு முன்பு அல்லது விதைத்து மூன்று நாட்களுக்கு முன்னதாக மட்டுமே தெளிக்க வேண்டும். அதற்கு மேற்பட்ட நாட்களில் தெளிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

விதைத்தல்: 

குழிக்கு இரண்டு விதை விதைக்கலாம்.

உரம் இடுதல்: 

அடி உரமாக தேவையான அளவு தொழு உரம், 75 கிலோ டி ஏ பி மற்றும் தேவையான அளவு நுண்ணூட்ட உரம். ஆனால் 20-25 நாட்களில் ஒரு முறையும் 40 முதல் 45 நாட்களில் மீண்டும் ஒரு முறையும் உரம் இடுதல் மிகவும் சிறந்தது.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்: 

  • விதைத்த 20 நாட்களில் இருந்து பத்து நாட்களுக்கு ஒரு முறை என இரண்டு அல்லது மூன்று முறை etherl என்ற மருந்தை பத்து லிட்டர் தண்ணீருக்கு 1.5 முதல் 2 மில்லி கலந்து தெளிப்பதால் பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மற்றும் பூ உதிராது.
  • தேவையின் அடிப்படையில் உரம் மற்றும் டானிக் பயன்படுத்தலாம். குறிப்பாக இதில்  பொட்டாசியம், போரான் மற்றும் நுண்ணூட்ட சத்து கொடுக்க வேண்டும் அப்போதுதான் பூ மற்றும் காய் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பூச்சி மேலாண்மை: 

  • பயிரின் ஆரம்ப நிலையில் சாறு உறிஞ்சு பூச்சி அஸ்வினி மற்றும் இலைபேன் தாக்குதல் தென்படும். இதனை கட்டுப்படுத்த Fibronil அல்லது imidacloprid தெளிக்கவும்.
  • பயிரின் நடுத்தர மற்றும் பிந்தைய நாளில் புழு மற்றும் பழ ஈ தாக்குதல் காணப்படும் அதை இயற்கை முறையில் அல்லது ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

நோய் மேலாண்மை:

இதில் பெரிதளவு நோய்கள் ஏற்படாது சாறு உறிஞ்சும் பூச்சிகளால் தேமல் நோய் தென்படலாம் அதைத் தவிர மழைக்காலங்களில் வேர் அழுகல் மற்றும் வெள்ளை பூஞ்சான நோய் காணப்படும். நோய்கள் தென்படும் போது உடனடியாக அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஞாயிறு, 9 ஜூன், 2024

நிலக்கடலையில் நீர் மேலாண்மையில் ஏற்படும் சவால்கள்

முன்னுரை:

  • வைகாசி பட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை விதைப்பு மேற்கொண்டு தற்பொழுது சுமார் 10 முதல் 25 நாள் வயது பயிராக சாகுபடியில் உள்ளது. 
  • தற்போது பெய்து வரும் குறைந்தபட்ச மழையினால் கூட தொடர்ச்சியான மண் ஈரப்பதம் திகழ்வதால் பல்வேறு நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நிலக்கடலையில் காண முடிகிறது.
  • எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, சூரியகாந்தி, எள் போன்ற பயிர்களும் பெரும்பான்மையான பயிறு வகை பயிர்களும் தொடர்ச்சியான மழைப்பொழிவு / வயலில் நீர்த்தேக்கம் / தொடர்ச்சியான ஈரப்பதம் போன்ற பல்வேறு நீர் மேலாண்மை சார்ந்த காரணங்களால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மறைமுகமாக மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

நிலக்கடலையில் நீர் மேலாண்மை: 

  • மண்ணின் தன்மை, தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் தேர்வு செய்யப்படும் ரகம் ஆகியவற்றைப் பொறுத்து நிலக்கடலை மானாவாரி மற்றும் நீர்ப்பாசனம் மூலமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
  • நீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் பொழுது மண் தன்மையை பொறுத்து சராசரியாக 7-15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
  • அதாவது மணல் மற்றும் சரளை வகை மண்ணில் ஏழு முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையும், களிமண் செம்மண் போன்ற நிலங்களுக்கு சராசரியாக 15 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டியிருக்கிறது.
  • நிலக்கடலை சாகுபடியில் நல்ல மகசூல் பெற அதன் மொத்த வாழ்நாளில் சுமார் 500 முதல் 800 மில்லி மீட்டர் அளவிற்கு நீரை கொடுத்தால் நல்லது.
  • நிலக்கடலை பயிரில் நீர் மேலாண்மையில் ஏற்படக்கூடிய சவால்களை அடிப்படையாகக் கொண்டு நாம் இதை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். ஒன்று வறட்சி பருவம் மற்றொன்று பூக்கும் பருவம். 
  • வளர்ச்சி பருவம் என்பது விதை விதைப்பு மேற்கொண்ட நாட்கள் முதல் சராசரியாக 55 நாட்கள் வயதுடைய பயிராக கருதலாம். இந்த நாட்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பயிர் அதிகப்படியான வறட்சியை கூட தாங்கி வளரும் ஆனால் மண்ணில் நிலவும் தொடர்ச்சியான ஈரப்பதத்தினால் குன்றிய பயிர் வளர்ச்சி, பல்வேறு  ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல நோய்கள் பயிரை தாக்கும்.

பயிர் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள்:(50 நாட்களுக்கு உட்பட்ட வயது உடைய பயிர்களில்)

அதாவது வளர்ச்சிப் பூர்வமான முதல் 50 முதல் 55 நாட்களில் பயிர் வறட்சியை எளிதாக தாங்கி வளரும் ஆனால் மழை காரணமாக அல்லது தொடர்ச்சியாக நீர் பாய்ச்சுவதால் கீழ்க்கண்ட அறிகுறிகளை நாம் வயலில் காண இயலும்.

  • குன்றிய பயிர் வளர்ச்சி 
  • குன்றிய வேர் வளர்ச்சி 
  • இதனால் வேர்ப்பகுதியில் வேர் முடிச்சுகள் குறைவாக உருவாதல். எனவே தழைச்சத்தை கிரகித்து வேர்ப்பகுதியில் நிலை நிறுத்துவது வெகுவாக குறையும். 
  • இளம் பருவத்திலேயே செடிகளின் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்தல். 
  • பயிர்கள் சரியாக கிளை பிரியாமல் காணப்படுதல்.
  • கிளைகளில் காணப்படும் கணு இடைவெளி பகுதி அதிகமாக இருப்பதால் குச்சி போன்ற வளர்ச்சி இருக்கும்.
  • இதனால் பயிரில் இருக்கும் மொத்த எண்ணிக்கையின் இலைகள் குறைவாகவே காணப்படும்.
  • நிலக்கடலையை உருவாக்கக்கூடிய விழுதுகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
  • ஊட்டச்சத்து குறைபாடுகள்: தழைச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனிசு, துத்தநாகம் மற்றும் சல்பர் ஆகிய ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரதானமாக காண இயலும். 
  • ஏற்படும் நோய்கள்:  வேர் அழுகல், கழுத்து அழுகல் மற்றும் மொட்டு அழுகல் நோய் பிரதானமாக காணப்படுகிறது.

50 நாட்களுக்கு மேற்பட்ட வயது உடைய பயிரில் ஏற்படும் அறிகுறிகள்:

  • வாடல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • விழுதுகள் எண்ணிக்கை குறைந்து மற்றும் மண்ணில் சரிவர புதையுறாமல் இருக்கும். 
  • காய்கறி எண்ணிக்கை குறைதல்.
  • நிலக்கடலையில் உள்ள பருப்புகள் போதுமான அளவு பெருக்கம் அடையாமல் இருக்கும்.
  • நாட்டு நிலக்கடலையில் பருப்பின் சுவை மாறுபட்டு காணப்படுதல். 
  • ஆனால் பருப்பில் இருக்கும் எண்ணெய் சதவீதம் மற்றும் புரதச்சத்து அதிகரிக்கும் என ஆய்வு அறிக்கை கூறுகிறது.
  • நிலக்கடலை ஒரே தருணத்தில் முதிர்ச்சி அடைவது இல்லை. 
  • அறுவடை சமயத்தில் அதிக ஈரப்பதம் இருந்தால் விதை முளைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இது போன்ற வேளாண்மை சார்ந்த தகவல்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வெள்ளி, 7 ஜூன், 2024

இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

களை என்பது என்ன: 

  • களைச் செடிகள் தேவையற்ற செடிகள் அல்ல. தேவையற்ற இடத்தில் வளர்வதால் அதனை நாம் களைகள் என்று கூறுகிறோம். மற்றபடி இந்த செடிகள் எண்ணற்ற பலன்களையும் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.
  • பயிர் சாகுபடியில் களைகளை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக திகழ்கிறது. குறிப்பாக இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்கள் களைகளை கட்டுப்படுத்த முடியாமல்  அதிக செலவினம் மற்றும் மகசூல் இழப்பீடு சந்திக்க நேரிடுகிறது.

களைகள் எவ்வாறு பரவுகிறது:

  • மக்காத தொழு உரத்தை பயன்படுத்துவதால்.
  • வேறு வயல்களில் இருந்து தண்ணீர் நம் வயலுக்குள் செல்வதாலும்.
  • புதிதாக நம் வயலுக்கு மண் அடிக்கும் பொழுது அதன் வழியாகவும். 
  • தொடர்ச்சியாக கால்நடைகளை வயலில் மேச்சலுக்கு விடுவதாலும். 
  • முறையான பண்ணை வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதாலும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • 18 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை கோடை பருவத்தில் ஆழமான உழவு செய்வதால் களைகள் அதிக வெப்ப நிலைக்கு உட்பட்டு அதில் உள்ள ஈரப்பதம் முழுமையாக வெளியேறுவதால் களைகள் இறந்து விடுகிறது. இதனால் மீண்டும் முளைத்து வரும் களைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது. 
  • வயலை சுற்றி உயரமான வரப்பு அமைப்பதால் அருகில் உள்ள வயல்களில் இருந்து மழை நீர் உள்ளே வராமல் இருப்பதால் களைகள் பரவுவதை தவிர்க்கலாம்.
  • நமது வயல்களுக்கு புதிதாக மண் அடிக்கும் பொழுது தேர்வு செய்து கொண்டு வரப்படும் மண்ணில் களைகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • அடி உரமாக நன்கு மக்கிய தொழு உரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் இதில் இருக்கக்கூடிய விதைகள் முளைத்து வயலில் களைகள் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • அதிகம் களைகள் வளரக்கூடிய நிலத்தில் தொடர்ச்சியாக பயிர் சுழற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது நம் தேர்வு செய்யும் பயிர் நல்ல வேர் அமைப்பு மற்றும் அதிக இலை பகுதியை கொண்டுள்ளதாகவும் தேர்வு செய்யப்படுவதால் களைகளின் வளர்ச்சி வெகுவாக மட்டுப்படுத்தப்படுகிறது.
  • அதேபோன்று ஊடு பயிரிடுதல், வரப்பு பயிர் சாகுபடி செய்தல் மற்றும் தொடர் பயிர் சாகுபடி போன்றவற்றை பின்பற்றுவதாலும் களைகள் வளர்ச்சி மற்றும் எண்ணிக்கையை குறைக்கலாம்.
  • நிலத்தில் பயிர்கள் இல்லாத காலத்தில் அல்லது பயிர் இடைவெளியில் மாடு/ஆடுகள் மேய்ப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இதன் மூலம் இடப்படும் சாணம் மீண்டும் களை வளர்ச்சியை நிலத்தில் அதிகப்படுத்தும்.
  • வருடத்திற்கு ஒரு முறை வேகமான வளர்ச்சி மற்றும் அதிக வேர் அமைப்பு கொண்ட குறைந்த வாழ்நாள் பயிர் அல்லது பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்வதால் களைகளின் வளர்ச்சி மற்றும் வேர் அமைப்பு இந்தப் பயிர்களால் சிதைக்கப்பட்டு வளர்ச்சி தடைபடுகிறது. மேலும் இது மண்ணிற்கு வளத்தையும் தன்மையையும் மாற்றுகிறது. 
  • நிலத்தில் தோன்றும் களைகளை அவ்வப்போது பிடுங்கி எடுக்க வேண்டும். குறிப்பாக களை செடிகள் பூ பூப்பதற்கு முன்னதாக இதனை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.
  • உழவு அல்லது கைகளை எடுக்கும் பொழுது களைகள் நன்கு காய்ந்த பிறகு மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும். இல்லையெனில் இதன் வளர்ச்சி மற்றும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அல்லது களைகளை வயலில் இருந்து சேகரித்து வெளியே அகற்றலாம்.
  • பல்லாண்டு பயிர் அல்லது உயர் தொழில்நுட்ப முறையில் பயிர் சாகுபடி செய்யும் பொழுது இடைப்பட்ட பகுதியில் Weed mat எனப்படும் மக்காத தார் பாய்களை விரித்து விடுவதால் அந்த பகுதியில் களை வளர்ச்சி முற்றிலும் தடைபடுகிறது. ஆனால் இது அதிக செலவீனத்தை ஏற்படுத்தும். 
  • நாம் தேர்வு செய்து பயிரிடும் பயிரை பொறுத்து நெகிழி நிலப் போர்வை அல்லது பண்ணை கழிவுகள், தேங்காய் நார் கழிவு, மரத்தூள்கள், மக்கிய இலைகள் போன்றவற்றை பயன்படுத்தியும் தற்காலிக முறையில் மண் மூடாக்கு இடலாம். ஆனால் இது எளிதில் தீப்பற்றக் கூடியது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • புல் வகைக் களைகள் உதாரணத்திற்கு அருகம் புல், கோரை, சுனைப்புல் போன்றவை அதிக அளவு நம் வயலில் இருக்கும் பொழுது அந்த வயலில் நெல் வாழை போன்ற அதிக நீர் தேவை உள்ள பயிர்களை சாகுபடி செய்யும் பொழுது களைகளின் கிழக்குகளை அழுகச் செய்து வெகுவாக புல் வகைகளை கட்டுப்படுத்தலாம். 
  • சில வகை பயிர்களின் வேர்களில் இருந்து சுரக்கப்படும் திரவங்கள் மற்ற பயிர்கள் வளர்வதை தடை செய்கிறது இது போன்ற பயிர்களை தேர்வு செய்து பயிரிடலாம். உதாரணத்திற்கு சோளம், தட்டைப்பயிறு நரி பயிர், பசுந்தாள் பயிர்கள், மொச்சை, குதிரைவாலி, சூரியகாந்தி மற்றும் பல பயிர்கள்.
  • மாமரத்தின் அடிப்பகுதியில் பொதுவாக களைகள் அதிகம் வளர்வதில்லை. ஏனெனில் மரத்தின் நிழல் மற்றும் மா இலை, பட்டை மற்றும் தண்டுப் பகுதியில் உள்ள வேதிப்பொருட்கள் களைகள் வளர்வதை தடை செய்வதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு கூறுகிறது. 
  • எலுமிச்சை புல் எண்ணெய், தைல புல் எண்ணெய் மற்றும் கற்பூரம் போன்றவைகளும் களைகளை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகிறது. 
  • பல்வேறு வகையான களைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் மத்தியில் மாட்டு கோமியம், கல் உப்பு கரைசல், சோப்பு கரைசல், எலுமிச்சை சாறு என பல்வேறு இயற்கை வழி பொருட்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றை நாம் எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இதில் உள்ள சவால்கள். 
  • இதைத் தாண்டி இயற்கை வழி களைக்கொல்லிகள் உதாரணத்திற்கு Gluten meal எனப்படும் ஒரு வகை பசை போன்ற திரவத்தை களைகள் முளைப்பதற்கு முன்பதாக பயன்படுத்துவதால் நல்ல பயன் அளிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...


ஞாயிறு, 2 ஜூன், 2024

மர பயிர் சாகுபடியில் நாம் கவனிக்கப்பட வேண்டியவை

முன்னுரை:

  • நம் நாட்டில் உற்பத்தியாகும் மரச்சாமான்களுக்கு தேவையான மரங்கள் சுமார் 50% மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத மரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 
  • ஏன் இதை கூறுகிறேன் என்றால் இந்தியாவில் போதுமான அளவு மர சாகுபடி இருந்தும் அதில் உற்பத்தி செய்யப்படும் கட்டைகள் போதுமான சுற்றளவு மற்றும் வைரம் பாய்ந்த கட்டையாக இருப்பதில்லை. 
  • இதனால் சந்தை மதிப்பை பெற இயல முடியாமல் போகிறது. இதற்குப் பிரதான காரணம் சாகுபடியில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதாகவே கருதப்படுகிறது.

  • கவனிக்கப்பட வேண்டியவை: 

  • குறைந்தபட்சம் இரண்டு அடி உயரம் முதல் ஆறு அடி உயரம் வரை உள்ள மரக்கன்றுகள் அல்லது மர நாற்றுகளை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் கன்றுகளின் தண்டுப் பகுதி .தடிமனாகவும், செழிப்பானதாகவும், வளைவு நெளிவு இல்லாமலும் இருக்க வேண்டும். சிறிய வளர்ப்பு பைகளில் பெரிய செடியாக இருப்பின் சற்று கவனமாக தேர்வு செய்யவும் இது போன்ற கன்றுகள் நிலத்தில் வைத்தால் மிக எளிதில் இறந்து விடுவோம். ஏனெனில் இதன் வேர்கள் வளர போதுமான இடம் இல்லாமல் வளைந்து நெளிந்து வளர்ப்பு பையில் இருப்பதால் திடீரென நிலத்தில் நடும் போது இதனால் வேகமாக வளர இயலாது.
  • மரங்கள் வேகமாகவும் தடிமனாகவும் வளர வேர் வளர்ச்சி மிகவும் இன்றி அமையாததாகும். ஆரம்ப காலத்தில் நல்ல வேர் வளர்ச்சி பெற தேர்வு செய்யப்படும் நிலம் 5 முதல் 6 அடி ஆழமானதாகவும் மண்கள் பொலபொலப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிலத்தை பயிர்களுக்கு ஏற்றவாறு தயார் செய்ய வேண்டியது மிக முக்கியம்.
  • தேர்வு செய்யப்பட்ட நிலத்தை சமன்படுத்தி, சட்டி கலப்பை பயன்படுத்தி ஒரு முறை உழவு செய்துவிட்டு பின்னர் இரண்டு முறை 5 கலப்பையை பயன்படுத்தி உழவு செய்து நிலத்தை தயார் செய்ய வேண்டும். வழக்கத்துக்கு மாறாக வரப்புகளை உயர படுத்துவது மிக மிக முக்கியம். அப்போதுதான் கிடைக்கப் பெறக்கூடிய மழையை சேமித்து பயிர்களுக்கு பயனுள்ளதாக இயலும் மேலும் நிலத்தடி நீரையும் மேம்படுத்தலாம்.
  • மர பயிர்களுக்கு ஏற்றவாறு நடவு குழியை தயார் செய்து அதில் மேற்புற மண் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கலந்து அடி உரமாக இட்டு நடவு செய்ய வேண்டும். மண்புழு உரம், VAM, டிரைக்கோடெர்மா சூடோமோனாஸ், மெட்டாரைஸியம், Humic குருணை முதலியவற்றை இடுவதால் வேர் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
  • தேர்வு செய்யப்பட்ட மரக்கன்றுகளை குழியின் நடுப்பகுதியில் வைத்து கழுத்துப்பகுதி மண்ணிற்கு கிடைமட்டமாக இருக்கும்படி நடவு செய்ய வேண்டும். ஆரம்ப காலத்தில் இதற்கு முட்டுக் கொடுத்தல் அவசியம். நீர் இருப்பதின் அடிப்படையில் சொட்டுநீர் பாசனம் அல்லது வாய்க்கால் பாசனம் வழியாக நீர் விடலாம். 
  • மரக்கன்றுகள் வளர ஆரம்பித்த பிறகு பக்க கிளைகள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். அதாவது பக்க கிளைகள் தோன்றி விரல் தடிமன் வருவதற்கும் முன்னதாக கையால் அகற்றலாம். மரங்கள் நன்கு வளர்ந்த பிறகு மரக்கிளை நீக்கியை பயன்படுத்தி பக்கவாட்டுக் கிளைகளை அகற்ற வேண்டும். 
  • தண்ணீர் விடுதல், உரம் இடுதல், களை மேலாண்மை, நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு முதலியவற்றை தேவையின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்.
  • எந்த ஒரு மர பயிர் வளர்ப்பிலும் நம் இலக்கு வைரம் பாய்ந்த கட்டைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதாகும். மர பயிரின் ஆயுட்காலத்தை பொறுத்து 10 முதல் 18 வருடங்களுக்கு நன்றாக பராமரிக்க வேண்டும் குறிப்பாக போதுமான நீர் மற்றும் ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு மரங்களுக்கு செயற்கையாக உரங்கள் மற்றும் தண்ணீர் கொடுக்காமல் நிறுத்த வேண்டும், இதனால் பயிர்கள் இயற்கையாக கிடைக்கக்கூடிய தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்தை எடுத்துக் கொண்டு கடினமாக வளரும்.
  • இதனால் தண்டுப் பகுதியில் உள்ள திசுக்கள் கடினமாக மாறி வைரம் பாய்ந்த கட்டைகளை உற்பத்தி செய்ய உதவி வழிவகை செய்யும். வைரம் பாய்ந்த கட்டைகள் அல்லது மரங்கள் தான் அதன் சந்தை மதிப்பை நிர்ணயம் செய்கிறது.
  • இதைத் தவிர தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஒவ்வொரு மரப்பயிருக்கும் துல்லிய பண்ணைய முறையில் சாகுபடி செய்வதற்கான தொழில் நுட்பங்களை வகுத்துள்ளார்கள் அதனையும் பின்பற்றி தரமான வைரம் பாய்ந்த மரக்கட்டைகளை உற்பத்தி செய்து லாபம் பெற அறிவுறுத்தப்படுகிறது. 

இது போன்ற தகவல் மற்றும் விவசாயம் சார்ந்த சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். 

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


புதன், 29 மே, 2024

நெல் வயலில் பாசிகள் வளர்வதற்கான காரணங்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்

முன்னுரை:

  • நிலத்தில் தொடர்ச்சியான நீர்த்தேக்கம் அல்லது ஈரப்பதம் இருந்தால் அந்த இடத்தில் பாசிகள் வளர்வதை நாம் காண இயலும். 
  • பாசிகளின் வளர்ச்சி தற்காலிகமானதாக இருந்தாலும் இதனால் நன்மைகளும் உண்டு பல தீமைகளும் ஏற்படுகிறது.

  • நன்மை செய்யக்கூடிய நீலப்பச்சை பாசி, வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து கொடுக்கிறது. இது மட்டும் இன்றி பயிர் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்களை உற்பத்தி செய்து தருவதுடன் மண்ணில் இருக்கும் மணிச்சத்தை செடிகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுக்கிறது. 
  • இந்த நன்மை செய்யக்கூடிய நீலப்பச்சை பாசியினை தொடர்ச்சியாக பயன்படுத்தும் பொழுது 25 சதவீதம் வரை ரசாயன உர தேவையை குறைக்கலாம்.
  • பொதுவாக நீரில் குறிப்பாக நிலத்தடி நீரில் பாசிகள் காணப்படும் இது இயற்கையாகவே சிதைந்து விடுவதால் இதன் வளர்ச்சி நம் காண்பதில்லை. 
  • இவ்வாறு இயற்கையாக நடக்கும் நிகழ்வில் மாற்றம் ஏற்பட்டு நாம் விடும் அதிகபட்ச உரத்தினால் பாசிகள் அபரிமிதமாக வளர்ந்து நெல் பயிரின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை பாதிக்கிறது.

நெல் வயலில் பாசிகள் வளர்வதற்கான காரணிகள்: 

  • தொடர்ச்சியாக நெல் பயில் நீர் தேங்கி இருப்பதால் இது பாசிகள் வளர்ச்சி ஊக்கப்படுத்துகிறது. 
  • இதனால் நாஸ்டாக் மற்றும் சைனோ பாக்டீரியா அதிகளவு பெருக்கமடைந்து நெல் வயலில் காணப்படும் நீரில் பச்சை நிற பாய் போன்று சூழ்ந்து விடுகிறது. 
  • அதிக அளவு அடி உரம் மற்றும் நீர் மேல் இடும் ரசாயன உரங்களினால் இதன் வளர்ச்சி அபரிமிதமாக தோன்றி பயிர் வளர்ச்சியை தடை செய்கிறது.

பாசி வளர்ச்சியால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:

  • நாற்றங்காலில் இருந்து நெல் நாற்றுகளை பிடுங்கி நடுவதால் அதற்கு ஏற்படும் அழுத்தத்தினால் ஆரம்ப நிலையில் நல்ல வேர் பிடித்து செடிகள் பச்சை கட்ட குறைந்தபட்ச நாட்களை எடுத்துக் கொள்வோம்.
  • இந்த குறைந்தபட்ச நாட்களுக்கு முன்னதாக நாம் அளவுக்கு அதிகமாக ஈடும் ரசாயன உரங்களை பயன்படுத்தி பாசி வேகமாக வளர்ந்து விடுகிறது. 
  • இதனால் பயிர்களுக்கு ஊட்டச்சத்து, சூரிய ஒளி மற்றும் வளர்வதற்கான இடவசதி ஆகியவற்றில் குறைபாடு ஏற்படுவதால் பயிர்களால் வேகமாக வளர முடியாமல் குன்றி காணப்படும்.
  • இதனால் மற்ற பூச்சி மற்றும் பூஞ்சான நோய்களும் நெல் பயிரை எளிதில் தாக்குகிறது.
  • போதுமான வேர் வளர்ச்சி இல்லாத நெல் பயிர்கள் பாசி வளர்ச்சியினால் சரியாக சுவாசிக்க மற்றும் உணவு தயாரிக்க முடியாமல் எளிதில் தொய்வு அடைந்து இறந்து விடுகிறது. கிராமப்புறங்களில் இதனை பயிர் கரைகிறது என்பார்கள். 
  • பாசிகள் நெல் வயலுக்கு இடம் உரங்களை 80 சதவீதம் வரை எடுத்துக் கொள்வதால் பயிர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடும், இதன் அதிகமான வளர்ச்சியினால் மண்ணின் கார அமில தன்மை அதிகரித்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகிறது. 
  • பாசியினால் வெளியிடப்படும் ரசாயன திரவத்தால் மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்களும் தற்காலிகமாக செயல்படாமல் போகிறது. 
  • நெல் வயலில் மீன் வளர்க்கும் பொழுது இது மீன் வளர்ச்சியையும் பாதிக்கிறது. 
  • அதிகம் பாசி படர்ந்த நெல் வயலில் கை களை எடுக்கும் பொழுது இது மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

நெல் பயலில் பாசியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • கோடை பருவத்தில் ஆழமான உழவு செய்வதால் பாசிகளின் உடலின் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு இறந்துவிடும். 
  • நெல் பயிருக்கு மாற்றாக வேறு ஏதேனும் பயிர் செய்யலாம்.
  • அல்லது ஒரு முறை நேரடி நெல் விதைப்பிலும் மற்றொரு முறை நஞ்சை தயார் செய்தும் நெல் பயிரிடலாம்.
  • நெல் வயலை மேடு பள்ளம் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதால் குறிப்பிட்ட இடத்தில் நீர் தேங்கி பாசி வளர்வதை தவிர்க்கலாம்.
  • பயிர்களுக்கு காய்ச்சலும் பாய்ச்சலமாக தண்ணீர் விட வேண்டும். 
  • உப்பு கலந்த நீர் மற்றும் நிலத்தடி நீர் பயன்படுத்தாமல் இருக்கலாம்.
  • மழை பொழிவு காலங்களில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
  • கை களை எடுப்பதை நிறுத்திவிட்டு கோனோ வீடர் பயன்படுத்தி களையை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.
  • இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் படிப்படியாக நெல் பயலில் பாசி வளர்வதை தவிர்க்கலாம். 
  • ரசாயன உரங்கள் பயன்படுத்தும் போது மிகவும் கவனத்துடன் தேவையான அளவு தேவையான நேரத்தில் மட்டும் கொடுக்க வேண்டும்.
  • பயிர்களுக்கு இழை வழியாக ஊட்டச்சத்து தெளிப்பதில் முக்கியத்துவம் கொடுப்பதினால் பாசி வளர்ச்சியை தடை செய்யலாம்.
  • பாசிகளின் வளர்ச்சியை பொறுத்து ஏக்கருக்கு 1-2 கிலோ வரை காப்பர் சல்பேட் இட வேண்டும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

பயிர்கள் வறட்சியை தாங்கி வளர உதவும் பிபிஎப்எம்(PPFMs) திரவ நுண்ணுயிர் உரம்

பிபிஎப்எம் (PPFMs) என்றால் என்ன...?

  • பிபிஎப்எம் என்பதை ஆங்கிலத்தில் Pink Pigmented Facultative Methylotrophs என்பார்கள்.
  • தமிழில் கூற வேண்டுமென்றால் இளம் சிகப்பு நிற மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியாக்களை கொண்ட நுண்ணுயிர் திரவம் என்று கூறுவார்கள்.
  • நுண்ணுயிர்கள் என்பது கண்ணுக்கு புலப்படாத மிகச் சிறிய உயிரினங்கள். உதாரணத்திற்கு பூஞ்சானங்கள், பாக்டீரியாக்கள், நுண் பாசிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் இதில் அடங்கும். இதில் நன்மை செய்யும் மற்றும் தீங்கு செய்யும் ஆகிய இரண்டும் அடங்கும்.
  • பல்வேறு நன்மை செய்யும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் பயிர்களின் வேர் பகுதியில் பயிர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து பயிர்களுக்கு நன்மை பயக்கும் என கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகை நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை வேர் மண்டல நுண்ணுயிர்கள் என்கிறோம் அதனை ஆங்கிலத்தில் Rhizosphere என்பார்கள்.
  • அதேபோன்று சில வகை பாக்டீரியாக்கள் பயிர்களின் இலைப் பகுதிகளில் பயிர்களின் உதவியால் வாழும் தன்மை படைத்தது பயிர்களின் அந்த இலை பகுதியை ஆங்கிலத்தில் Phyllosphere பகுதி என்று கூறுவார்கள்.
  • இந்த பாக்டீரியாக்கள் இளம் சிகப்பு நிறத்தில் இருப்பதால் இதற்கு Pink Pigmented என்ற பெயரையும் கூடுதலாக அழைக்கிறோம்.

இதன் பணிகள்:

  • பயிர்களின் இலைப் பகுதியில் வாழும் இந்த பாக்டீரியாக்கள் பயிர்களின் வளர்ச்சியின் போது வெளியேறும் கரிம வாயுக்கள், மெத்தனால் மற்றும் ஆல்கஹாலை எடுத்துக் கொண்டு உயிர் வாழ்கிறது. 
  • இது கார்பன் ஊட்டச்சத்துக்களை நுண்ணுயிரிகளுக்கு கொடுக்கிறது. எனவே தான் இந்த வகை பாக்டீரியாக்களை நாம் மெத்தைலோட்ரோபிக் (Methylotropic) பாக்டீரியா என்று கூறுகிறோம்.
  • பதிலுக்கு இந்த வகை பாக்டீரியாக்கள் பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகளான ஆக்ஸிஜன்(Auxin), ஜிப்ரலின்(Gibberellin) சைட்டோகைகின்(Cytokinin) ஆகியவற்றை கொடுக்கிறது.

பயன்கள்:

  • இதை விதைகளின் முளைப்பு திறன் மற்றும் ஒருமித்த தருணத்தில் விதைகள் முளைப்பதை மேம்படுத்துகிறது.
  • பயிர்களின் வேர், தண்டு மற்றும் இலை வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
  • பயிர்கள் அதிக வறட்சி, அதிக வெப்பநிலை, மிகவும் குறைந்த வெப்பநிலை போன்ற பல்வேறு அசாதாரண சூழ்நிலைகளை தாங்கி வளர உதவி புரிகிறது.

  • பூ பிடித்தலை அதிகப்படுத்தி பூ உதிர்வை குறைக்கிறது. விளை பொருட்களின் தரம், எடை, சுவை, நிறம் முதலியவற்றை மேம்படுத்துகிறது.
  • பல்வேறு நோய் மற்றும் பூச்சித் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் பெறுகிறது.
  • ஒட்டுமொத்தமாக பயிர்களின் மகசூலை 10 - 20% அதிகரிக்கிறது.

பயன்படுத்தும் விதம்:

  • விதை/நாற்று நேர்த்தி - தேவையான அளவு
  • இலை வழியாக தெளித்தல் - ஏக்கருக்கு 150 முதல் 200 மில்லி
  • நீர் வழியாக கொடுத்தல் - ஏக்கருக்கு 500 மில்லி
  • பயிர்களின் தன்மை மற்றும் வாழ்நாள் பொறுத்து 40 முதல் 50 நாட்கள் இடைவெளியில் பயன்படுத்தலாம்.

இது போன்ற பயனுள்ள தகவல் மற்றும் பயிர் சாகுபடி தொடர்பான சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


வியாழன், 4 ஏப்ரல், 2024

நெல் சாகுபடி - கால அட்டவணை (சராசரியாக 120 நாட்கள்)

இரகம் தேர்வு செய்தல்

•தங்களது பகுதிகளில் பிரதானமாக சாகுபடி செய்யப்படும் இரகம்

இதனால் சாகுபடி தொழில் நுட்பங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். நோய் மற்றும் பூச்சி தாக்குதலின் தீவிரம் குறைவாக காணப்படும்.

விளை பொருட்களை எளிதில் விற்பனை செய்ய இயலும் மற்றும் நல்ல விலை கிடைக்கும்.

விதை தேர்வு

இரகத்தினை பொறுத்து மாறுப்படும்.

உதராணத்திற்கு - மேம்படுத்தப்பட்ட இரகம் வீரிய ஒட்டு இரகம் (10-15 கிலோ/ஏக்கருக்கு)நடுத்தர மற்றும் அதிக வாழ்நாள் இரகம் (30-40 கிலோ) பாரம்பரிய இரகம் (50-60 கிலோ)

தேர்வு செய்யப்பட்ட இரகங்களில் கிடைக்கப் பெறும்  Foundation Seeds எனப்படும் ஆதார விதை 1 அல்லது ஆதார விதை 2 பயன்படுத்துவது சிறந்தது.

ஏனெனில் இதில் அதிக முளைப்பு திறன், ஒருமித்த பயிர் வளர்ச்சி, இனத்தூய்மை மற்றும் பல நன்மைகள் உள்ளது. இதன் விதைகள் வெள்ளை அட்டையால் அங்கீகாரம் செய்திருக்கும்.

ஆதார விதைகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில்   சான்றளிக்கப்பட்ட விதைகளை (Certified seeds) பயன்படுத்தலாம் இது நீல நிற அட்டையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.

விதை நேர்த்தி

•பெறப்பட்ட விதைகளை மிதமான காலை/மாலை வெப்பநிலையில் சுமார் 10-15 நிமிடம் உலர வைத்து பயன்படுத்த வேண்டும்.

இதனை தேவையான அளவு நீரில் கொட்டி மிதக்கும் தரமற்ற விதைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மீதமுள்ள தரமான விதைகளை சாக்கு/கோணி பையில் கொட்டி சுமார் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு 6 முதல் 8 மணி நேரம் வெளிச்சம் இல்லாத பகுதிகளில் வைத்திருக்கும் போது முளைப்பு திறன் காணப்படும்.

விதை நேர்த்தி செய்ய விரும்பினால் நெல்லின் அளவை பொறுத்து தேவையான அளவு அரிசி கஞ்சியுடன் ஏக்கருக்கு தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் சூடோமோனஸ் ஆகியவற்றை அரிசி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து சுமார் 15-30 நிமிடம் வரை உலர வைத்து பின்பு விதைக்கலாம்.

மேற்கண்ட முறையை நெல் விதைகளை முளைப்பு விடுவதற்கு முன்பும் பின்பற்றலாம் அவ்வாறு இருப்பின் நேர்த்தி செய்த விதைகளை சுமார் 8-12 மணி நேரம் உலர்த்தி விதைக்கலாம்.

இராசாயன பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தியும் விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு 1 கிலோ நெல் விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் என்ற வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்றாங்கால் பண்ணை அமைத்தல்

•நல்ல மண் வசதி மற்றும் நீர் பிடிப்பு திறனுடைய இடத்தை தேர்வு செய்து நாற்றங்கால் பண்ணை அமைக்கலாம்.

1 ஏக்கர் சாகுபடிக்கு சுமார் 7-8 சென்ட் நிலப்பரப்பு, நாற்றங்கால் அமைக்க தேவை.

நாற்றங்கால் பகுதிக்கு தேவையான அடி உரங்களான தொழு உரம் 200-250 கிலோ, 5-10 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 5-7 கிலோ DAP, 1 கிலோ கடல் பாசி/ஹியூமிக் குருணை மற்றும் 300 கிராம் VAM ஆகியவற்றை இட்டு தேவையான அளவு நீர் பாய்ச்சி நாற்றங்காலை தயார் செய்ய வேண்டும்.

இதில் தேவையான அளவு நீளம் மற்றும் 1.5 மீட்டர் அகலமுடைய சேற்று மேட்டு பாத்தி (நிலத்திலிருந்து சுமார் 1inch உயரத்திற்கு) அமைக்க வேண்டும்.

இதில் தயார் செய்து முளைப்பு வந்திருக்கும் விதைகளை பரவலாக விதைக்க வேண்டும். இதில்; 5 மில்லி மீட்டர் உயரத்திற்கு நீர் பாய்ச்சி அதனை காய்ந்த வைக்கோல் அல்லது துணிகள் பயன்படுத்தி மூடி வைப்பதால் நல்ல முளைப்பு திறன் காணப்படும் மற்றும் வெயில் தாக்கத்தினால் நாற்றுகள் கருகாது.

நாற்றுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப படிப்படியாக நீரின் அளவை அதிகப்படுத்தவும்.

நோய் மற்றும் பூச்சி தாக்குதல்

 

வேர்களில் புழு அல்லது பேன்: வளர்ச்சியின்மை, திட்டு திட்டாக மஞ்சள் நிறமாக மாறுதல், நாற்றுகள் இறத்தல் - 1 கிலோ Fibronil குருணை இடவும்.

வேர் அழுகல் இலைப்புள்ளி /குலைநோய்: சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா ஆகியவற்றை இலை வழியாகவும் நீர் மூலமாகவும் கொடுக்கலாம்.

புழுக்கள் மற்றும் சாறுண்ணி பூச்சிகள்: வேப்ப எண்ணெய்/வேப்பங்கொட்டைவிதை கரைசல்/பிவேரியா/ வெர்டிசீலியம் தெளிக்கலாம்.

களை கட்டுப்பாடு:

விதைப்புக்கு முன் அல்லது விதைத்த 3 நாட்களுக்குள் களை கொல்லி பயன்படுத்தலாம்.

முடிந்த வரை இராசாயணக் களைகொல்லி பயன்படுத்தாமல் அவ்வப்பொழுது நாற்றுகளில் காணப்படும் களைகளை கையால் அகற்றவும்.

நடவு வயல் தயார் செய்தல்

•நிலத்தை 2 முறை எதிர்எதிர் திசையில் உழவு செய்யவும்.

பசுந்தாள் உரம் மடக்கி உழுதிருந்தால் தொழு உரம் அளவை பாதியாக குறைத்து கொள்ளலாம்.

அடி உரம்: மக்கிய தொழு உரம் 4 டன்/ஏக்கர் அல்லது 2 டன் மண்புழு உரம்/கம்போஸ்ட் உடன் தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம்பாஸ்போபாக்டீரியா மற்றும் 4 கிலோ VAM ஆகியவற்றை பயன்படுத்தி சுமார் 15 நாட்கள் ஊட்டமேற்றி இடவும்.

தேவையின் அடிப்படையில் இதனுடன் உயிர் உரம்/பூச்சி/பூஞ்சான கொல்லியை பயன்படுத்தலாம்.

நிலத்திற்கு நீர்பாய்ச்சி சேர் உழவு செய்து மட்டம் செய்ய வேண்டும்.

•40-50 கிலோ தழைச்சத்து, 110-130 கிலோ மணிச்சத்து, 20-25 கிலோ சாம்பல் சத்து, நுண்ணூட்ட கலவை 5-10 கிலோஜிங்க் சல்பேட் 10 கிலோ ஆகியவற்றை அடி உரமாக இட வேண்டும்.

தழைச்சத்துமணிச்சத்து, சாம்பல் சத்து உரங்களை 18:46:00 (DAP), 20:20:00:13 (Factomphos), Rock Phosphate அல்லது ஏதேனும் கலப்பு உரம் பயன்படுத்தி கொடுக்க வேண்டும்.

இதில் எந்தெந்த உரங்களை எவ்வளவு இடலாம் என்று தங்களது பகுதிகளில் கிடைக்கப்பெறும் உரத்தினை பொறுத்து தேர்வு செய்யவும்.

0 நாள்

ரகத்தினை பொறுத்து 18-35 நாட்கள் வயதுடைய நாற்றுகளை (சரியான தருணம் 4 இலை உடைய பயிர்கள்) பிடிங்கி தயார் நிலையில் வைக்கவும்.

1-ம் நாள்

ரகத்தினை பொறுத்து 3-8 பயிர்கள் நடவு வயலில் சுமார் 1.5 inch ஆழத்தில் நடவு செய்யவும். இரண்டு வரிசைக்கு இடைப்பட்ட இடைவெளி நில அமைப்பு, தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் ரகத்தை பொறுத்து 15-20 cm இடைவெளி இடவும்.

3-5 ம் நாள்

•களைகள் முளைப்பதற்கு முன்னால் தெளிக்க கூடிய களை கொல்லிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும்

1.Pertilachlor 37% - 600மி /ஏக்கருக்கு

2.Butachlor       - 500 கிராம் /ஏக்கருக்கு

3. Pertilachlor     - 600மி /ஏக்கருக்கு +

                  Metsulfuron methyl + Chlorimuron ethyl    8 கிராம்/ஏக்கருக்கு

4.Bensulfuron Methly +Pertilachlor 4 கிலோ/ஏக்கருக்கு

மேற்கண்ட களை கொல்லிகள் தவிர பல்வேறு வகையான மருந்துகள் கிடைக்கப்பெறுகிறது. பயன்படுத்து முன் நமது வயலின் தன்மைதட்பவெப்ப சூழ்நிலை மற்றும் களைகளை பொறுத்து தேர்வு செய்து பயன்படுத்தவும்.

பயன்படுத்தும் முறையை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

7-8 ம் நாள்

நடவு செய்யப்பட்ட வயலில்  இறந்த செடிகள்/விடுப்பட்ட இடம் /இதர சேதங்களால் ஏற்பட்ட பயிர் இழப்பீட்டை  பூர்த்தி செய்ய இடை நடவு மேற்கொள்ளவும்.

15-20 ம் நாள்

மேலே கூறிய வழிமுறைகளை பின்பற்றும் போது செடிகளில் போதுமான தூர்கள் கண்டிப்பாக காணப்படும்.

தவறும் பட்சத்தில் நிலத்தை காயவிட்டு 10 லி தண்ணீருக்கு கீழ்க்கண்ட மருந்துகளை கலந்து தெளிக்க வேண்டும். (Profenophos/Quinalphos 25ml + jivagro/Paushak-25ml+ALL 19-30 gram)

20-25 ம் நாள் (தூர்கள் வெடிக்கும் தருணம்)

•களைகள் ஏதேனும் தென்பட்டால் கை களை எடுக்கலாம் அல்லது கோனோ வீடர் பயன்படுத்தி களைகளை அகற்றலாம்.

நடவு செய்த 3 முதல் 5 நாட்களில் களை கொல்லிகள் பயன்படுத்தவில்லை என்றால் கீழ்க்கண்ட களை கொல்லிகளை ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

1.Bispyribac sodium 100-150கிலோ/ஏக்கருக்கு

2.Florpyrauxifen benzyl+ Cyhalofop butyl500 மி/ஏக்கருக்கு

3.Triafamone + Ethoxysulfurol - 60-80கிராம்/ஏக்கருக்கு

30-35 ம் நாள்

25 கிலோ தழைச்சத்து, 15-25 கிலோ மணிச்சத்து மற்றும் 15-20 கிலோ சாம்பல் சத்து கொடுக்க வேண்டும்.

இத்தருணத்தில் குருத்து பூச்சி, இலை சுருட்டு புழுஆணைக் கொம்பன் மற்றும் தாள் பூச்சி அதிகம் தென்பட வாய்ப்புள்ளது.

இதனை கட்டுப்படுத்த Cartap hydrochloride /Fibronil /Flubendiamide /Chlorantraniliprole ஏதேனும் ஒன்றை தேவையான அளவு பயன்படுத்தவும்.

நோய்யை பொறுத்த வரை இலைப்புள்ளி> குலை நோய் மற்றும் கருகல் நோய் தென்பட வாய்ப்புள்ளது. Carbendazim/Azoxystrobin+Mancozeb/tricyclazole/Tebuconazole+Tricylostrobin நோயினை பொறுத்து ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

40-45 ம் நாள் (கருதுகள் தொண்டையில் இருக்கும் தருணம்)

குருத்து மற்றும் தாள் பூச்சிகளின் தாய் அந்து பூச்சிகள் அதிகம் வயலில் இருக்கும் தருணத்தில் விளக்கு பொறி மற்றும் மஞ்சள் ஒட்டு அட்டைகளை  பயன்படுத்தலாம். அதிகமாக காணப்பட்டால் ஏக்கருக்கு 4 கிலோ Fibronil அல்லது Cartap hydrochloride SG குருணை இடவும்.

45-50 ம் நாள்

•பயிர்கள் போதுமான அளவு வளர்ந்து பூக்கள் வரும் தருணத்தில் வளர்ச்சி ஊக்கி மற்றும் தேவையான நோய்/பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால் ஒருமித்த பூ பிடித்தல் மற்றும் கதிர்கள் வருவதை காணலாம்.

55-65 ம் நாள் (மணிகள் பால் பிடிக்கும் தருணம்)

25 கிலோ தழைச்சத்து> 10-20 கிலோ சாம்பல் சத்து மற்றும் தேவையான அளவு சல்பேட்

இத்தருணத்தில் கீழ்க்கண்ட நோய்கள் மற்றும் பூச்சிகள் காணப்படும்.

1. தண்டு துளைப்பான் – Cartap hydrochloride -150-250 கிராம்/ஏக்கர்

2. புகையான்            - Pymetrazine 80-100 கிராம்/ஏக்கர்

3. கதிர் நாவாய் பூச்சி     - Malathion 300-400 மிலி/ஏக்கர்

4. பாக்டீரியா இலைக்கருகல் – Stroptomycin -10 கிராம்/ஏக்கர்

5. மஞ்சள் கரிப்பூட்டை     - Propiconozole 100 மிலி/ஏக்கர்

80-90  ம் நாள்

செடிகளில் உள்ள கதிர்கள் முதிர்ச்சி அடையும் தருணம்.

75-85 ம் நாள்

பயிர் அறுவடை மற்றும் அறுவடை பின்சார் பணிகள்.



இது போன்ற தகவல் மற்றும் மேலும் விவரங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

Recent Posts

Popular Posts