google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்: நோய் மேலாண்மை

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

நோய் மேலாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோய் மேலாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 டிசம்பர், 2024

மா பயிரில் இலை உருக்குலைவு (Malformation) நோய் மேலாண்மை

 இலை உருக்குலைவு (Malformation) நோய்:

  • மா பயிர்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் காணப்படக்கூடிய ஒரு பிரதான நோயாக இந்த உருக்குலைவு நோய் நிகழ்கிறது.
  • பயிர்கள் நாற்றுகளில் அல்லது நிலத்தில் நட்ட ஆரம்ப காலகட்டத்தில் இந்த நோய் தொற்று ஏற்பட்டால் இதனை இலை உருக்குலைவு நோய் என்பார்கள். இதனால் பயிர் வளர்ச்சி முற்றிலும் தடைப்பட்டு பயிர்கள் இறக்க நேரிடலாம்.
  • பூத்தலின் போது இருந்ததில் ஏற்படும் தருணத்தில் இதழை பூக்கள் உருக்குலைவு நோய் என்பவர்கள் இதனால் மகசூல் சுமார் 50 முதல் 80 சதவீதம் வரை கூட இழப்பீடு ஏற்படலாம்.
  • இந்த நோய் முதன் முதலாக இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்தியாவில் காணப்படும் ஒரு பொதுவான காணப்பட்டாலும் இதனை கட்டுப்படுத்த பெரிய அளவில் முயற்சிகள் எடுப்பதில்லை.

நோய் தொற்றுக்கான காரணங்கள்:

  • இது ஒரு பூஞ்சை தொற்றால் ஏற்படும் நோய் என்று கருதப்பட்டாலும் பல்வேறு இதர காரணிகளும் இந்த உருக்குலைவு நோய் தாக்குதலுக்கு சாதகமாக திகழ்கிறது.
  • மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை குறிப்பாக குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக மண் ஈரப்பதம், நிலையற்ற மழை பொழிவு, ஆரம்ப கால கட்டத்தில் மொட்டுகளை தாக்கும்  பேன், பாதிப்படைந்த பயிர்களில் இருந்து ஒட்டு கட்டுதல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பயிர்களில் உற்பத்தியாகும் வளர்ச்சி ஊக்குகளில் நிலையற்ற தன்மை போன்ற பல்வேறு காரணங்களும் இந்த நோய் உருவாவதற்கும் பரவுவதற்கும் உதவி புரிகிறது. 

இலை உருக்குலைவின் அறிஅறிகுறிகள்:


1.இளம் கன்றுகளில் தளிர்களின் வளர்ச்சி குன்றி செதில் போன்ற அமைப்புடைய இலைகளை குருத்துப் பகுதியில் மிக நெருங்கிய அமைப்புடன் உருவாக்குகிறது.

2.இதனால் கன்றுகளின் வளர்ச்சி தடைபட்டு நாளடைவில் இறக்க நேரிடலாம்.

3.மிகக் குறைந்த இடைவெளியில் அதிக தளிர்கள் ஒருங்கிணைந்து காணப்படுவதால் இதனை சில நேரங்களில் தலைக்கொத்து நோய் எனவும் கூறுவார்கள்.

4.சில நேரங்களில் நுனிப்பகுதி தடித்து காணப்படலாம். 

5.இளம் கன்றுகளில்  ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உருக்குலை அறிகுறி மீண்டும் காணப்படலாம். 

பூ உருக்குலைவின் அறிகுறிகள்:

1.பூக்கள் மிக நெருக்கமாகவும் சற்று பெரிதாகவும் பூங்கொத்துகளில்  காணப்படும்.

2.நாளடைவில் பூங்கொத்து கருப்பு நிறமாக மாறி உதிரும். 

3.இதனால் பூ உதிர்வு அல்லது பிஞ்சுகள் அதிக அளவில் உதிரும். இதன் காரணமாக சுமார் 50 முதல் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு காணப்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஆரம்ப காலத்தில் அதாவது நாற்றுகள் அல்லது நிலத்தில் நடவு செய்த சில மாதங்களில் அறிகுறிகள் தென்பட்டால் பாதித்த செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். 
  • இந்தச் செடிகளை கவாத்து செய்து மீள முயற்சிப்பது தவறான அணுகுமுறை. வளர்ந்த மரத்தில் இலை உருக்குலைவு நோய் தென்பட்டால் பாதித்த பகுதியை மட்டும் கவாத்து செய்து பராமரிக்கலாம். 
  • நோயால் பாதிக்கப்பட்ட மரங்களின் வாஸ்குலார் திசுக்களை இந்த பூஞ்சைகள் சென்றடைவதால் ஊடுருவிப் பாயக்கூடிய மருந்துகளை தெளிக்க வேண்டும். 
  • பாதிக்கப்பட்ட இலை அல்லது பூங் கொத்துகளை அகற்றிவிட்டு இயற்கை அல்லது இரசாயன மருந்துகளை தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மரத்திலிருந்து ஒட்டு கட்டுதலுக்கு வேர் அல்லது தாய் செடிகளை தேர்வு செய்யக்கூடாது.
  • வெளியில் இருந்து வேர் செடிகளை வாங்கும் பொழுது நேரடியாக பண்ணையை ஆய்வு செய்து தரமான கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் பூக்கள் நன்கு பூக்க ஏதுவாக NAA 20ppm தெளிக்கலாம். முன்னெச்சரிக்கைக்காக இயற்கை அல்லது இரசாயன தெளிப்புகளும் மேற்கொள்ளலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

செவ்வாய், 10 டிசம்பர், 2024

பாக்கு சாகுபடியில் வேர்/அடித்தண்டு அழுகல் நோய் மேலாண்மை

  • பாக்கு சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் முதலாவதாக திகழ்வது பழ அழுகல் நோய் அதனை தொடர்ந்து இந்த அடித்தண்டு அல்லது வேர் அழுகல் நோய் திகழ்கிறது. 
  • இந்த நோய் முதன்முதலாக பாக்கு அதிகம் சாகுபடி செய்யப்படும் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் பகுதியில் தான் கண்டறியப்பட்டது. பின்னர் பிற மாநிலங்களிலும் இந்த நோய் தாக்குதல் காணப்பட்டது. இதன் தாக்குதலால் சராசரியாக ஆண்டிற்கு 8 சதவீதம் பாக்கு மரங்கள் இறந்து விடுவதாகவும் தாக்குதலின் தீவிரத்தைப் பொறுத்து 25-30 சதவீதம் மரங்களைக் கூட இழக்க நேரிடும்.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 


                   

  • நோய் தாக்குதலை ஏற்படுத்தும் பூஞ்சைகள் வேர்ப்பகுதியை தாக்கி அதனை சிதைத்து பயிர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து மற்றும் தண்ணீரை தடை செய்வதால் அறிகுறிகள் காணப்படுகிறது. 
  • எனவே நோய் தாக்குதலின் அறிகுறிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்  ஒன்று தரைமட்டத்திற்கு மேல் மற்றும் தரைமட்டத்திற்கு கீழ் உள்ள அறிகுறிகள் என்ற முறையில்.
  • வேர் அமைப்பு பாதிக்கப்பட்டு நிறம் மாற்றத்துடன் காணப்படும், இதனால் வேர்கள் வளர்ச்சி இன்றி காய்ந்து அழுக நேரிடலாம் சில நேரங்களில் வேர்களில் துர்நாற்றம் காணப்படும்.
  • மரத்தின் அடி இலை பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் முறிந்து தொங்கும்.
  • நாளடைவில் இந்த அறிகுறி அடுத்தடுத்த இலைகளில் காணப்படலாம். 
  • மரத்தில் உள்ள பூக்கள் மற்றும் காய்கள் நோய் தாக்குதலின் ஆரம்ப கட்டத்திலேயே உதிர ஆரம்பித்து விடும் இதை கட்டுப்படுத்துவது சற்று கடினம். 
  • மரத்தின் தண்டுப் பகுதியில் பரவலாக வெளிர் பழுப்பு நிற மாற்றத்தை காண இயலும் இதிலிருந்து வெளியிடப்படும் திரவம் நாளடைவில் பிசின் போன்று காட்சியளிக்கும். 
  • தாக்குதல் தீவிரமடையும் பொழுது தொண்டை பகுதியில் ஒரு சில இலைகள் மட்டுமே காணப்படும் பலவீனமாக இருக்கக்கூடிய மரங்கள் முறிந்து கீழே விழுகலாம். 
  • தரைமட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் உயரம் வரை பூஞ்சைகளின் வளர்ச்சி காளான் போன்று காணப்படும்.
  • தண்டுப் பகுதியை பிளந்து பார்க்கும் பொழுது அதிலும் நிறமாற்றம் காணும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தென்னையில் பாக்கு ஊடு பயிராக சாகுபடி செய்யும் போது இந்த நோய் தாக்குதல் காணப்படுகிறதா என்பதை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வர வேண்டும். 
  • அடர் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • வளமான மண் அமைப்புடைய நல்ல வடிகால் வசதி உடைய நிலங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
  • இந்த பூஞ்சைகள் மண்ணில் நீண்ட நாட்கள் நிலைத்திருந்து தாக்குதலை ஏற்படுத்தும் மேலும் தாக்குதலின் அறிகுறிகள் பின் நாளில் மட்டுமே தெரிவதால் பயிர் சேதம் அடைவதை தவிர்ப்பது சற்று கடினம். 
  • பாதிப்படைந்த மரத்தை தனிமைப்படுத்த வேண்டும் அதாவது மரத்தைச் சுற்றி 30 சென்டிமீட்டர் அகலத்தில் ஆழமான குழி எடுத்து வைப்பதன் மூலம் பூஞ்சைகள் மற்ற மரங்களுக்கு பரவுவதை தவிர்க்கலாம்.
  • தீவிரமாக பாதித்த மரங்களை முழுமையாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • பயிர் கழிவுகள் எதுவும் இல்லாத அளவிற்கு நிலத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். 
  • தொடர்ச்சியாக உழவு செய்தல், ஊடு பயிர் செய்தல் மண்ணை கிளறுதல் போன்ற கிளறுதல் பூஞ்சைகள் எளிதில் பரவலாம் எனவே இதை தவிர்க்கவும்.
  • ஊட்டச்சத்து மேலாண்மை மிக முக்கியம் பரிந்துரை செய்யப்படும் உரங்களை இட்டு பராமரிக்க வேண்டும். 
  • பருவ மழைக்கு முன்னும் பின்னும் Trichoderma harzianum மற்றும் Pesudomonas florescence வேர்ப்பகுதிகளுக்கு கொடுப்பதால் பூஞ்சைகளின் வளர்ச்சியை தடை செய்ய உதவி புரியும்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை வேர்ப்பகுதியில் தகுந்த நேரத்தில் கொடுக்கலாம்.
    • Carbendazim + Mancozeb
    • Copper Oxychloride
    • Tridemorph
    • Hexaconazole
    • Root feeding- Propiconazole/ Hexaconazole

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வெள்ளி, 6 டிசம்பர், 2024

நெல் பயிரில் குலை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

நெல் பயிரில் குலை நோய் மேலாண்மை:

  • நெல் பயிரில் பல்வேறு நோய்கள் காணப்பட்டாலும் குலை நோய் என்பது சற்று சவாலானதாகவும் பெரும்பான்மையாக சாகுபடி செய்யப்படும் அனைத்து ரகங்களையும் தாக்கும் திறனுடையது. 
  • தற்போது நிலவும் சாதகமான சூழ்நிலை அதாவது குறைந்த வெப்பநிலை, அதிக காற்று ஈரப்பதம், மழை தருணம், மேக மூட்டமான சூழ்நிலை, சாதகமான பயிரின் வளர்ச்சி நிலை மற்றும் மோசமான மண் அமைப்பால் பெரும்பான்மையான இடங்களில் குலை நோய் காணப்படுகிறது. 
  • பூஞ்சை தொற்றால் ஏற்படும் இந்த நோயானது பயிரின் பெரும்பான்மையான பாகங்களை அதாவது இலை, தண்டு, இலை உறை, கழுத்து பகுதி, கதிர் என அனைத்து பாகங்களில் தொற்றை ஏற்படுத்தி அறிகுறிகளை தோற்றுவிக்கிறது. 
  • பயிரின் அனைத்து நிலைகளிலும் இந்த நோய் தாக்குதலை நாம் காண இயலும் எப்போதெல்லாம் சாதகமான சூழ்நிலைகள் அமைகிறதோ. 
  • ஆரம்பத்தில் சிறிய புள்ளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் இந்த பூஞ்சை நோய் நாளடைவில் ஒழுங்கற்ற அல்லது நீள் வட்ட வடிவில் புண்கள் போன்ற சற்று பெரிதான புள்ளியை உருவாக்குகிறது. 

  • கரும்புள்ளி நோய் மற்றும் குலை நோய் ஆகிய இரண்டின் அறிகுறிகளையும் சற்று உன்னிப்பாக கவனித்து நோயை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். 
  • குலை நோய் அறிகுறியானது புள்ளியின் மையப்பகுதி வெளிர் பழுப்பு நிறத்திலும் அதன் ஓரங்கள் அடர் பழுப்பு நிறத்திலும் காணப்படும். வேகமாக பரவும் தன்மையுடைய இந்த  இலைப்புள்ளிகள் பெரிதாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து கருகல் அறிகுறி போன்ற காட்சியும் சில நேரங்களில் காண இயலும். 
  • நோய் தாக்குதலின் தீவிரம் அதிகமாகும் போது இலைகள், இலை உறைகள் சில நேரங்களில் தண்டு பகுதி காய்ந்து சருகு போன்று மாறும் காட்சியை காண இயலும்.
  • மிக எளிதாக காற்று மூலமாகவும் பண்ணைப் பணிகள் மூலமாக அடுத்தடுத்த பயிர்களுக்கு பரவும் தன்மை உடையது அதற்கேற்றவாறு நாம் செயல்பட வேண்டும். 
  • நிலம் அதிகளவு சேற்றுடன் இருக்கும் பொழுது இந்த நோய் தாக்குதல் தண்டு மற்றும் அதன் உறை பகுதியில் காணப்படுவதால் பாதிக்கப்பட்ட இடம் நோய்த்தொற்றுடன் இரண்டாம் நிலையாக அழுகலும் காணப்படலாம். இதனால் அதிக பயிர் இழப்பீட்டை நாம் காண இயலும் குறிப்பாக ஆரம்ப நிலையில்.
  • பயிர்கள் பூக்கும் அல்லது தொண்டை கருவாக இருக்கும் நேரத்தில் நோய் தொற்று மற்றும் சாதகமான சூழ்நிலை திகழும் பொழுது சுமார் 50% வரை கூட மகசூல் இழப்பீட்டை காண இயலும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • பருவ மழைக்கு ஏற்றவாறு நடவு பணியை மேற்கொள்ள வேண்டும். அதாவது பயிரின் ஆரம்ப வளர்ச்சி நிலை பருவ மழைக்கு இணையாக  இருக்கக் கூடாது.
  • நோய் தாக்குதல் குறைவாக காணப்படும் ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யலாம். 
  • மழைக்காலங்களில் சாகுபடி செய்யும் பொழுது தழைச்சத்து உரத்தை மிகக் குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும் அதுவும் சிறிது சிறிதாக கொடுத்து வர வேண்டும். 
  • பயிரின் இலை பகுதியில் ஈரப்பதம் திகழும் பொழுது பண்ணைப் பணிகள் அல்லது பூஞ்சையை கட்டுப்படுத்தக்கூடிய எந்தவித தெளிப்புகளும் செய்யக்கூடாது இது பயனற்றது.
  • முன்னெச்சரிக்கையாக தெளிப்புகள் மேற்கொள்வது இந்த நோய் தாக்குதல் மற்றும் பரவுதலை கணிசமாக கட்டுப்படுத்துகிறது. 
  • விதை அல்லது நாற்றுகளை நேர்த்தி செய்து நடவு செய்வது மிகவும் நல்லது குறிப்பாக Pseudomonas மற்றும் Trichoderma பயன்படுத்தி. 
  • காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் விடுவது மிக சிறந்தது. மேலும் இது பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும்.
  • மழை பருவத்தில் சாகுபடி செய்பவர்கள் சற்று அதிக இடைவெளி விட்டு காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை கிடைக்கும் படி செய்யலாம்.
  • பொட்டாசியம், கால்சியம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை போதுமான அளவு கொடுக்கும் பொழுது மேலும் பயிர்கள் நோய் எதிர்ப்பு திறனுடன் செயல்படும்.
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் சூடோமோனஸ் திரவத்தை மட்டும் நம்ப வேண்டும் ஏனெனில் மற்ற எந்த ஒரு உயிர் கட்டுப்பாட்டு காரணிகள் இந்த நோயை கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. எனவே இதனை தொடர்ச்சியான இடைவெளியில் பயன்படுத்தலாம்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம்... 

    • Carbendazim
    • Carbendazim + Mancozeb
    • Hexaconazole
    • Tebuconazole
    • Tricyclazole
    • Trifloxystrobin + Tebuconazole
    • Picoxystrobin

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX 


வெள்ளி, 29 நவம்பர், 2024

சேப்பங்கிழங்கில் Phytophthora இலை கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • தொடர்ச்சியாக சேப்பங்கிழங்கு சாகுபடி செய்யப்படும் பகுதிகளில், சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை அமையும் பொழுது இலை கருகல் நோய் தாக்குதல் காணப்படும். Phytophthora எனப்படும் பூஞ்சையினால் ஏற்படும் எந்த இலைக் கருகல் நோய் கிழங்கு உற்பத்தியில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. 
  • மண் மற்றும் பாதிப்படைந்த கிழங்குகளில் மிக நீண்ட நாட்கள் உயிர் வாழும் திறன் படைத்த இந்த பூஞ்சைகள், தண்ணீர் மண் கிழங்கு மற்றும் காற்றினால் ஒரு செடிகளில் இருந்து மற்றொரு செடிகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நோயின் அறிகுறிகள்: 



  • பயிரின் நுனி அல்லது நடுப்பகுதியில் திகழும் இலையின் மேற்பரப்பில் அடர் பழுப்பு முதல் ஆலிவ் பச்சை நிறத்தில் புள்ளிகள் அல்லது புண்கள் காணப்படும். 
  • இந்த புள்ளிகளை சுற்றி வெளிர் மஞ்சள் நிறைய வளையம் காணப்படும். 
  • நாளடைவில் இந்த புள்ளிகள் பெரிதாகி இதிலிருந்து மஞ்சள் அல்லது வெளிர் சிகப்பு நிற திரவம் வெளியேறுவதை காண இயலும். 
  • சில நேரங்களில் இந்த புண்களை சுற்றி வெள்ளை நிற பூஞ்சைகள் காண இயலும். இந்த புண்களின் நடுப்பகுதி சிதைந்து உதிர்வதை காணலாம். 
  • இலை மற்றும் தண்டுப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி அடுத்தடுத்த இலைகளுக்கு பரவுவதால் பயிர்களில் 50 சதவீதம் இலைப்பரப்பை நாம் இலக்க நேரிடும். 
  • தீவிர தாக்குதலின் போது புண்கள் இலை காம்புகளில் காணப்படும். இதனால் பாதிப்படைந்த இடத்தில் சிதைந்து இலை ஒடிந்து தொங்கும்.
  • நோய் தாக்குதலுக்கு உகந்த ரகங்களில் கிழங்குகளிலும் தாக்குதலை காண இயலும் இதனால் கிழங்கு அழுகல் அல்லது ரப்பர் போன்று மாறுதல் காணப்படும்.
  • இந்த நோய் தாக்குதலால் சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஒரே வயலில் தொடர்ச்சியாக சேப்பங்கிழங்கு சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். கிழங்கு வகை அல்லாத இதர பயிர்களை சுழற்சி பயிராக பயிரிடுவது சிறந்தது. 
  • நோய் தாக்குதல் இல்லாத கிழங்குகளை தேர்வு செய்தல் மிக அவசியம். அதற்கு எந்தப் பகுதியில் இந்த நோய் தாக்குதல் இல்லையோ அங்கிருந்து கிழங்குகளை பெற்று நடவு செய்யலாம். 
  • தேர்வு செய்த கிழங்குகளை இயற்கை முறையில் அல்லது ரசாயன மருந்துகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து பின்பு விதைக்க வேண்டும். இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்திட Trichoderma மற்றும் Bacillus பயன்படுத்தலாம் ரசாயன முறைக்கு Carbendazim+Mancozeb மருந்தை பயன்படுத்தலாம். 
  • நோய் எதிர்ப்பு திறன் உடைய ரகத்தினை தேர்வு செய்து பயிர் செய்யலாம். 
  • பயிரின் ஆரம்ப கால வளர்ச்சியின் போது இந்த நோய் தாக்குதல் பெரிதளவு இல்லாததால் அதற்கு ஏற்றவாறு பருவத்தினை தேர்வு செய்து நடவு மேற்கொள்ளலாம்.

  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது பாதிப்படைந்த இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • வாய்க்கால் வழி நீர் பாசனம் அல்லது தெளிப்பு நீர் பாசனம் வழியாக நீர் விடுவதை தவிர்க்கலாம் ஏனெனில் இவை இரண்டுமே நோய் தாக்குதல் மற்றும் பரவுதலை அதிகப்படுத்தும். 
  • போதுமான இடைவெளி பயன்படுத்தி நடவு செய்வதால் நல்ல காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை கிடைக்கும் இதனால் நோய் தாக்குதல் குறைந்தே காணப்படுகிறது.
  • பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கவும் திசுக்களின் திட தன்மையை மேம்படுத்தவும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை பரிந்துரை செய்யப்படும் அளவில் கொடுக்க வேண்டும்.

  • வயலை சுற்றி இதர பயிர் குறிப்பாக சோளம் பயிரிடுவதால் நோய் தாக்குதல் மட்டுப்படுத்தப்படுகிறது.

  • இயற்கை முறையில் கட்டுப்படுத்த Trichoderma harzianum என்ற உயிர் கட்டுப்பாட்டு காரணியை தொடர்ச்சியாக மண்ணில் கொடுத்து வர வேண்டும்.
  • ரசாயன மருந்துகளை தெளிக்க வேண்டும் என்றால் கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து தெளிக்கலாம்.

  • Metalaxyl + Mancozeb
  • Copper oxychloride
  • Mettiram
  • Mancozeb
  • Fluxapyroxad + Pyroclostrobin
  • Fosetyl aluminium

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்... 

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


புதன், 13 நவம்பர், 2024

பாக்கு சாகுபடியில் மஞ்சள் இலை நோய் மேலாண்மை...

முன்னுரை: 

    பாக்கு சாகுபடியில் மஞ்சள் இலை நோய் அனைத்து வயதுடைய மற்றும் தட்பவெப்ப சூழ்நிலைகளில் வளரும் பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் உடையது. பராமரிப்பின் அடிப்படையில் பாதிப்பு 15 முதல் 80 சதவீதம் வரை கூட ஏற்படும். குறிப்பாக பருவ மழைக்காலங்களில்.

நோய் காரணிகள்: 

    இந்த நோய் ஒரு குறிப்பிட்ட காரணத்தால் ஏற்படுவதில்லை பல்வேறு சூழ்நிலைகள் ஒருங்கிணைந்து இதனை ஏற்படுத்துவதால் ஆரம்ப நிலையிலேயே இதனை கட்டுப்படுத்துவது மிக அவசியம். 

நோயின் அறிகுறிகள்:

  • மரத்தின் அடி இலைகளின் நுனி மற்றும் விளிம்புகள் மஞ்சள் நிறமாக மாறும். படிப்படியாக இலையின் நடுப்பகுதியிலும் அறிகுறிகளை காணலாம். 
  • நிறம் மாறுதல் அடுத்தடுத்து இலைகளுக்கு பரவ ஆரம்பிக்கும் பின்னர் பயிரின் மொத்த இலைகளுக்கும் பரவும். 
  • தீவிரமான நிலையில் நிற மாற்றம் அடைந்த இலைகள் நுனிப்பகுதியில் இருந்து கருக ஆரம்பிக்கும். 
  • அதிக அளவில் முதிர்ந்த மற்றும் இளம் காய்கள் உதிரும். உதிர்ந்த காய்கள் நிறமாற்றத்துடனும் அழுகல் நோய் போன்ற அறிகுறிகளுடனும் காணப்படும். 
  • பாதிப்படைந்த மரத்தின் வேர் பகுதியில் நிறம் மாற்றங்கள் காணப்படலாம். 
  • இதனால் பெரிய அளவில் பயிர் இழப்பீடு மற்றும் மகசூல் இழப்பீடு 80 சதவீதம் வரை காணப்படலாம்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி வயலில் நீர் தேங்கி நிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். 
  • இந்த நோய்க்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம். 
  • பாக்கு நாற்றுகளை வாங்கும் பொழுது மிக கவனமுடன் நோய் தாக்குதல் இல்லாத நாற்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான ஊட்டச்சத்துக்களை கண்டிப்பாக கொடுத்து வர வேண்டும். 
  • ஊடுபயிராக வாழை பயிரிடுவதை தவிர்க்கலாம். 
  • மரம் ஒன்றிற்கு 10 முதல் 15 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 150-200 கிராம் தழைச்சத்து, 50 முதல் 100 கிராம் மணிச்சத்து மற்றும் 250 கிராம் சாம்பல் சத்து கொடுக்க வேண்டும்.
  • தேவையின் அடிப்படையில் மேலே சொன்ன ஊட்டச்சத்துக்களை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பயன்படுத்தலாம்.
  • இது மட்டும் இன்றி இதர ஊட்டச்சத்துக்கள்  குறிப்பாக கால்சியம் மெக்னீசியம், மாங்கனிசு, இரும்பு மற்றும் துத்தநாகம் தேவையான அடிப்படையில் கொடுத்து வர வேண்டும். 
  • கோடை பருவத்தில் மிதமான நீர் பாய்ச்சுதல் கண்டிப்பாக அவசியம். 
  • பாதிப்படைந்த பயிர்களை கவனமாக சேகரித்து வயலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • ஆரம்ப காலத்தில் போதுமான அளவு நிழல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • இடை உழவு அல்லது ஊடு பயிர் செய்யும் பொழுது வேர் மற்றும் தண்டுப் பகுதிகள் பாதிக்காத வண்ணம் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
  • இயற்கை இடு பொருட்களை அதிகம் பயன்படுத்தி சாகுபடி செய்யும் பொழுது இதன் தாக்குதல் காணப்படுவது மிகவும் குறைவு.
  • மண்ணின் கார அமிலத்தன்மை நடுநிலைத் தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் இல்லை எனில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • நோய் பரவுதல் கட்டுப்படுத்த Trichoderma மற்றும் Pseudomonas ஆகியவற்றை தலா 100 கிராம் கலந்து வேர்ப்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும். இதனை பருவமழை காலங்களில் தொடர்ச்சியான இடைவெளியில் பின்பற்றுவது சிறந்தது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


புதன், 23 அக்டோபர், 2024

நெல் பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோய் மேலாண்மை...

முன்னுரை:

  • நெல் சாகுபடியில்  பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் அந்தந்த பருவத்திற்கு பிரதானமாக பயிர்களை தாக்கக்கூடிய நோய் மற்றும் பூச்சிகளை அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கை செயல்படுவது சிறந்தது. 
  • அந்த வகையில் பாக்டீரியா இலை கருகல் நோய் சாகுபடியில் உள்ள பயிர்களை தாக்க பிரதானமான தருணம். இந்த நோய் தாக்குதலால் சுமார் 60% வரை கூட மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பராமரிக்கும் விதம், ரகத்தின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலை சூழ்நிலையை பொறுத்து மகசூல் இழப்பீடு ஏற்படும். 

நோய் தாக்குதலுக்கான உகந்த சூழ்நிலைகள்: 

  • மிதமான வெப்பம் மற்றும் அதிக காற்று ஈரப்பதம் 
  • அடர் நடவு அதனால் ஏற்படும் கதகதப்பு தன்மை 
  • முந்தைய பயிர் கழிவுகளை முழுமையாக அகற்றாமல் அல்லது மக்காமல் இருத்தல் 
  • தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு 
  • முறையற்ற களை மேலாண்மை 

பரவும் விதம்:

  • மழை அல்லது நீர்ப்பாசன மூலம் எளிதில் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு பரவுகிறது.
  • காலை நேரத்தில் வயலில் இறங்கி பணிகளை செய்வதன் மூலம் எளிதில் பரவுகிறது.

தாக்குதலின் அறிகுறிகள்: 


  • பொதுவாக 15 முதல் 50 நாட்கள் வயதுடைய பயிர்கள் இந்த பாக்டீரியா தாக்குதலுக்கு மிகவும் உகந்தது.
  • தாக்குதலின் ஆரம்ப நிலையில் இலையின் விளிம்பு மற்றும் நுனியில் மஞ்சள் நிற மாற்றம் அடைவதை காண இயலும்.
  • இந்த நிற மாற்றம் படிப்படியாக இலையின் அடிப்பகுதியை நோக்கி பரவும். 
  • நாளடைவில் பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்து வெளிர் பழுப்பு நிறம் மாற்றம் அடைந்து உதிர நேரிடும். 
  • ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட இடத்தை பார்க்கும் பொழுது பெரும்பான்மையான இலைகளின் நுனி பகுதி மஞ்சள் நிறமாக இருப்பதை பார்க்கும் பொழுது பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாடு  போன்று காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட பகுதியை சற்று உற்று நோக்கும் போது இதிலிருந்து மிக மிக சிறிய அளவில் திரவம் வெளியேறுவதை காண இயலும் இதை அடிப்படையாக வைத்து இதனை பாக்டீரியா இலை கருகல் நோய் என தீர்மானிக்கலாம்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பாக்டீரியா நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • கரிப் பருவத்தில் நெல் நடவு மேற்கொள்ளும் பொழுது சற்று இடைவெளி அதிகமாக விட வேண்டும். 
  • மழை அல்லது பனிப்பொழிவு காணப்படும் பொழுது காலை நேரத்தில் வயலில் இறங்கி பணிகள் எதுவும் செய்ய வேண்டாம். 
  • தாக்குதலின் அறிகுறி தென்படும் பொழுது உடனடியாக அந்த இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • இந்த நோய் பிரதானமாக நீர் மூலம் பரவுவதால் பாசன நீர் வழியாக ஏக்கருக்கு 3 லிட்டர் வீதம் Bacillus subtilis திரவ உயிர் பூஞ்சானம் கொடுக்க வேண்டும். இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை என குறைந்தபட்சம் இரண்டு முறை கொடுப்பது நோய் பரவுதலை கட்டுப்படுத்த உதவி புரியும். 
  • அதிக அளவு தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
  • பொட்டாசியம் மற்றும் நுண்ணூட்ட உரங்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்து வர வேண்டும்.
  • களைகளை அவ்வப்போது அகற்றி வர வேண்டும் மற்றும் முந்தைய பயிர் கழிவுகள் நன்கு மக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் இல்லையெனில் நடவுக்கு முன்னதாக 200 லிட்டர் WDC வயலில் விடலாம். 
  • இயற்கை முறையில் நோய் பரவுதலை கட்டுப்படுத்த pseudomonas மற்றும் bacillus ஆகியவற்றை ஆகியவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்கலாம். 
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த காப்பர் ஆக்சி குளோரைடு, காப்பர் ஹைட்ராக்சைடு, ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற பாக்டீரியாவை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்களை இலை வழியாக தெளிக்கலாம். 

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்துபயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வெள்ளி, 27 செப்டம்பர், 2024

கத்தரியில் ஃபோமோப்சிஸ்(Phomopsis) கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

    நாம் பிரதானமாக சாகுபடி செய்யும் கத்தரி பயிரில் பல்வேறு வகையான நோய் மற்றும் பூச்சிகள் தாக்குகிறது. அதில் மிகவும் முக்கியமான பூஞ்சான நோயான ஃபோமோப்சிஸ் கருகல் நோய் மிகவும் ஆபத்தான ஒன்று. உலகம் முழுவதும் காணப்படும் இந்த நோய் சுமார் 70% வரை கூட மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். இந்த நோய் பயிரின் அனைத்து நிலைகளிலும் பாதிக்கும் என்பதால் இதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை:

  • தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு. 
  • அதிக காற்று ஈரப்பதம் மற்றும் மிதமான வெப்பநிலை. 
  • பிரதானமாக மழைப்பொழிவு மற்றும் பாதிக்கப்பட்ட பயிர் கழிவு மூலமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது.

தாக்குதலின் அறிகுறிகள்: 

நாற்றங்கால் அறிகுறிகள்

  • இந்த நோய் விதை மூலம் பரவும் என்பதால் விதை முளைக்கும் போதே அறிகுறிகளை ஏற்படுத்தும். 
  • இந்த Phomopsis நோய் நாற்றுகளின் தண்டுப் பகுதியை பாதிப்பதால் தண்டுகளில் பழுப்பு நிற புண்கள் காணப்படும்.
  • இதனால் தரைக்கு மேலே உள்ள பகுதியில் நாற்றுகள் முறிந்து இறக்கும்.  
  • அதேபோன்று நாற்றுகளின் இலையில் சிறிய புள்ளிகள் தோன்றும். இது நாளடைவில் பெருக்கமடைந்து இலைகள் உதிரும்.

வயலில் காணப்படும் அறிகுறிகள்:

  • சிறிய கருப்பு முதல் பழுப்பு நிற பள்ளத்துடன் கூடிய புள்ளிகள் காய்களில் காணப்படும். 
  • இது நாளடைவில் பெருக்குமடைந்து புள்ளிகளின் ஓரங்கள் சற்று அழுகியது போன்று காணப்படும். 
  • இதனால் காய்கள் சுருக்கமாகவும் ஒழுங்கற்ற வடிவிலும் தோன்றலாம். 
  • இலை மற்றும் தண்டுப் பகுதியில் நீள் வட்ட வடிவ புள்ளிகள் காணப்படும். 
  • மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்ட காய் அல்லது இலைகளில் கருப்பு நிற பூஞ்சானத்தை காண இயலும்.
  • கடைசி நிலையாக காய்களில் அழுகல் தென்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்த பூஞ்சான நோய் விதை மூலம் பரவும் அபாயம் உள்ளதால், தரமான விதைகளை தேர்வு செய்து அதனை 50 டிகிரி வெப்ப நிலையில் உள்ள தண்ணீரில் 15 முதல் 25 நிமிடம் ஊறவைத்து பின்னர் விதைக்க வேண்டும்.
  • அல்லது Trichoderma மற்றும் Pseudomonas பயன்படுத்தி விதை அல்லது நாற்றுகளை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.
  • இந்த பூஞ்சை பாதிக்கப்பட்ட பயிர் கழிவு மற்றும் மண்ணில் சுமார் ஒரு வருடம் கூட உயிர் வாழும் திறன் உடையதால், பயிர் கழிவுகளை முழுமையாக வயலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் கத்தரி சாகுபடி செய்வதை தவிர்ப்பது நல்லது. 
  • இந்த தாங்கி வளரக்கூடிய ரகங்கள் அல்லது வீரிய விட்டு ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யலாம்.
  • அதிக அளவு தழைச்சத்து உரத்தை பயன்படுத்துவதை தவிர்த்து பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்தால் மகசூல் குறைவதை தவிர்க்கலாம்.
  • பயிரில் பாதிக்கப்பட்ட பகுதியில் உருவாகும் பூஞ்சைகளால், அந்த இடத்தில் வளவளப்பாக இருப்பதால் மருந்து தெளிக்கும் பொழுது பாதிக்கப்பட்ட பகுதியில் மருந்துகள் நிலைத்திருக்காமல் விலகிச் சென்று விடும். 
  • உயிர் பூஞ்சை கொல்லிகள் அல்லது ரசாயன மருந்துகள் பயன்படுத்தும் பொழுது குறைவான அளவு மருந்துடன் ஒட்டுப் பசை சேர்த்து செடி முழுவதும் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
  • நோயை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட பூஞ்சான கொல்லிகலில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம்.
  • Carbendazim
  • Carbendazim + Mancozeb
  • Copper Oxychloride
  • Propiconazole
  • Carboxin + Thiram
  • Metalaxyl + Mancozeb
  • Zineb

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

வாழையில் தலைக்கொத்து நோய் மேலாண்மை...

வாழையில் தலைக்கொத்து நோய் மேலாண்மை...

    தலைக்கொத்து நோய் என்பது ஒருவகை வைரஸ் பாதிப்பால் ஏற்படக் கூடியதாகும். இந்த நோய் அஸ்வினி எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகளினால் அடுத்த அடுத்த செடிகளுக்கு பரப்பப்படுகிறது. இது மட்டுமின்றி பாதிப்படைந்த மரத்திலிருந்து விதை கருணைகளை தேர்வு செய்து நடவு செய்தாலும் நோய் பரவும் தன்மையுடையது.

இதன் அறிகுறிகள்:

  • இந்த வைரஸ் நோய் பாதிப்பின் அறிகுறிகள் மிகத் தெளிவாக இளம் வயது பக்க கன்றுகளில் காண இயலும். 
  • பாதிப்படைந்த பக்கக்கன்றுகளின் வளர்ச்சி தடைபட்டு குன்றி காணப்படும். 
  • தண்டுப் பகுதியின் நுனியில் வரக்கூடிய இலைகளுக்கு இடைப்பட்ட இடைவெளி மிகவும் குறைந்து காணப்படும்.
  • நுனியில் வரக்கூடிய இலைகள் நன்றாக விரியாமலும் அகலம் குறைந்தும் நீள்வாக்கில் காணப்படும். 
  • இலையின் விளிம்புகளில் மஞ்சள் நிற மாற்றத்தை காண இயலும். 
  • அதேபோன்று இலை விளிம்புகள் சீராக இல்லாமல் மேடும் பள்ளமுமாக வளமுமாக பலமாக இருப்பது போன்ற அமைப்பு காணப்படும். 
  • இளம் செடிகளில் இலைகள் வளைந்தும் ஒழுங்கற்ற வடிவிலும் காணப்படும். அது மட்டும் இன்றி இலை காம்பு மற்றும் இலையின் அடி புறத்தில் மெல்லிய சீரற்ற கோடுகள் காணப்படும். 

முதிர்ந்த மரங்களில் காணப்படும் அறிகுறிகள்...

  • நன்கு வளர்ந்த மரங்களில் தலைக்கொத்து நோய் அறிகுறி தெளிவாக தெரியாது. 
  • இலையின் நடுநரம்பு மற்றும் அடிப்பகுதியில் புள்ளி மற்றும் கோடுகள் சீரற்ற பரவலாக காணப்படும்.
  • நடு நரம்பிற்கும் இலை விளிம்புகளும் இணையும் இடத்தில் J வடிவத்தில் கோடுகள் இலையின் அடி புறத்தில் காணப்படும். 
  • அதேபோன்று இலை காம்பு மற்றும் பூங்கொத்து போன்ற பகுதிகளிலும் கோடுகள் காணப்படும் நாளடைவில் இந்த கோடுகள் சிகப்பு நிறமாக மாற்றம் அடையலாம்.
  • முதிர்ந்த மரத்தில் இருந்து வெளிவரக்கூடிய வாழை பூ மற்றும் தார் மிக மிக சிறிதாகவும் வளைந்து நெளிந்தும் ஒழுங்கற்ற வடிவில் காணப்படும். 
  • சில நேரங்களில் பாதிப்படைந்த மரங்கள் பூ அல்லது காய்கள் விடாமலேயே இறந்து விடுகிறது. 

இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தலைக்கொத்து நோய் தாக்குதல் காணப்படும் வாழை தோப்புகளில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் விதை கட்டைகள் தேர்வு செய்ய வேண்டாம். 
  • வயலை சுத்தமாக பராமரித்துக் கொள்ள வேண்டும். 
  • ஊடுபயிராக சாறு உறிஞ்சி பூச்சிகள் அதிகம் தாக்கும் பயிர்களை பயிரிட வேண்டாம். 
  • அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அந்த மரத்தை முழுமையாக அகற்றி வயலில் இருந்து வெளியேற்றவும். 
  • அஸ்வினி போன்ற மற்ற வகை சாறு உறிஞ்சி பூச்சிகள் தாக்காத வண்ணம் பயிரை பராமரிக்க வேண்டும்.
  • ஒருவேளை சார் உறிஞ்சி பூச்சிகள் இருந்தால் உடனடியாக இயற்கை முறையில் அல்லது ரசாயன மருந்துகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்த வேண்டும்.
  • பயிரின் ஆரம்ப காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை சாறு உறிஞ்சி பூச்சிகளை கட்டுப்படுத்த Verticillum lecanii தெளித்து வர வேண்டும்.
  • பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும் நேரத்தில் கீழ்க்கண்ட ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 
  1. Imidacloprid - 10 மில்லி 
  2. Fibronil -15-25 மில்லி 
  3. Thiamethaxam- 10 கிராம்
  4. Dimethoate -15-25 மில்லி 
  5. Acephate-10 கிராம்
இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறவும்....

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

பப்பாளியில் வளைப்புள்ளி வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பப்பாளி இரண்டு முதல் மூன்று மாத வயதுடைய பயிராக சாகுபடியில் உள்ளது. பப்பாளி பயிரின் மகசூலை பாதிக்க கூடிய பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் இருந்தாலும் வைரஸ் நோய் தாக்குதல் மிகப்பெரிய அளவில் மகசூல் இழப்பீடு மற்றும் பயிர் இறத்தல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதில் பப்பாளி வளைப்புள்ளி வைரஸ் நோய் மிக முக்கியமானது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 

  • பயிரின் வயது, தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் வைரஸின் வீரிய தன்மை ஆகியவற்றை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். 
  • ஆரம்ப நிலையில் இலைகளில் கரும்பு பச்சை நிறத்தில் கொப்புளங்கள் பரவலாக காணப்படும்.
  • நாளடைவில் இலைகளில் பல வண்ண நிறத்தில் புள்ளிகள் காணப்படும். 
  • இலைப் பகுதியில் வளர்ச்சி தடைப்பட்டு, இலைகள் அகற்ற அமைப்புடன் இல்லாமல் நீள்வாக்கில் வளரும். 
  • இலை காம்புகள் அளவிற்கு அதிகமாக வளர்ந்து நீண்டு காணப்படும்.
  • இலைகளில் தேமல் அறிகுறிகள் அதிகமாக தென்படும், நாளடைவில் இதில் பழுப்பு நிற புள்ளிகள் தென்பட ஆரம்பிக்கும்.
  • இதனால் ஒட்டுமொத்த பயிரின் வளர்ச்சி தடைப்பட்டு குன்றி காணப்படும். 
  • பயிரின் தண்டுப் பகுதி மற்றும் இலை காம்புகளில் நீர்த்த புள்ளிகள் மற்றும் கோடுகள் காணப்படும். 
  • காய்களில் நீர்த்த  வளையங்கள் காணப்படும்.
  • தீவிர நிலையின் போது இலைகள் மற்றும் பழங்கள் ஒழுங்கற்ற வடிவில் மாற்றம் அடைவதை காண இயலும்.

பரவும் விதம்: 

  • அஸ்வினி எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இளம் செடிகளில் சாற்றை உறிஞ்சி நொடிப்பொழுதில் மற்ற செடிகளுக்கு பரப்புகிறது. 
  • தர்பூசணி முலாம்பழம் வெள்ளரி மற்றும் பரங்கி வகை பயிர்களிலும் இந்த வகை வைரஸ் நோய் தாக்குதலை காண இயலும். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்த வகை வைரஸ் விதை மூலமாக பரவும் அபாயம் உள்ளதால் நோய் தாக்குதல் அல்லாத விதைகளை தேர்வு செய்வது மிக முக்கியம். 
  • வளைப்புள்ளி வைரஸ் நோய்க்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்கள் அல்லது வீரிய ஓட்டு ரகங்கள் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு பின்னர் சாகுபடி செய்யலாம்.
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் பப்பாளி சாகுபடி செய்வதை தவிர்க்கலாம். 
  • வெள்ளரி குடும்பத்தில் இருக்கும் மற்ற பயிர்களை பயிர் செய்த வயலில் பப்பாளி நடவு செய்வதை தவிர்க்கலாம். 
  • நடவு செய்வதற்கு முன்பதாக வயலை சுற்றி இரண்டு அல்லது மூன்று வரிசையில் சோளம் பயிரிடலாம்.
  • அஸ்வினி அதிகம் தென்படும் பருவத்தில் நடவு செய்வதை தவிர்க்கலாம். 
  • களை மேலாண்மை மிகவும் முக்கியம் ஏனெனில் அஸ்வினி களைச் செடிகளில் உயிர் வாழ்ந்து பயிரைத்தாக்கும்.
  • தொடர்ச்சியாக வயலை ஆய்வு செய்து நோய் தாக்குதல் உள்ளதா என்பதை காணவும். தாக்குதலின் அறிகுறிகள் தென்படும் தருணத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • தழைச்சத்து அதிகம் கொடுப்பதை தவிர்த்து இதர ஊட்டச்சத்துக்களை இயற்கை வழி முறையில் கொடுத்து பயிர்களை எதிர்ப்பு திறன் உடையதாக மாற்றலாம்.
  • ஆரம்ப நிலையில் இருந்தே சாறு உறிஞ்சி பூச்சியை கட்டுப்படுத்தும் Verticillum lecanii மற்றும் தேமோர் கரைசல், வேப்ப எண்ணெய், அக்னி அஸ்திரம், வசம்பு கரைசல், 3g போன்றவற்றை தெளிப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் செடிகளை நெருங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளலாம். 
  • ரசாயன முறையில் அஸ்வினியை கட்டுப்படுத்த கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் பயன்படுத்தி தெளிக்கலாம்.
  • Imidacloprid - 10 மில்லி.
  • Thiamethaxam - 10 கிராம்.
  • Monocrotophos- 30-40 மில்லி
  • Profenaphos - 30-40 மில்லி
  • Lambada cychlothrin - 25 milli
  • Dimethoate - 25 மில்லி.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வியாழன், 1 ஆகஸ்ட், 2024

வாழையில் மொகோ/பாக்டீரியல் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • வாழை சாகுபடியில் பூஞ்சானத்தால் ஏற்படக்கூடிய பணமா வாடல் நோய் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் அதே போன்று சில அறிகுறிகளை பாக்டீரியா வாடல் நோயும் ஏற்படுத்தி விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் வாழை மரங்கள் இறக்கவும் காரணமாக திகழ்கிறது.
  • இந்த பாக்டீரியல் நோயானது வாழை மற்றும் வாழை குடும்பத்தைச் சார்ந்த இதர பயிர்களையும் பொதுவாக தாக்குகிறது.பயிரின் அனைத்து நிலைகளிலும் இந்த நோய் தாக்குதல் காணப்பட்டாலும் இளம் பருவ வாழை மரங்களை அதிகம் தாக்குகிறது.

பரவும் விதம்: 

இந்த பாக்டீரியா பாதிக்கப்பட்ட பயிர் வாயிலாக இதர பயிர், மண் மற்றும் சென்றடைகிறது. அங்கிருந்து வாய்க்கால் வழி நீர் பாசனம் மற்றும் அன்றாட பண்ணைப் பணிகள் வாயிலாக இதர பயிர்களுக்கு பரவுகிறது.

நோயின் பிரதான அறிகுறிகள்:


  • அடி இலைகள் வெளிர் பச்சை நிறம் முதல் மஞ்சள் நிறமாக மாற்றம் அடையும். சில நேரங்களில் இலைகள் மஞ்சள் நிறம் மாறாமலும் இருக்கும்.
  • இலைகளின் காம்பு பகுதியில் வெடிப்புகள் அல்லது பிளவுகள் ஏற்பட்டு செடியை ஒட்டி தொங்கும். நாளடைவில் அடுத்தடுத்த இலைகளுக்கு இவ்விதமான அறிகுறிகள் பரவ ஆரம்பிக்கும்.
  • வாழை மரத்தின் தண்டுப் பகுதியில் பழுப்பு நிற கோடுகள் அல்லது திட்டுக்கள் காணப்படலாம்.வாழை மரத்தின் தண்டுப் பகுதி அல்லது கிழங்கு பகுதியை குறுக்கு நெடுக்காக வெட்டி பார்த்தால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்தில் நிற மாற்றம் அடைந்திருக்கும். 
  • அதாவது பயிர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நீரை எடுத்துச் செல்லக் கூடிய திசுக்கள் பாதிப்பதால் இவ்வாறான அறிகுறிகள் தென்படுகிறது.
  • ஆண் மலர் பாகங்கள் திடீரென கருப்பு நிறமாக மாறி உதிர ஆரம்பிக்கும். வாழைத்தாரின் காம்பு பகுதியை வெட்டி பார்த்தாலும் கருப்பு நிற மாற்றத்தை காணலாம்.
  • பாதிக்கப்பட்ட மரத்திலிருந்து உற்பத்தி செய்யக்கூடிய காய்கள் வளைந்து நெளிந்து வெம்பியது போன்ற காட்சி அளிக்கும். 
  • இந்த காய்கள் அல்லது பழங்களை உடைத்துப் பார்த்தால் அழுகிய நிறமாற்றம் இருக்கும். தாரில் உள்ள காய்கள் வெவ்வேறு நேரங்களில் பழுக்க ஆரம்பிக்கும் 
  • நோயின் தாக்குதல் தீவிரமடையும் பொழுது செடிகள் இறந்துவிட அதிக வாய்ப்புகள் உள்ளது.

நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • தேர்வு செய்யப்படும் விதைக் கிழங்குகள் தரமானதாகவும் நோயால் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.
  • பாக்டீரியல் வாடல் நோய்க்கு எதிராக வளரும் தன்மை கொண்ட பூவன், மோந்தன் போன்ற ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யலாம். 
  • ஒரே வயலில் மீண்டும் மீண்டும் வாழை சாகுபடி செய்வதை தவிர்ப்பது நல்லது.
  • நடவு செய்வதற்கு முன்பதாக உயிர் பூஞ்சான கொல்லிகள் அல்லது இரசாயன மருந்துகளை பயன்படுத்தி கிழங்குகளை நேர்த்தி செய்து நடவு செய்யலாம்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். 
  • நீர் பாய்ச்சுதலை முறைப்படுத்தி காய்ச்சலும் பாய்ச்சலும் ஆக நீர் விட வேண்டும். 
  • பெரும்பான்மையாக இந்த நோயானது நீர்ப்பாசனம் வழியாக பரவுவதால் சொட்டுநீர் பாசனம் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. 
  • நோய் தாக்குதலை ஏற்படுத்தும் பாக்டீரியாவானது வயலில் அல்லது பயிர் கழிவுகளில் சுமார் 18 மாதம் முதல் 20 மாதங்கள் வரை உயிருடன் இருப்பதால் பயிர் சுழற்சி அதற்கேற்றவாறு பின்பற்றலாம்.
  • பயிர்களில் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் அடித் தண்டு மற்றும் தண்டுப் பகுதிகளில்.
  • நோய் பரவுதலை கட்டுப்படுத்த வேர்ப்பகுதியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற ரசாயன மருந்தை வேர்ப்பகுதியில் ஊற்றலாம்.

இது விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வெள்ளி, 19 ஜூலை, 2024

சாமந்தி பயிரில் பூ கருகல் (Botrytis blight) நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • ஆடி மாதத்தில் நடவு செய்யப்படும் காய்கள் மற்றும் பூக்களுக்கு அறுவடை தருணத்தில் நல்ல விலை கிடைக்கும் என்பது பொதுவான கருத்து அதனால் தமிழ்நாட்டில் பரவலாக காய்கறிகள் மற்றும் பூ பயிர்கள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • தற்போது சாகுபடியில் இருக்கும் சாமந்தி பூக்களில் பல்வேறு விதமான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுகிறது. அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய நோயாக Botrytis எனப்படும் பூ கருகல் நோய். ஏனெனில் இது நேரடியாக பூக்களை பாதித்து உடனடியாக பூக்களின் தரத்தை குறைப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
  • Botrytis எனப்படும் பூஞசானத்தால் ஏற்படக்கூடிய இந்த நோயானது கிரே மோல்ட் (Gray mold) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோயானது பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பூ பயிர்களை தாக்கும் வல்லமை படைத்தது. உதாரணத்திற்கு செவ்வந்தி, சாமந்தி, ரோஸ், துளிப் மற்றும் பல பூ பயிர்களின் வணிக ரீதியாக தேவைப்படும் பகுதியை பாதித்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

நோயின் அறிகுறிகள்: 


  • பூ இதழ்களில் பழுப்பு/ காவி நிற புள்ளிகள் ஆரம்பத்தில் காணப்படும்.
  • நாளடைவில் இந்த புள்ளிகள் விரிவடைந்து கருகல் போன்று காணப்படும்.
  • இதன் அறிகுறி மற்ற இதழ்களுக்கும் பரவி பூக்களை முழுவதும் பாதித்துவிடும். 
  • பின்னாளில் அழுகல் ஏற்பட்டு உருமாற்றம் ஏற்பட்டு இதழ்கள் உதிரும்.
  • தீவிர தாக்குதலின் போது இதன் அறிகுறிகள் மொட்டுகள், இலை மற்றும் தண்டுப் பகுதியிலும் காணப்படும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாம்பல் நிற பூஞ்சான வளர்ச்சியை காண இயலும்.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை: 

  • தொடர்ச்சியான மழைப்பொழிவு, தூறல், பனிப்பொழிவு மற்றும் மேக மூட்டமான தட்பவெப்ப சூழ்நிலை.
  • அதிகளவு நீர் பாய்ச்சுதல் மற்றும் வடிகால் வசதி இல்லாமல் இருத்தல். 
  • நெருங்கிய நடவு 
  • பூக்கும் தருணத்தில் தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்துவது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பூக்கும் தருணம் பருவ மழைக்கு இணையாக வராத அளவிற்கு நடவு மேற்கொள்ளும்.
  • மேட்டுப் பாத்தி அமைத்து நல்ல வடிகால் வசதியுடன் சாகுபடி செய்ய வேண்டும். 
  • அடி உரமாக பயன்படுத்தும் தொழு உரத்துடன் ஏக்கருக்கு தலா 1.5 கிலோ Trichoderma மற்றும் Pseudomonas கலந்து ஊட்டமேற்றி இட வேண்டும்.
  • போதுமான பயிர் இடைவெளி இருக்க வேண்டும் அப்போதுதான் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.
  • மாதம் ஒருமுறை அல்லது மழைப்பொழிவு காலத்தில் மாதம் இருமுறை என ஏக்கருக்கு இரண்டு லிட்டர் Trichoderma vridae பாசன நீர் வழியாக கொடுக்க வேண்டும். 
  • வாரம் ஒரு முறை Bacillus subtilis/ Pseudomonas fluorescence இலை வழியாக நன்கு தெளிக்க வேண்டும்.
  • மழைப்பொழிவு காலத்தில் ஏக்கருக்கு 50 கிலோ அமோனியம் சல்பேட் மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு கலந்து மண்ணில் இட வேண்டும். 
  • பாதிக்கப்பட்ட பூக்கள் அல்லது செடிகளை முழுமையாக அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
  • பயிர்கள் பூக்கும் தருணத்தில் இருந்து தெளிப்பு நீர் பாசன வழியாக நீர் விடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 
  • பயிர்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் தருணத்தில் வயலில் எவ்வித பணியையும் மேற்கொள்ளக்கூடாது.
  • வயலில் களைகள் அல்லது இதர குப்பைகள் இல்லாதவாறு சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • தழைச்சத்து உரம் அதிகம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பொட்டாசியம், போரான், மக்னீசியம் மற்றும் சிலிக்கான் ஊட்டச்சத்துக்கள் சரிவிகித அளவில் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும்.
  • தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு நேரத்தில் பயிர்களுக்கு வெப்பநிலையை ஏற்படுத்தக்கூடிய ரசாயன மருந்துகளை தெளிக்கலாம்.
  • மாலை நேரத்தில் மருந்துகளோ அல்லது நீரில் கரையும் உரத்தினையோ தெளிக்க கூடாது. ஏனெனில் இது இரவு முழுவதும் ஈரப்பதத்தை ஏற்படுத்தி நோய் தாக்குதலை ஊக்குவிக்கும். காலை நேரத்தில் தெளிப்பதால் வெப்பநிலை காரணமாக ஈரப்பதம் நீங்கிவிடும்.
  • நாற்றுகளை இயற்கை வழி பூஞ்சான கொல்லி மற்றும் உயிர் உரம் பயன்படுத்தி நேர்த்தி செய்து நடவு செய்யலாம். அல்லது Carbendazim+ Mancozeb என்ற ரசாயன மருந்தை பயன்படுத்தியும் நேர்த்தி செய்யலாம்.
  • நோய் தாக்குதலின் தீவிரம் அதிகமாக காணப்படும் தருணத்தில் இது கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். (கொடுக்கப்பட்டுள்ள அளவு 10 லிட்டர் தண்ணீருக்கு)

Captan -25 கிராம் 

Zineb- 25 கிராம்

Carbendazim+ Mancozeb- 25 கிராம்

Chlorothaonil- 15 கிராம்

Thiophenate methyl - 15-20 கிராம்

Azoxystrobin+Mancozeb - 10 மில்லி

இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

Recent Posts

Popular Posts