google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்: ஊட்டச்சத்து மேலாண்மை

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

ஊட்டச்சத்து மேலாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊட்டச்சத்து மேலாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 டிசம்பர், 2024

பயிர் சாகுபடியில் இரும்பு சத்து குறைபாடும் அதன் மேலாண்மையும்...

    பயிர் சாகுபடியில் நுண்ணூட்ட சத்துக்களின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழைக்காலங்களில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் பிரதானமாக இரும்பு திகழ்கிறது. பயிர்களுக்கு போதுமான அளவு பச்சயத்தை கொடுத்து அதன்மூலம் பயிர் வளர்ச்சி மற்றும் திடத்தன்மையை மேம்படுத்துகிறது. 

    இது மட்டும் இன்றி பல்வேறு நொதித்தல் நிகழ்வு மற்றும் புரத உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கிறது. எனவே இதன் பற்றாக்குறையை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • மண்ணில் தொடர்ச்சியான ஈரப்பதம் அல்லது நீர் தேங்கி நிற்கும் பொழுது இரும்பு சத்து குறைபாடு ஏற்படும்.
  • மண்ணின் கார அமிலத்தன்மை அதிகமாக இருத்தல்.
  • மண் அல்லது பயிரில் பாஸ்பரஸ், காப்பர், மாங்கனிசு மற்றும் துத்தநாகம் அதிகமாக இருக்கும் பொழுது இரும்புச்சத்து பயிர்களுக்கு கிடைப்பதில்லை.
  • பயிரில் நீண்ட நாட்களுக்கு வேர் வளர்ச்சி இல்லாமல் இருத்தல். 
  • மண்ணில் அதிக அளவு நன்மை செய்யும் உயிரினங்கள் இருக்கும் பொழுது, அதற்குத் தேவையான சத்துக்கள் போக மீதி பயிர்களுக்கு கிடைப்பது அரிது எனவே பற்றாக்குறை ஏற்படும். 
  • மணல் பாங்கான மண்ணில் அதிகளவு சத்துக்கள் தேக்கி வைக்க இயலாத நிலை காரணமாகவும், களிமண்ணில் அதிக பிடிப்பு திறன் காரணமாகவும் இரும்பு சத்து பற்றாக்குறை ஏற்படலாம்.

இரும்புச்சத்து பற்றாக் குறையின் அறிகுறிகள்: 



  • பயிரின் இளம் இலைகளில் இதன் அறிகுறியை காண இயலும் குறிப்பாக பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறுதல். 
  • மாறுதலடைந்த இலைகளில் இலை நரம்புகள் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும். 
  • நாளடைவில் இந்த இலைகள் மேலும் அடர் மஞ்சள் நிறமாக மாறி அதன் விளிம்புகளில் கருகல் ஏற்படலாம்.
  • சில நேரங்களில் இலை உதிர்வதை காணலாம்.
  • குன்றிய பயிர் வளர்ச்சி, மகசூலின் அளவு மற்றும் தரத்தில் குறைபாடு போன்றவற்றையும் காணலாம்.

இதை எவ்வாறு சரி செய்யலாம்: 

  • மண் பரிசோதனை அடிப்படையில் மண் மற்றும் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்து வர வேண்டும். 
  • வயலில் போதுமான அளவு வடிகால் வசதி இருப்பதால் நீர் தேங்குவதை தவிர்க்கலாம். 
  • மண்ணின் கார அமிலத்தன்மை சமநிலையில் அல்லது நடுநிலையாக இருப்பதை அவ்வப்போது உறுதிப்படுத்த வேண்டும். 
  • ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • மழைக்காலங்களில் இரும்பு சத்து குறைபாடு ஏற்படுவது பொதுவானது அதனை இலை வழி தெளிப்பு மூலம் சரி செய்து கொள்ள வேண்டும்.
  • ஆரம்ப நிலை  பற்றாக்குறை அறிகுறிகளின் போது இரும்பு சல்பேட் ஊட்டச்சத்தை மண்ணில் இடலாம். 
  • Chelated வடிவில் இருக்கும் இரும்பு சத்தை இலை வழியாக தெளித்தால் இதன் பற்றாக்குறை அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வியாழன், 28 நவம்பர், 2024

தென்னை டானிக் (Coconut Tonic) பயன்படுத்தும் முறையும் பயன்களும்...

தென்னை டானிக்:

  • தென்னை பல்லாண்டு பயிர் என்பதால் ஊட்டத்து மேலாண்மையில் தனி கவனம் செலுத்த வேண்டும். மண் வளம் மற்றும் பயிரின் வயதிற்கு ஏற்றவாறு தேவையான ஊட்டச்சத்துககளை தேவையான நேரத்தில் கொடுத்து வர வேண்டும். காய்க்கும் பருவம் அல்லது காய்ப்பில் உள்ள தென்னை மரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை ஒரு வருடம் கொடுக்கவில்லை எனில் அதனால் ஏற்படும் மகசூல் இழப்பீட்டை அடுத்து வரும் 2-3 வருடங்களுக்கு காண இயலும்.தென்னையில் குரும்பை உதிர்வு என்பது இயற்கையானதாகவே கருதப்படுகிறது. 
  • தென்னை மரத்தின் பாளையில் உற்பத்தி செய்யப்படும் பலநூறு பூக்கள் தென்னங்காயாக மாறுதல் அடைதல் என்பது இயற்கைக்கு மாறானது. இதனால் தென்னை மரங்கள் தனது சக்திக்கு/திறனுக்கு ஏற்றவாறு குரும்பைகளை தக்கவைத்துக் கொண்டு, இதர குரும்பைகளை உதிர செய்கிறது. உதிரக் கூடிய குரும்பைகளின் அளவை பொறுத்து இது இயற்கையானதா அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறையா என்பதை கணிக்க இயலும். அதாவது சிறிய குரும்பைகள் உதிர்வதை அனுமதிக்கலாம். சற்று பெரிய குரும்பைகள் உதிர்வு என்பது ஊட்டச்சத்து பற்றாக்குறையே ஆகும்.
  • இதனை எதிர்கொள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், தென்னை டானிக்கை உற்பத்தி செய்து தென்னை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் 2002-ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்து வருகிறது. பரிந்துரைக்கப்பட்ட உரங்களுடன் இந்த தென்னை டானிக்கை ஆறு மாதத்திற்கு ஒருமுறை என வருடத்திற்கு இரண்டு முறை வேர் வழியாக செலுத்த வேண்டும்.தென்னை டானிக் என்பது தென்னை பயிருக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளையும் உள்ளடக்கியதாகும். இதில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், இரும்பு, போரான், மாலிப்டீனம் போன்ற ஊட்டச்சத்துக்களும், சாலிசிலிக் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளும் நிறைந்துள்ளது.

தென்னை டானிக் வேர்வழி செலுத்தும் முறை:



    தென்னை மரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து சுமார் 2.5 முதல் 4 அடி தூரத்தில் 15-20 செ.மீ ஆழத்தில் உள்ள வெள்ளை அல்லது இளஞ்சிகப்பு நிற பென்சில் தடிமனுடைய ஊட்டச்சத்து வேர்களை தேர்வு செய்தல் வேண்டும்.தேர்வு செய்த வேரின் நுனி பகுதியை கத்தி அல்லது பிளேடு பயன்படுத்தி சாய்வாக சீவி எடுத்து விட்டு அதில் 200 மி.லி அளவுள்ள தென்னை டானிக் பாக்கெட்டினை இறுக்கமாக கட்டி விட வேண்டும்.அல்லது 40 மி.லி அளவு அடர் தென்னை டானிக் உடன் 160 மி.லி தண்ணீர் கலந்து மெல்லிய பாலிதின் பையில் நிரப்பி அதை வேரில் கட்டி விட வேண்டும்.தென்னை டானிக்கை வேர் வழியே உட்செலுத்தும் பொழுது மண்ணில் மிதமான ஈரப்பதமும், மரங்கள் அதிக நீர்த்தேவையுடனும் இருத்தல் வேண்டும்.தென்னை டானிக் அதிகபட்சமாக 48 மணி நேரத்தில் வேர்களால் முற்றிலுமாக உறிஞ்சிக்கொள்ளப்படும். ஒருவேளை டானிக் உறிஞ்சப்படவில்லை எனில் மாற்று வேரை தேர்வு செய்து கட்ட வேண்டும்.

பயன்கள்: 

  • இலைகளில் பச்சையத்தின் அளவு அதிகரிக்கிறது.
  • இதனால் ஒளிச்சேர்க்கை மற்றும் உணவு உற்பத்தியின் திறன் அதிகரிக்கிறது.
  • வறட்சியை தாங்கி வளரும் தன்மையை பெறுகிறது.
  • பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
  • குரும்பை உதிர்தல் குறையும்.
  • காய்கள் பெரிதாகி பருப்பு நல்ல எடை உடையதாக இருக்கும்.
  • விளைச்சல் 20 சதவீதம் அளவு அதிகமாகும்.
  • பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாக இருக்காது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


புதன், 27 நவம்பர், 2024

பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்த முறையில் உரம் இடுதல்...

  • பொதுவாக பயிர் சாகுபடியில் இரண்டு வகையான முறையில் விவசாயிகள் ஊட்டச்சத்து மேலாண்மையை மேற்கொள்கின்றனர். 
  • ஒன்று முழுக்க முழுக்க ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்தல் மற்றொன்று முழுமையாக ரசாயன உரங்களை இடாமல் சாகுபடி செய்வது. தொடர்ச்சியாக இந்த இரண்டு முறையில் ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றி வந்தால் கண்டிப்பாக பயிரின் சராசரி விளைச்சல்/ உற்பத்தி திறனை நம்மால் பெற இயலாது.
  • எனவேதான் ஒருங்கிணைந்த முறையில் உரம் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டி பரிந்துரைக்கப்படுகிறது. 
  • மிகவும் பொதுவான முறையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியது ஐந்து தொழில்நுட்பங்கள். 

பயிறு வகை பயிர்களை பயிரிடுதல்...

  • நமது பகுதிகளில் பயிரிடப்படும் பயிர் வகை பயிர்களில் ஏதேனும் ஒன்றினை வருடம் ஒரு முறை தனிப் பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ கண்டிப்பாக பயிரிட வேண்டும். 
  • வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உடன் இணைந்து பயிர்களின் வேர்களில் நிலை நிறுத்துகிறது. 
  • இதனால் ஏக்கருக்கு சுமார் ஒரு மூட்டை யூரியா இட்டது போன்ற சத்து கிடைக்கும், மண் தன்மையை மாற்றுகிறது, மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்களை பெருக்கத்தை தூண்டுகிறது, களை வளர்ச்சியை மட்டுப்படுத்துதல் என எண்ணற்ற பயனுள்ளது.

இயற்கை உரங்களை பயன்படுத்துதல்...

  • எந்த ஒரு பயிர் சாகுபடியாக இருந்தாலும் இயற்கை உரங்களை இடுவது அடிப்படை. 
  • இயற்கையாக கிடைக்கக்கூடிய கழிவுகள், பண்ணை கழிவுகள் , மக்குப் பொருட்கள், தொழு உரங்கள் என பல உள்ளது இவற்றை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். 
  • இதனால் மண்ணின் கார அமிலத்தன்மை நிலை நிறுத்தப்படுதல், அனைத்து சத்துகளையும் கிடைக்க பெறுதல், மண் தன்மை மற்றும் அமைப்பு மாறுபடுதல், நீர் பிடிப்பு மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறனை மேம்படுத்துதல், மண் ஊட்டச்சத்து சுழற்சியை உறுதி செய்தல் என எண்ணற்ற பயன்கள் உள்ளது.

ரசாயன உரங்களை பயன்படுத்துதல்...

  • பெரும்பான்மையாக நாம் வீரிய ஒட்டு பயிர்களை பயிரிடுவதால், இதன் உணவு தேவை அதிகம் மேலும் வீரிய ஓட்டுக்களின் அடிப்படை முறையான பராமரிப்பு அதற்கேற்ற மகசூல் என்பதை ஆகும். 
  • நாட்டு ரகம் அல்லது வீரிய ஒட்டு ரகம் எதுவாக இருந்தாலும் பயிர்களுக்கு தேவையான சத்துக்களை இயற்கை உரங்களால் முழுமையாக கொடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 
  • அதனாலதான் ரசாயன உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தேவையின் அடிப்படையில் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். 

உயிர் உரங்களை பயன்படுத்துதல்...

  • உயிர் உரங்கள் எந்தவித ஊட்டச்சத்துக் கொள்ளவும் பயிர்களுக்கு தருவதில்லை என்பது நாம் அறிந்ததே. 
  • இருப்பினும் மண்ணில் இருக்கக்கூடிய மற்றும் நாம் இடக்கூடிய ஊட்டச்சத்துக்களை வீணடிக்காமல் பயிர்களுக்கு எடுத்து தர மட்டுமே உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. 
  • பாக்டீரியா, புஞ்சை மற்றும் பாசி வகை உயிர் உரங்களை பயன்படுத்துவதால் வளிமண்டல தழைச்சத்தை நிலை நிறுத்துதல், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை கரைத்து பயிர்களுக்கு கிடைக்கச் செய்தல் மற்றும் நுண்ணூட்ட சத்தை கிடைக்க செய்தல் என்பது தான் இதன் அடிப்படை தொழில்நுட்பம்.

புண்ணாக்கு வகைகளை பயன்படுத்துதல்...

  • சரிவிகித அடிப்படையில் ஊட்டச்சத்தை கொடுப்பதற்கும் மண்வளத்தை நிலையாக பேணுவதற்கும் இது உதவுகிறது. 

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...   https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

தென்னையில் பென்சில் முனை சீர்குலைவிற்கான காரணங்களும் சரி செய்யும் வழிமுறைகளும்

     தென்னையில் பென்சில்முனை சீர்குலைவு என்பது  பல்வேறு காரணங்கள் ஒருங்கிணைந்து காணப்படுவதால் ஏற்படும் அறிகுறியாகும்.  இந்த வகை குறைபாடு 1970ஆண்டுகளிலிருந்து பல்வேறு நாடுகளில் பரவலாக காணப்பட்டு வந்தது. மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை, இயற்கை இடர்பாடுகள் மற்றும் பராமரிப்புக் குறைபாட்டினால் பென்சில்முனை சீர்குலை பாதிப்பு அதிகரித்த வண்ணமாகவே திகழ்கிறது.

    பென்சில்முனை சீர்குலைவிற்கான காரணங்கள்

  • நாட்பட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறை குறிப்பாக மாங்கனீசு, துத்தநாகம், மெக்னீசியம், போரான், காப்பர், பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன்.
  • பராமரிப்பற்ற வயதான மரங்கள் குறிப்பாக 60 வருடங்களுக்கு மேல் வயதுடைய மரங்கள். 
  • தொடர்ச்சியான வறட்சி/நீர்பற்றாக்குறை
  • நீண்ட நாட்களுக்கு வயலில் நீர் தேங்குதல்.
  • மண்ணில் உயிர் கரிம கார்பன் பற்றாக்குறை.
  • நுண்ணூட்ட சத்து பற்றாக்குறை.
  • சமச்சீர் அற்ற முறையில் இரசாயன உரம் இடுதல்.
  • முறையற்ற களை மேலாண்மை.
  • தீவிர பயிர் சாகுபடி முறையை மேற்கொள்ளுதல், உதாரணத்திற்கு அடர் நடவு, ஊடுபயிர் இடுதல், கலப்பு பயிரிடுதல் மற்றும் இதர.
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதல் .

    தென்னை மரங்களில் பென்சில் முனை சீர்குலைவானது மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களில் ஒன்றிற்கு  மேற்பட்ட காரணிகள் ஒருங்கிணைந்து நீண்ட நாட்களுக்கு காணப்படுவதால் உருவாகிறது.

பென்சில்முனை சீர்குலைவின் அறிகுறிகள்

  • பாதிப்படைந்த மரங்களின் தண்டுப்பகுதி மேலே செல்ல  செல்ல தடிமன் குறைந்து நுனி சிறுத்தும் காணப்படுதல்.
  • கொண்டைப்பகுதியில் பதினைந்திற்கும் குறைவான ஓலைகள்/இலைகள்  மட்டுமே  காணப்படுதல்.
  • ஓலைகள் சிறுத்தும் பச்சை நிறத்திலிருந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் மாற்றமடைந்து காணப்படும்.
  • நாளடைவில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்வடையும்.
  • மரங்கள் காய்ப்புகள் இன்றி அல்லது ஒருசில காய்களுடன் மட்டுமே காணப்படும்/
  • அதிகளவிலான குரும்பை உதிர்தல் மற்றும் ஒல்லிக்காய்கள் காணப்படுதல்.
  • தீவிர நிலையின் போது  தண்டுப்பகுதியின் நுனி முறிந்து செடிகள் இறந்து விடும். 

பென்சில்முனை சீர்குலைவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • பரிந்துரைக்கப்பட்ட அளவில் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • முறையான களை மேலாண்மை.
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இன்றி பராமரித்தல்.
  • முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்துதல்.
  • பயிர்சாகுபடி முறைக்கு ஏற்றவாறு ஊட்டச்சத்துக்களை கூடுதலாக இடுதல்.
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இடுதல்.
  • தென்னை நுண்ணூட்ட கலவையை மரத்திற்கு 500 கிராம் வீதம் வருடத்திற்கு இரண்டு முறை இட வேண்டும்.
  • கூடுதலாக மரம் ஒன்றுக்கு துத்தநாக சல்பேட் 225 கிராம், தாமிர சல்பேட் 225 கிராம், மாங்கனீசு சல்பேட் 225 கிராம், இரும்பு சல்பேட் 225 கிராம், போராக்ஸ் 225 கிராம், சோடியம் மாலிப்பிடேட் 10 கிராம் என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து மரத்தின் வேர் பகுதியில் 6 மாதத்திற்கு ஒரு முறை ஊற்ற வேண்டும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.      https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX 


செவ்வாய், 26 நவம்பர், 2024

பூசா டீ கம்போசர் (Pusa Decomposer) பயன்களும் பயன்படுத்தும் முறையும்

பூசா டீ கம்போசர் (Pusa Decomposer)...

1. வட இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிர்கள் அறுவடைக்குப் பிறகு நிலத்திலேயே இட்டு எரிக்கப்படுவதால் அதனால் ஏற்படும் மாசு மற்றும் புகை மூட்டம் பல்வேறு மாநிலங்களை பாதிப்படையை செய்கிறது அதில் நியூ டெல்லியும் ஒன்று.

2. பல்லாயிரம் கணக்கான பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிர்கள் செப்டம்பர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அறுவை செய்யப்பட்டு அதிக அளவில் எரிக்கப்படுவதால் இதனை தடுக்கவும் இந்தப் பொருட்களை நிலங்களிலேயே மக்க வைத்து நன்மை பெறவும் இந்த பூசாரி கம்போசர் 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

3. மாத்திரை வடிவில் கிடைக்கும் இந்த டீ காம்போசரில் சுமார் ஏழு வகையான நன்மை செய்யும் பூஞ்சைகள் அடங்கியிருக்கும் இதன் பிரதான பணி பண்ணை கழிவுகளை விரைந்து மக்க வைப்பதாகும்.

4. மாத்திரை வடிவில் இருக்கும் இந்த  டீகம்போசர் நான்கு எண்கள் ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் உள்ள நெற்பயிர் கழிவுகளை மக்கச் செய்யும் திறன் படைத்தது.

5. மிகக் குறைந்த விலையில் தயாரித்து வெளியிடப்படும் இந்த புசா டீ கம்போசர் பல்வேறு வட மாநிலங்களில் கொடுக்கப்பட்ட ஆய்வு செய்யப்பட்டதில் மிக விரைந்து பயிர் கழிவுகளை மக்க செய்வதால் இதனை அனைத்து பண்ணை கழிவுகளுக்கும் மக்கச் செய்ய பயன்படுத்தலாம் என அறிமுகப்படுத்தப்பட்டது.

தயார் செய்து பயன்படுத்தும் முறை:

  • ஐந்து லிட்டர் தண்ணீரில்  சுமார் 150 கிராம் நாட்டு சர்க்கரை கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைக்க இந்த தண்ணீரை நன்கு ஆற விட வேண்டும்.
  • பின்னர் இதில் சுமார் 50 கிராம் ஏதேனும் ஒரு பயிர் வகையை அரைத்து பவுடராக தயார் செய்து இதில் கலந்து கொள்ள வேண்டும்.
  • இவை இரண்டும் அதாவது வெல்லம் மற்றும் தானிய பவுடர் பூஞ்சானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி புரிகிறது.
  • இவை இரண்டையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக கலந்து கொண்டு அதில் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு தேவையான நான்கு பூசா டீ கம்போசர் மாத்திரைகளை கலந்து கொள்ள வேண்டும். இதனை நூல் சாக்கு பயன்படுத்தி மூடி வைக்க வேண்டும்.
  • நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த கலவையின் மேற்பரப்பில் அடர்த்தியான பூஞ்சை வளர்ச்சியை காண இயலும்.
  • நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் 5 லிட்டர் தண்ணீரில் 150 கிராம் நாட்டு சர்க்கரை கலந்து கொதிக்க வைத்து ஆற விட வேண்டும் பின்னர் இதனை ஏற்கனவே தயார் செய்த கலவையில் கலந்து விட வேண்டும்.
  • இதே வழிமுறையை அடுத்த இரண்டு நாட்கள் கழித்து என மொத்தம் நான்கு முறை செய்ய வேண்டும். இவ்வாறு தயார் செய்யும் பொழுது சுமார் 25 லிட்டர் திரவம் நமக்கு 12 நாட்களில் கையில் இருக்கும்.
  • இந்த திரவத்தை 475 லிட்டர் தண்ணீருடன் கலந்து 500 லிட்டர் திரவமாக மாற்ற வேண்டும். இதனை வயலில் அல்லது தனிப்பட்ட முறையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள மக்க கூடிய பண்ணை கழிவுகளில் தெளிக்க வேண்டும்.
  • இந்த முறையை பின்பற்றி பண்ணை கழிவுகளை மக்கச் செய்யும்பொழுது சுமார் ஒரு மாத காலத்தில் போதுமான அளவு மட்கி விடுவதால் அடுத்தடுத்த பயிர் சாகுபடி செய்ய எளிதாக இருக்கிறது.
  • பண்ணை கழிவுகளை எளிதில் மக்கச் செய்வதுடன் இதனால் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள், நன்மை செய்யும் உயிர்கள், மண்வளம் ஆகியவை மேம்படுகிறது.

இதர முறையில் பயன்படுத்தும் வழிமுறை: 

  • மக்கக்கூடிய பண்ணை கழிவுகளான இலை தழைகள், கால்நடை கழிவுகள், கோழி எச்சங்கள் போன்றவற்றை மக்க வைக்க சிறுசிறு துண்டுகளாக வெட்டி நிழற் பாங்கான இடத்தில் சுமார் ஒரு அடி உயரத்தில் இட்டு அதில் பூசாரி கம்போசர் தெளிக்க வேண்டும். 
  • அதேபோன்று வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தேவையான தண்ணீரில் பூசா டீ கம்போசர் தயார் செய்து வயலில் விடுவதால் எண்ணற்ற பலன் அடைய இயலும். 

நன்மைகள்: 

  • பண்ணை கழிவுகளை மிக எளிதில் மக்க வைத்து மீண்டும் உரமாக பயன்படுத்தலாம்.
  • இதனால் குறைந்த செலவில் மண்ணின் பலம் பெருகுகிறது ஏனெனில் இது அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் மண்ணிற்கு தர வல்லது. 
  • மண்ணின் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை பிடித்திருக்கும் திறன் மேம்படுகிறது. 
  • வயலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை பெருக்கமடைகிறது.
  • வயலில் வேர் சம்பந்தமான நோய்கள் தாக்குவது குறைந்துள்ளதாக பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடுகிறது.
  • உரத் தேவையினை குறைத்து சாகுபடி செலவை குறைக்கலாம். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வெள்ளி, 8 நவம்பர், 2024

மழைக்காலத்தில் ஊட்டச்சத்து பராமரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை

    தொடர்ச்சியான மழையினால்  ஏற்படும் மிகைப்படியான மண் ஈரப்பதம் காரணமாக சாகுபடியில் இருக்கும் பெரும்பான்மையான பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதை நம் குழுவில் உள்ள விவசாயிகளின் பதிவுகளை வைத்தே நாம் காண இயல்கிறது. இது எதனால் ஏற்படுகிறது இதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். 

ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கான காரணங்கள்:

1. ஆக்சிஜன் பற்றாக்குறை: 

அதிகப்படியான மண் ஈரப்பதத்தினால் போதுமான காற்றோட்டம் இல்லாததால் வேர்கள் சுவாசிக்க இயலாமல் அழுத்தத்திற்கு உட்பட்டு அதன் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுத் திறன் குறைவதால் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இது தீவிரமடையும் பொழுது வேர்கள் படிப்படியாக இறக்கவும் நேரிடும். இதனால் பயிர்கள் முற்றிலும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை.

2. ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத வண்ணம் மாறுதல்:

மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மண்ணில் காணப்படும் ஊட்டச்சத்துக்களில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு உயிர் வாழ்வதால் ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் மாறும் நிலை ஏற்படுகிறது.

3. ஊட்டச்சத்து இழப்பீடு ஏற்படுதல்:

தொடர்ச்சியான மழை மற்றும் மண் ஈரப்பதத்தினால் சத்துக்கள் அதிகம் இருக்கக்கூடிய மேல் மண் ஒரு இடங்களில் இருந்து மற்றொரு இடங்களுக்கு நகர்ந்து செல்வதாலும், தண்ணீர் மண்ணின் ஆழமான பகுதிக்கு செல்லும் பொழுது உடன் ஊட்டச்சத்துக்களையும் எடுத்து செல்வதால் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் வீணாகிறது.

4. சல்லி வேர் உற்பத்தி தடை படுதல்:

ஏற்கனவே வேர்கள் சுவாசிக்க காற்று இல்லாத நிலையில் இருப்பதால் அதன் வளர்ச்சியையும், சல்லி வேர்கள் உருவாவதையும் பெரும்பான்மையாக தடை செய்வதால் ஊட்டச்சத்துக்களையும் தண்ணீரையும் எடுத்துக் கொள்ளக்கூடிய சல்லி வேர்கள் உற்பத்தி தடைபட்டு அதனால் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளாத நிலை ஏற்படுகிறது.

5. பயிர்கள் உணவு உற்பத்தியை தடை செய்தல்:

மேலே சொல்லப்பட்ட பல்வேறு காரணங்களால் பயிர்களை ஏற்படும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள பயிர்கள் உணவு உற்பத்தி செய்வதை தடை செய்கிறது இதனால் குன்றிய பயிர் வளர்ச்சி, போதுமான பூக்கள் எடுக்காமல் இருத்தல், காய்ப்பு திறன் குறைதல் என பல நிகழ்வுகள் நடைபெறுகிறது.

6. மண்ணின் கார அமிலத்தன்மை மாறுதல்:

தொடர்ச்சியான மண் ஈரப்பதத்தினால் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பினால் மண்ணின் கார அமிலத்தன்மை மாற வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு மாற்றமடையும் பொழுது ஒரு சில ஊட்டச்சத்துக்கள் மிகப்படியாகவும் மற்ற ஊட்டச்சத்துக்கள் முற்றிலும் செடிகளுக்கு கிடைக்காத வண்ணம் மண்ணில் நிலை நிறுத்தப்படும் . இதன் காரணமாகவும் ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் பயிர்களில் அதிகமாக காணப்படும்.

7. மண் இறுக்கம் அடைதல்:

தொடர்ச்சியாக மழை பெய்யும் பொழுது மண் இருக்கும் அடைவதால் வேறு வளர்ச்சி தடைப்படும் மேலும் ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு மண்ணிலிருந்து வேர்களுக்கு இடம் மாற முடியாமல் ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறி காணப்படும்.

ஊட்டச்சத்து பராமரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை:

  • முதன்மை நிலை, இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை இலை வழியாக குறிப்பிட்ட இடைவெளியில் கொடுத்து வர வேண்டும். பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் நீங்கும் வரை.
  • பயிர்களில் பனித் தண்ணீர் அல்லது மழையினால் ஏற்பட்ட ஈரப்பதம் காணப்படும் பொழுது இலை வழி தெளிப்பு மேற்கொள்ளக் கூடாது.
  • ஊட்டச்சத்துக்களை தெளிக்கும் பொழுது உடன் ஒட்டுப் பசை சேர்த்துக் கொள்ள  வேண்டும்.
  • தெளித்த மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு மழைப்பொழிவு இருக்கக் கூடாது. ஒருவேளை மழை பெய்து விட்டால் நாம் தெளித்த ஊட்டச்சத்துக்கள் பயனளிக்காது.
  • இயற்கை முறையில்  சாகுபடி செய்பவர்கள் கண்டிப்பாக வாரம் ஒருமுறை ஊட்டச்சத்துக்களை இலை வழியாக கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்துக்காக மீன் அமிலம், பஞ்சகாவியம், ஈயம் கரைசல், கடல்பாசி உரங்கள், தேமோர் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • வேர் பகுதியில் பூஞ்சான தொற்று மற்றும் வேர் வளர்ச்சியை ஊக்கப்படுத்த உயிர் பூஞ்சான கொல்லிகள் மற்றும் வேம் அல்லது ஹுமிக் அமிலம் போன்றவற்றை வேர் பகுதியில் கொடுத்து  வர வேண்டும்.
  • ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டு காரணமாக பயிர்களின் நோய் /பூச்சி எதிர்ப்பு திறன் மிகவும் குறைந்து காணப்படுவதால் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாத வண்ணம் பயிர்களை பாதுகாக்க வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


புதன், 6 நவம்பர், 2024

பயிர் சாகுபடியில் சரிவிகித ஊட்டச்சத்து மேலாண்மையின் முக்கியத்துவம்

1.மண்ணின் வளத்தை பேணி பாதுகாப்பதற்கும், பயிர்கள் மண்ணில் இருந்து ஊட்டச்சத்தை எடுத்து விளைச்சலை கொடுப்பதற்கும் மேலும் மண்ணை சார்ந்து வாழும் நன்மை செய்யும் உயிரினங்களுக்கு மண்ணில் இருக்க கூடிய சரிவிகித ஊட்டச்சத்து அடிப்படை ஆதாரமாக  திகழ்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. 


2.வளர்ந்து வரும் மக்கள் தொகை, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுருங்கி வரும் சாகுபடி நிலப்பரப்பு என பல்வேறு காரணங்களால் குறைந்த நிலப்பரப்பில் அதிக விளைச்சலை நாம் விடுவிக்க கூடிய சூழ்நிலையில் தான் ரசாயன உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.


3.இதனால் ஆரம்ப காலத்தில் பயிர்களில் நல்ல மகசூல் கிடைத்தது என்பது உண்மைதான் அதாவது இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக மகசூல் ஆனால் நாளடைவில் இது படிப்படியாக குறைந்து தான் வருகிறது.


4.மேலே கூறப்பட்டுள்ள பல்வேறு காரணங்களினால் தான் உர பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகின்றது என்பது என்னுடைய கருத்து ஆனாலும் உரங்களுக்கு என வழங்கப்படும் மானியத்தினால் தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில உரங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது உதாரணத்திற்கு யூரியா.... இதனாலும் கூட குறிப்பிட்ட சில உரங்கள் தொடர்ச்சியாக அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.


5.அளவுக்கு அதிகமான அதாவது பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உரம் இடுதல் மண்ணின் தன்மை மாறுதல் அதாவது கார அமிலத் தன்மையில் மாற்றம்,  மண் வளம் குன்றுதல் அதாவது அதிக அளவு குறிப்பிட்ட சில சத்துக்களை கொடுப்பதால் இதர சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் மாறுதல்,  மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்கள் அழிதல், நீர்நிலைகள் பாதிப்பு, பயிர்கள் மூலமாக ரசாயனங்கள் மனிதர்களுக்கு கால்நடைகளுக்கும் செல்வதால் எண்ணற்ற தீங்கு ஏற்படுகிறது.


6.இது மட்டும் இன்றி உரங்களிலிருந்து வெளியிடப்படும் நச்சுக்களால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதைத்தான் உண்மை


7.இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாம் ஒருங்கிணைந்த முறையில் உரங்களை பயன்படுத்துதல் அல்லது முற்றிலும் ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை வழியில் சாகுபடி மேற்கொள்வது நமக்கும் நமது சந்ததியினருக்கும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படுத்த இயலும். 

ஒருங்கிணைந்த உர மேலாண்மையில் நாம் கடைபிடிக்க வேண்டியவை:

1.ரசாயன முறையில் பயிர் சாகுபடி செய்வதை தவிர்த்து விட்டு முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு படிப்படியாக மாறலாம்.


2.அவ்வாறு மாறும் பொழுது சரிவிகித ஊட்டச்சத்தை மண்ணில் கண்டிப்பாக பராமரிக்க வேண்டும் இல்லை எனில் மகசூல் இழப்பீடு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. 


3.இயற்கை முறையில் சாகுபடி செய்யும் பொழுது ஊட்டச்சத்திற்காக தொழு உரம், மண்புழு உரம், கோழி எரு, பசுந்தாள் மற்றும் பசுந்தழை பயிர்கள், ஊடு பயிரிடுதல், கலப்பு பயிர் இடுதல், பயிர் சுழற்சி, வேளாண் மட்கு பொருட்கள், புண்ணாக்கு வகைகள், அமிர்த கரைசல், ஈயம் கரைசல், வேஸ்ட் டீ கம்போசர், உயிர் உரங்கள், ஜீவாமிர்தம், பஞ்சகாவியா, மீன் அமிலம் கடல்பாசி உரங்கள் என பல்வேறு வகையான இடுபொருட்கள் நமக்கு உள்ளது. 


4.நம் பகுதியில் திகழும் மண், தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் பயிர்களுக்கு ஊட்டச்சத்து தேவையின் அளவை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு இடு பொருட்களை தொடர்ச்சியான இடைவெளியில் பயன்படுத்தும் பொழுது மண்ணின் ஊட்டச்சத்து வளம் குறையாமலும், பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து ஆரோக்கியமான உணவும் கிடைக்க வழிவகை செய்யலாம்.


5.ஒருங்கிணைந்த முறையில் பயிர் சாகுபடியே மேற்கொள்ள நினைக்கும் விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் குறைந்தபட்ச ரசாயன உரங்களையும், அதிக அளவு மற்றும் தொடர்ச்சியாக இயற்கை இடு பொருட்களையும் பயன்படுத்துவதால் மகசூல் குறையாமல் பயிர் சாகுபடி மேற்கொண்டு கொள்ளலாம்.


6.இதே வழிமுறைகளில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை யுக்திகளையும் கடைபிடிக்கலாம் சரியான திட்டமிடனும் செயல் திறனும் இருந்தால்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வியாழன், 17 அக்டோபர், 2024

மழை பருவத்தில் பருத்தி சாகுபடியில் மெக்னீசியம் ஊட்டச்சத்து மேலாண்மை

முன்னுரை: 

  • பருத்தி சாகுபடியில் ஊட்டச்சத்து வேளாண்மை என்பது மிக இன்றியமையாதது ஏனெனில் பருத்தி தொடர்ச்சியான வளர்ச்சி, பூக்கள் மற்றும் மகசூலை தரவல்லது. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பருத்தி பெரும்பான்மையான மானாவரி முறையில் சாகுபடி செய்யப்படுவதால் மழை பருவத்தில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டில் முக்கியமானதாக மெக்னீசியம் சத்து கருதப்படுகிறது.
  • பொதுவாக மெக்னீசியம் சத்து குறைபாடு பயிர்களில் பெரிய அளவு மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவதில்லை ஆனால் இங்கு மெக்னீசியம் சத்து நேரடியாக பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் இழப்பீட்டில் பிரதான பங்கு வகிப்பதால் அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

பருத்தி சாகுபடியில் மெக்னீசியம் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்:

  • இலைகளுக்கு போதுமான பச்சையத்தை கொடுத்து அதிக உணவு உற்பத்தியை மேற்கொள்ள உதவுகிறது.
  • மெக்னீசியம் ஊட்டச்சத்து முறையான அளவு பயிரில் பராமரிக்கப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ளக்கூடிய தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து பயிர்களுக்கு பயனுள்ள வடிவில் மாறும்.
  • பருத்தியில் நார்ச்சத்தை அதிகப்படுத்துவதில் இதன் பணி அளப்பரியது. 
  • சீரான மற்றும் ஒருமித்த தருணத்தில் மகசூல் பெற உதவி புரிகிறது.
  • பயிர்களுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்ய மெக்னீசியம் தூண்டுவதுடன், நோய் மற்றும் பூச்சி தாக்குதலின் போது செல் அழிவதை மீட்டு கொடுப்பதிலும், எதிர்ப்பு சக்தியையும் பயிர்களுக்கு தரக்கூடியது.
  • சரிவிகித முறையில் இதனை கொடுக்கும் பொழுது நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். 

மெக்னீசியம் குறைபாட்டு அறிகுறிகள்:

  • மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாடு பிரதானமாக பயிரின் அடி இலைகளில் அதாவது முதிர்ந்த இலைகளில் தான் காணப்படுகிறது. 
  • அடி இலைகளில் உள்ள நரம்புகள் பச்சையானதாகவும் அதற்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும் மாறும்.
  • நாளடைவில் இந்த இலையின் விளிம்புகளில் இளஞ்சிவப்பு நிற சிறு சிறு புள்ளிகள் காணப்படும்.
  • ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் பொழுது இந்த இலையின் பெரும்பான்மையான பகுதி சிகப்பு நிறமாக காட்சியளிக்கும்.
  • இதனால் பயிரின் உணவு உற்பத்தி குறைந்து குன்றிய பயிர் வளர்ச்சி, சில நேரங்களில் வாடல் மற்றும் மகசூல் இழப்பீடு பெரிய அளவில் ஏற்படுகிறது. 

மெக்னீசியம் குறைபாட்டின் காரணங்கள்:

  • பருத்தி பிரதானமாக மானாவாரியில் சாகுபடி செய்வதால் மண்ணில் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருத்தல். 
  • அதிகமான மண் இறுக்கம், மணற்பாங்கான மண் மற்றும் சீரற்ற கார அமிலத்தன்மை நிலை உடைய மண்ணில் இதை பிரதானமாக காணப்படுகிறது. 
  • பயிர்களுக்கு அதிக அளவு தழைச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம்  ஊட்டச்சத்து கொடுக்கும் பொழுது இது மெக்னீசியம் ஊட்டச்சத்து கிடைப்பதை தடை செய்கிறது. 
  • இது எல்லாம் தவிர தொடர்ச்சியான மண் ஈரப்பதம் அல்லது மழைப்பொழிவு திகழும் பொழுது மெக்னீஷியம் ஊட்டச்சத்து குறைபாடு அதிக அளவு தென்படுகிறது.

மேலாண்மை யுக்திகள்:

  • கடைசி உழவின் போது போதுமான அளவு மக்கிய தொழு அல்லது மண்புழு உரம் மற்றும் மெக்னீசியம் சல்பேட் 25 கிலோ ஆகியவற்றை ஒன்றாக கலந்து 24 மணி நேரம் கழித்து இடவேண்டும்.
  • மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு சுண்ணாம்பு இடுவதன் மூலம் மெக்னீசியம் கிடைப்பதை மேம்படுத்தலாம்.
  • மழைப் பருவத்தில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்தி, ஊட்டச்சத்து மண்ணுக்கு அடியில் செல்வதை தடுக்க வேண்டும்.
  • முதல் மற்றும் இரண்டாவது களை எடுப்பின் போது சிஎம்எஸ் எனப்படும் உரத்தை ஏக்கருக்கு ஒரு மூட்டை என இடலாம். 
  • இதர ஊட்டச்சத்துக்களை சரிவிகித அடிப்படையில் மட்டுமே கொடுக்க வேண்டும் அதிகமாக கொடுக்கக் கூடாது குறிப்பாக தழைச்சத்து மற்றும் பொட்டாசியம். 
  • தேவையின் அடிப்படையில் நீரில் கரையக்கூடிய மெக்னீசியம் சல்பேட்டை இலை வழியாக அவ்வப்போது கொடுத்து வரலாம்.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

தக்காளியில் பூ முனை அழுகல் நோய் மேலாண்மை...

இது ஒரு சில வகையான காலநிலை அழுத்தம் மற்றும் சத்து குறைபாடு காரணங்கள் ஒருங்கிணைந்து பயிர்களை தாக்குவதால் ஏற்படக்கூடிய அறிகுறி ஆகும். இது பூஞ்சான அல்லது பாக்டீரியா வகை நோய்கள் கிடையாது.

பிரதான காரணங்கள்: 

  • தக்காளி காய்களின் செல் சுவர்கள் மிகவும் கடுமையானது, இந்த செல் சுவர் அமைப்பு ஏற்படுத்துவதில் கால்சியம் ஊட்டச்சத்தின் பங்களிப்பு இன்றியமையாததாகும். 
  • காய்களில் குறிப்பிட்ட இடத்தில் கால்சியம் குறைபாடு ஏற்படுவதால் இந்த நோய் உருவாகலாம்.கால்சியம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் போது அங்கு உற்பத்தி செய்யக்கூடிய புதிய செல்கள் பாதிப்படைந்து இருப்பதால் தான் இந்த அறிகுறி உருவாகிறது. 
  • வேர் மூலமாக உறிஞ்சப்பட்டு பயிரின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீருடன் செல்லும் கால்சியம் சத்து இலைகளினால் அதிகளவு உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதால் எளிதில் பற்றாக்குறை ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வெப்பநிலை திகழும் பொழுது. இதனால் பழத்தின் செல் சுவர் உற்பத்திக்கு தேவையான கால்சியம் சத்து கிடைப்பதில்லை. 
  • அதேபோன்று போதுமான அளவு மண் ஈரப்பதம் இல்லாமல் இருத்தல், அதிக வறட்சிக்கு பிறகு திடீரென மிகப்படியான ஈரப்பதம் உருவாதல், போதுமான அளவு மண்ணில் கால்சியம் சத்து இல்லாமல் இருத்தல் போன்ற பல காரணங்களால் இந்த நோய் உருவாகலாம்.

பூ முனை அழுகல் நோயின் அறிகுறிகள்:

  • தக்காளி பயிர்கள் காய் பிடிக்க தொடங்கியது முதல் இறுதி அறுவடை வரை கூட இதன் அறிகுறி காணப்படும்.
  • ஆரம்பத்தில் காய்களில் புள்ளிகள் தென்படும். 
  • பின்னர் புள்ளிகள் சற்று விரிவடைந்து பள்ளமான அமைப்புடன் பழுப்பு நிறத்தில் பிரதானமாக காய்களின் அடிப்புறத்தில் காணப்படும். எனவே தான் இதனை பூ முனை அழுகல் நோய் என குறிப்பிடுகிறோம்.
  • நாளடைவில் புள்ளிகள் பெரிதாகி காயின் மூன்றில் ஒரு பங்கு பகுதிக்குப் பரவி விடும். 
  • பழுப்பு நிறமாக இருந்த புள்ளிகள் விரைந்து கருப்பு நிறமாக மாறிவிடும்.

  • இதனால் பாதிக்கப்பட்ட தக்காளி காய்கள் விரைவில் பழுத்து விடும் மற்றும் அதன் உட்பகுதி பாதிப்படையும்.
  • கால்சியம் சத்து குறைபாட்டால் இலைகளில் பல்வேறு வகையான அறிகுறிகள் காணப்படும் உதாரணத்திற்கு இலை விளிம்புகள் பழுப்பு முதல் சிகப்பு நிறமாக மாறுதல், இலை சுருங்குதல் மற்றும் பல.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • அடி உரமாக போதுமான அளவு நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் கால்சியம் சல்பேட் இட வேண்டும்.
  • நிலத்தை வறட்சிக்கு உட்படுத்தாமல் மிதமான ஈரப்பதத்துடன் வைத்திருந்தால் இந்த நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • நிலப் போர்வை பயன்படுத்தி சாகுபடி செய்தால் மண் வெப்பநிலையை பாதுகாப்புத்துடன் அனைத்து பகுதிகளிலும் சராசரி ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்யலாம்.
  • அதிக அளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்கவும் குறிப்பாக அம்மோனியா வகை ஏனெனில் இது கால்சியம் ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதை மட்டுப்படுத்தும். 
  • அதிக எண்ணிக்கையிலான  இலைகள் உருவாவதை தடை செய்ய வேண்டும் இல்லை எனில் கண்டிப்பாக கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். 
  • மண்ணில் போதுமான அளவு கால்சியம் கொடுக்க வேண்டும் ஏனெனில் இது நன்கு கரைந்து வேர் மூலமாக மட்டுமே பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. 
  • எனவே நாம் இலை வழியாக தெளிக்கும் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் குறைந்த அளவு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

இது போன்ற வேளாண் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


திங்கள், 26 ஆகஸ்ட், 2024

டிஏபி (DAP) உரத்தை ஏன் அடி உரமாக பயன்படுத்த வேண்டும்...

முன்னுரை:

பயிர் சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை என்பது இன்றியமையாதது. குறைந்த வாழ்நாள் உடைய பயிர் சாகுபடியில் அடி உரத்தின் பங்கு அளப்பரியது. அதாவது குறைந்த வாழ்நாளில் பயிர்களை போதுமான அளவு வளர செய்து நல்ல மகசூல் கொடுக்க ஆதாரமாக அடி உரம் இடுதல் திகழ்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட பொதுவாக டிஏபி அடி உரமாக இட  ஏன் பரிந்துரை செய்யப்படுகிறது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

டி ஏ பி உரத்தை அடி உரமாக இடுதல்:

  • டி ஏ பி என்பதை ஆங்கிலத்தில் டை அமோனியம் பாஸ்பேட் (DAP) என்பார்கள். இவற்றில் 18 % தழைச்சத்து மற்றும் 46 % மணிச்சத்து நிறைந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. 
  • இதில் இருக்கக்கூடிய மணிச்சத்து பாஸ்பேட் உள்ளதால் இதன் கரைதிறன் மிகவும் அதிகம். அதாவது மண்ணில் இட்டு போதுமான அளவு நீர் கிடைக்கப் பெற்றால் விரைந்து செடிகளுக்கு தேவையான வடிவத்தில் கிடைக்கப்பெறுகிறது.
  • எந்த ஒரு பயிரின் வேர் வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழ்வது மணிச்சத்து ஊட்டச்சத்து ஆகும். DAP -ல் இருக்கக்கூடிய மணிச்சத்து பயிர்களுக்கு விரைந்து கிடைப்பதால் தான் இதனை அடி உரமாக பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. 
  • இது மட்டுமின்றி இதில் இருக்கக்கூடிய தழைச்சத்து படிப்படியாக கரைந்து பயிர்களுக்கு தேவையான பொழுது தேவையான அளவு மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. 
  • இந்த உரத்தை பயன்படுத்துவதால் பயிர்களில் நல்ல வேர் வளர்ச்சி கிடைக்கப்பெறுகிறது. நல்ல வேர் அமைப்பு உடைய பயிர்கள் அசாதாரண சூழ்நிலையை தாங்கி வளரும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. 
  • டிஏபி உரத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு பயிரின் ஆரம்ப வளர்ச்சியின் போது வேர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்தலும் அதன் பின்பு தண்டு இலை போன்றவற்றின் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்தை கொடுத்து உதவி புரிகிறது. 

இதன் இதர பயன்கள்: 

  • மண்ணின் கார அமிலத்தன்மை தான் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை செடிக்கு கிடைக்க வழிவகை செய்கிறது. அமிலத்தன்மை அதிகமானால் பெரும்பான்மையான ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதில்லை, அதே போன்று மண்ணின் காரத்தன்மை அதிகமானால் ஊட்டச்சத்து மிகைப் பாட்டினால் ஏற்படும் அறிகுறி காணப்படும். இந்த வகையில் டிஏபி உரம் இடுவதால் மண்ணின் கார அமிலத்தன்மையை சரி செய்து சராசரியாக பராமரிக்க உதவி புரிகிறது.
  • டி ஏ பி இருக்கக்கூடிய மணிச்சத்து எளிதில் பயிர்களுக்கு கிடைப்பதால் வேர் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கிறது. இதனால் ஆரம்ப காலத்தில் ஏற்படும் வறட்சி, சத்து பற்றாக்குறை, நாற்றுகள் இறத்தல் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். 
  • இது மட்டுமின்றி நல்ல வேர் அமைப்புடைய நாற்றுகள் தனக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் நீரை தேடி எடுத்துக் கொண்டும் வறட்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து எதிர்ப்பு திறன் புரிகிறது.
  • மேலும் டி ஏ பி உரம் மற்ற உரங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் உரம் வீணாவதை வெகுவாக குறைக்கலாம்.
  • நாம் சாகுபடி செய்யும் அநேக பயிர்களுக்கும் பி ஏ பி பயன்படுத்தலாம் இதில் எந்தவித அச்சமும் தேவையில்லை. 
  • அது மட்டுமின்றி டி ஏ பி இடுதல் மண் வளம் மற்றும் அதன் அமைப்பை மேம்படுத்தி மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்களுக்கு உதவியாக தான் திகழ்கிறது என பல்வேறு ஆய்வு அறிக்கை கூறுகிறது.

இதுபோன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


ஞாயிறு, 21 ஜூலை, 2024

பயிர் சாகுபடியில் வளர்ச்சி ஊக்கியின் பயன்பாடுகள்-2

Napthyl Acetic acid:

  • செல் பிரிதல் மற்றும் நீளமாதல் நிகழ்வின் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.
  • பயிர்களில் அதிக அளவு பக்கக் கிளைகள் உருவாவதற்கு துணை புரிகிறது. குறிப்பாக பருத்தி 
  • பெரும்பான்மையான பயிர்களில் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
  • காய்கள் முதிர்ச்சி அடையும் முன்பு உதிர்வதை குறைக்கிறது. உதாரணத்திற்கு திராட்சை.
  • காய்களின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. உதாரணத்திற்கு திராட்சை, மா மற்றும் அன்னாசி பழம்
  • இதை மற்ற ரசாயன மருந்துகளுடன் பயன்படுத்தும் போது கவனம் அவசியம் அதேபோல் சற்று பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பயன்படுத்தப்பட்டால் இலை மஞ்சள் நிறமாதல், இலை உதிர்தல் மற்றும் செடிகள் வாடுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
  • வணிக ரீதியாக Planofix என்ற பெயரில் கிடைக்கப்பெறுகிறது.

Ethylene:

  • இது இயற்கையாகவே பயிரில் உற்பத்தி செய்யப்படும் ஒரு வளர்ச்சி சீராக்கியாகும். 
  • கொடி வகை காய்கறி பயிர்களில் அதிக அளவு பெண் பூக்களை தூண்ட பயன்படுத்தப்படுகிறது.
  • வணிக ரீதியாக முதிர்ந்த காய்களை பழுக்க வைக்க, ஒருமித்த நேரத்தில் பழுக்க, நிறம் மாற்றத்தை தூண்ட பயன்படுத்தப்படுகிறது குறிப்பாக வாழை.
  • அதேபோன்று ரப்பர் பப்பாளி போன்ற பயிர்களில் பால் விளைச்சலை அதிகப்படுத்த தெளிக்கப்படுகிறது.
  • வணிக ரீதியாக Ethrel என்ற பெயரில் கிடைக்கப்படுகிறது.

Chlormequat chloride:

  • பயிரின் இலை வளர்ச்சிக்கு செல்லும் ஊட்டத்தை தடை செய்து வணிக ரீதியாக தேவைப்படும் பயிரின் பாகத்திற்கு மாற்றி அனுப்புகிறது.
  • சின்ன வெங்காயம் நிலக்கடலை போன்ற மண்ணிற்கு அடியில் விலை கூடிய பயிர்களுக்கு பிரமாதமாக செயல்படுகிறது. 
  • சரியான தருணத்தில் தெளித்து வருவதால் மற்ற பயிர்களிலும் மகசூலை அதிகரிக்க உதவி புரிகிறது.
  • அதிக வறட்சி,வெள்ளம் மற்றும் பல சூழ்நிலைகளில் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
  • குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிப்பதால் மகசூலை அதிகப்படுத்தலாம். 
  • வணிக ரீதியாக Lihocin என்ற பெயரில் கிடைக்கப்பெறுகிறது.

Paclobutrazol:

  • பயிரின் இலை மற்றும் நுனிப்பகுதி அதிகம் வளர்வதை தடை செய்து ஆரோக்கியமான பயிரை உருவாக்குகிறது. இதன் மூலம் இதன் உயரத்தை குறிப்பிட்ட அளவில் வைத்திருக்க உதவுகிறது. 
  • இதனால் பெரும்பான்மையான ஊட்டச்சத்து பூ மற்றும் காய் பிடிப்பதற்கு செல்வதால் மகசூல் அதிகரிக்க உறுதுணையாக உள்ளது.
  • இதனால் காய்களின் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் அதிகரிப்பதுடன் தரமும் உயர்கிறது. 
  • உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தத்தை தாங்கி வளரும் தன்மை பெறுகிறது. 
  • வணிகரீதியாக மா, நாவல், மாதுளை, பருத்தி போன்ற பல பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது.
  • இதை ஒரு முறை பயன்படுத்தினால் மீண்டும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு பயிர்கள் தள்ளப்படலாம். 
  • வணிக ரீதியாக Cultar என்ற பெயரில் விற்கப்படுகிறது.

Triacontanol:

  • பயிர்களை நாற்றங்காலில் இருந்து பிடுங்கி வயலில் நடவு செய்யும்போது ஏற்படும் தொய்வை சரி செய்ய பயன்படுத்தலாம்.
  • அதிக வெப்பநிலை வெள்ளம் மற்றும் உப்புத் தன்மையினால் ஏற்படும் அழுத்தத்தை விடுவிக்க பயன்படுத்தப்படுகிறது. 
  • பயிரின் உணவு உற்பத்தி திறனை அதிகரித்து பயிர் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. 
  • அதிக அளவு பூக்கள் பூப்பதற்கும் பூக்கள் உதிர்வதை தடுப்பதற்கும் இதனை பயன்படுத்தலாம் எதனால் மகசூல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. 
  • வணிக ரீதியாக Vipul, Rigal என்ற பெயரில் இதனை பெற இயலும்.

2,4-D:

  • மிக மிக குறைந்த அளவு பயன்படுத்தும் போது வளர்ச்சி முக்கியமாக செயல்படுகிறது. உதாரணத்திற்கு வாழை எலுமிச்சை போன்ற பயிர்களில் குறைந்த அளவு பயன்படுத்தும் போது  பூ உதிர்தல் குறைந்து மற்றும் காய் பிடித்தல் அதிகமாகிறது.
  • மிதமான மற்றும் அதிக அளவு பயன்படுத்தும் பொழுது களைக் கொல்லியாக பயன்படுகிறது குறிப்பாக அகன்ற இலை களைகளை அப்புறப்படுத்த. 
  • இது பல்வேறு நிறுவனங்களில் கிடைக்கப்பெறுகிறது. உதாரணத்திற்கு Salix என்ற பெயரில் Atul நிறுவனத்தில் கிடைக்கப்பெறுகிறது.


வெள்ளி, 19 ஜூலை, 2024

இளநீர்/தேங்காய் தண்ணீர் ஏன் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தப்பட வேண்டும்

  • நாம் ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சிக்காக குடிக்கக்கூடிய இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர் தென்னங்காய்கள் வளர்வதற்கு போதுமான ஊட்டச்சத்தை கொடுக்கும் ஆதாரமாக திகழ்கிறது.
  • இதில் நாம் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஒன்று இளநீர் மற்றொன்று முற்றிய/விளைந்த தென்னை காய்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர். இளநீர் பொதுவாக பருகுவதற்கும் மற்றும் பல பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது ஆனால் விளைந்த காய்களில் இருந்து கிடைக்கப்பெறும் தண்ணீர் பெரும்பான்மையாக  பயன்படுத்தப்படாமல் உள்ளது.
  • இளநீரில் அதிக அளவு நோய் எதிர்ப்பு காரணிகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் இருப்பதால் பாக்கெட் மட்டும் பாட்டில்களில் நிரப்பி விற்கப்பட்டு வருகிறது.
  • ஆனால் முற்றிய தேங்காய் தண்ணீரில் தான் அதிக அளவு தாது உப்புக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், வேதியல் பொருட்கள் மற்றும் சர்க்கரை சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த தண்ணீரில் தான் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகமாக இருப்பதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது.
  • இந்தப் பண்பை அடிப்படையாகக் கொண்டு இளநீரை பல்வேறு மருத்துவ மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்துவதுடன் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்த தேங்காய் தண்ணீரில் பல்வேறு வளர்ச்சி ஊக்கிகள் (உதாரணத்திற்கு சைட்டோகைன், ஜிப்ரலிக் ஆசிட், ஆக்ஸின் மற்றும் இதர), வேதிப்பொருட்கள்,ஊட்டச்சத்துகள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ளது. 
  • இது மட்டுமின்றி பல்வேறு விதமான வகைப்படுத்தப்படாத வளர்ச்சி ஊக்கிகள் இதில் நிறைந்துள்ளதால் இதன் முழுமையான பயனை நாம் எட்ட இயலவில்லை. 

  • பன்முகத் தன்மை வாய்ந்த வளர்ச்சி ஊக்கிய கருதப்படும் Brassinostroid, jasmonates மற்றும் சில வளர்ச்சி ஊக்கிகள் இருப்பதாக பல்வேறு ஆய்வு கட்டுரைகள் குறிப்பிடுகிறது.
  • எனவே நாம் இளநீரை விவசாய பணிகளுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
  • இயக்க வழி தயாரிப்பு பொருட்களான பஞ்சகாவியா, மீன் அமிலம், ஜீவாமிர்தம், துளசி தேங்காய் கரைசல் எந்த வகை கரைசலாக இருந்தாலும் அதனை தயார் செய்வதில் இளநீரை கலந்து பயன்படுத்தலாம். 
  • இதில் இருக்கக்கூடிய வளர்ச்சி ஊக்கிகள் ஆய்வுக்கூடங்களில் திசு வளர்ப்பில் பயன்படுத்தப்படுவதால் தற்போது இளநீர் திசு வளர்ப்பு செடிகளுக்கு வேர் மற்றும் தளிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
  • களைக்கொல்லி அல்லது தவறான மருந்துகள் அடித்து பயிர்களில் ஏற்படும் அறிகுறிகளில் இருந்து மீள பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வீதம் இளநீர் கலந்து தெளிப்பதால் உடனடியாக பயிர் புத்துணர்ச்சி பெறும். 
  • இளநீரில் இருக்கும் தாது பொருட்கள் உடனடியாக பயிர்களால் எடுத்துக் கொள்ளக் கூடியதால் தொடர்ச்சியாக பயிர்களுக்கும் தெளித்து வருவதால் உர பயன்பாட்டை குறைக்க வழி வகை செய்யும்.
  • USDA ஊட்டச்சத்து தகவலின் படி 100 மில்லி லிட்டர் தேங்காய் தண்ணீரில் கீழ்க்கண்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

  • இளநீரில் இருக்கும் பல்வேறு வேதிய பொருட்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் பயிர்களை வறட்சி, அதிக தண்ணீர் தேங்குதல், நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து காத்து உதவி புரிகிறது.
  • இது மட்டும் இன்றி ஒவ்வொரு பகுதியிலிருந்து வரக்கூடிய இளநீர் ஒவ்வொரு விதமான வளர்ச்சி ஊக்கி மற்றும் வேதிய பொருட்களைக் கொண்டுள்ளதால் எந்தெந்த பகுதியிலேயே பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
  • பயிர்களில் பூ பிடித்தலை ஊக்கப்படுத்துகிறது. பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்வதை தடை செய்கிறது. 
  • மகசூலின் தரம், நிறம் மற்றும் சுவையை மாற்றி அமைத்து மேம்படுத்துகிறது தருகிறது. 
  • காய்கறி பயிர்களில் இதனை தவிப்பதால் அதிக அளவு காய் பிடிப்பதை காண இயலுகிறது எனவே இதன் எண்ணற்ற பயனை நம்மால் முழுமையாக கூற இயலாது. 

  • இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

வியாழன், 18 ஜூலை, 2024

பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள்

முன்னுரை:

  • நாம் பயிரிடும் பயிர்களின் வளர்ச்சி முதல் மகசூலின் தரம் மற்றும் அளவு வரை வளர்ச்சி ஊக்கிகளின் பங்கு இன்றியமையாததாகும். 
  • நாம் பயன்படுத்தும் வளர்ச்சி ஊக்கிகளின் அடிப்படை செயல் திறனை தெரிந்து கொண்டால் போதுமானது அதுவே பெரிய அளவில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும். இந்தப் பதிவில் ஒரு சில வளர்ச்சி ஊக்கிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

  • பெரும்பான்மையான வளர்ச்சி ஊக்கிகள் இயற்கையாகவே தாவரங்களின் வேர், தளிர், விதை என பல்வேறு பாகங்களில் மிகக் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் செயல்பாடுகளை கண்டறிந்து ஆய்வுக் கூடங்களில் உற்பத்தி செய்து வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • வளர்ச்சி ஊக்கிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று பயிரின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது மற்றொன்று வளர்ச்சியை தடை செய்து பூ அல்லது பழங்களுக்கு அதிக அளவு ஊட்டச்சத்தை கொடுக்கக் கூடியது என இரண்டாக வகைப்படுத்தலாம்.

Brassinosteroid:

  • இது ஒரு பன்முக தன்மை வாய்ந்த வளர்ச்சி ஊக்கியாக கருதப்படுகிறது.
  • செல்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்திற்கு இதர வளர்ச்சி ஊக்கியுடன் இணைந்து செயல்பட்டு பயிர் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. 
  • செல் சுவர்களின் தடிமனை அதிகப்படுத்துகிறது. 
  • விதை முளைப்புத்திறன், இளம் தளிர் மற்றும் வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 
  • பயிர்களில் மகரந்தங்களின் செயல் திறனை நீட்டித்து அதிக அளவு கருவறுதலை உறுதிப்படுத்தும். 
  • இதனால் அதிக அளவு பூக்கள் மற்றும் காய்கள் உதிர்வது தடுக்கப்படுகிறது. 
  • காய்களின் அளவு, எடை, சுவை மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. 
  • இது மட்டும் இன்றி உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தத்திலிருந்து செடிகளை சற்று விடுவிக்கிறது.
  • பெரும்பான்மையாக அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய இந்த வளர்ச்சி ஊக்கி Double என்ற பெயரில் வணிகரீதியாக கிடைக்கப் பெறுகிறது.
  • பயிர்களின் வளர்ச்சியை பொறுத்து 10 லிட்டர் தண்ணீருக்கு 5 முதல் 10  மில்லி வரை பயன்படுத்தலாம்.

Gibberlic acid:(GA3)

  • பயிர்களில் செல் பிரிதல் மற்றும் நீளமாக்குதலில் முக்கிய பங்கு வகிப்பதால் வளர்ச்சிக்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. 
  • பயிர்களில் இடைவெளியை அதிகப்படுத்துகிறது உதாரணத்திற்கு கரும்பு
  • உறக்க நிலையில் உள்ள விதைகளை முளைக்க வைக்க இதனை பயன்படுத்தி நேர்த்தி செய்யலாம். 
  • கொடி வகை காய்கறி பயிர்களில் ஆண் பூக்களை அதிகரித்து விளைச்சலை மேம்படுத்துகிறது. 
  • வாழையில் காய்கள் திரட்சியாக வளர துணை புரிகிறது. 
  • திராட்சையில் மலர் கொத்துகளை விரிவடையச் செய்வதோடு பழங்களின் எண்ணிக்கை, எடை மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. 
  • வணிக ரீதியாக paushak, progibb என பல பெயர்களில் கிடைக்கப்பெறுகிறது.

Mepiquat Chloride:


  • இது ஒரு வளர்ச்சி தடை செய்யும் மருந்தாக செயல்படுகிறது. 
  • அதாவது ஒரு சில நேரங்களில் பயிர்களால் எடுத்துக் கொள்ளக்கூடிய மொத்த ஊட்டச்சத்து பயிரின் இலை மற்றும் தண்டு வளர்ச்சிக்கு செல்லும். 
  • அதை தடை செய்து ஊட்டச்சத்துக்களை கிழங்கு பகுதிக்கு அல்லது பழங்களுக்கு மாற்றி கொடுப்பதால் விவசாயிகளுக்கு  உதவியாக திகழ்கிறது.
  • அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 
  • Chamatkar என்ற வணிக பெயரில் இது கிடைக்கப்பெறுகிறது. 
  • உதாரணத்திற்கு சின்ன வெங்காயம் அல்லது நிலக்கடலையில் அதிக அளவு தாள்/இலை வளர்ச்சி காணப்படும் பொழுது கிழங்கு பகுதிக்கு கூட்டம் பெரியளவு செல்லாமல் காய்கள் சிறிதாக காணப்படும். இது போன்ற தருணத்தில் இதை பயன்படுத்தினால் காய்கள் திரட்சியாக உருவாக துணை புரியும்.

Cytokinins:

  • பயிர்களில் வேர் வளர்ச்சியை மேம்படுத்துவதால் பயிர்கள் அதிக அளவு ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வளர்கிறது. 
  • செல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதால் வளர்ச்சியை தூண்டுகிறது. 
  • பயிர்களின் அதிக அளவு கிளைகள் அல்லது மொட்டுக்கள் பிரிய உதவி புரிகிறது. 
  • இலைகளுக்கு போதுமான அளவு பச்சயத்தை பெற்று தருகிறது. இதனால் பயிர் வளர்ச்சி திடகார்த்தமாக இருக்கும்.
  • நாம் அறுவடை செய்யும் பொருட்களின் அறுவடைக்குப் பின் இருக்கும் காலத்தை அதிகப்படுத்துகிறது. 
  • பயிரில் தூர்களின் எண்ணிக்கை, பக்க கிளை பிரிதல் என பல்வேறு பணிகளை செய்து அதிக உற்பத்தியை கொடுக்க உதவி புரிகிறது.
  • வணிக ரீதியாக Spic Cytocyme, Dhanzyme Gold என்ன பல பெயர்களில் கிடைக்கப்பெறுகிறது.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA



Recent Posts

Popular Posts