google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்: ஊட்டச்சத்து மேலாண்மை

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

ஊட்டச்சத்து மேலாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊட்டச்சத்து மேலாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 நவம்பர், 2024

மழைக்காலத்தில் ஊட்டச்சத்து பராமரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை

    தொடர்ச்சியான மழையினால்  ஏற்படும் மிகைப்படியான மண் ஈரப்பதம் காரணமாக சாகுபடியில் இருக்கும் பெரும்பான்மையான பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதை நம் குழுவில் உள்ள விவசாயிகளின் பதிவுகளை வைத்தே நாம் காண இயல்கிறது. இது எதனால் ஏற்படுகிறது இதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். 

ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கான காரணங்கள்:

1. ஆக்சிஜன் பற்றாக்குறை: 

அதிகப்படியான மண் ஈரப்பதத்தினால் போதுமான காற்றோட்டம் இல்லாததால் வேர்கள் சுவாசிக்க இயலாமல் அழுத்தத்திற்கு உட்பட்டு அதன் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுத் திறன் குறைவதால் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இது தீவிரமடையும் பொழுது வேர்கள் படிப்படியாக இறக்கவும் நேரிடும். இதனால் பயிர்கள் முற்றிலும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை.

2. ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத வண்ணம் மாறுதல்:

மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மண்ணில் காணப்படும் ஊட்டச்சத்துக்களில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு உயிர் வாழ்வதால் ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் மாறும் நிலை ஏற்படுகிறது.

3. ஊட்டச்சத்து இழப்பீடு ஏற்படுதல்:

தொடர்ச்சியான மழை மற்றும் மண் ஈரப்பதத்தினால் சத்துக்கள் அதிகம் இருக்கக்கூடிய மேல் மண் ஒரு இடங்களில் இருந்து மற்றொரு இடங்களுக்கு நகர்ந்து செல்வதாலும், தண்ணீர் மண்ணின் ஆழமான பகுதிக்கு செல்லும் பொழுது உடன் ஊட்டச்சத்துக்களையும் எடுத்து செல்வதால் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் வீணாகிறது.

4. சல்லி வேர் உற்பத்தி தடை படுதல்:

ஏற்கனவே வேர்கள் சுவாசிக்க காற்று இல்லாத நிலையில் இருப்பதால் அதன் வளர்ச்சியையும், சல்லி வேர்கள் உருவாவதையும் பெரும்பான்மையாக தடை செய்வதால் ஊட்டச்சத்துக்களையும் தண்ணீரையும் எடுத்துக் கொள்ளக்கூடிய சல்லி வேர்கள் உற்பத்தி தடைபட்டு அதனால் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளாத நிலை ஏற்படுகிறது.

5. பயிர்கள் உணவு உற்பத்தியை தடை செய்தல்:

மேலே சொல்லப்பட்ட பல்வேறு காரணங்களால் பயிர்களை ஏற்படும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள பயிர்கள் உணவு உற்பத்தி செய்வதை தடை செய்கிறது இதனால் குன்றிய பயிர் வளர்ச்சி, போதுமான பூக்கள் எடுக்காமல் இருத்தல், காய்ப்பு திறன் குறைதல் என பல நிகழ்வுகள் நடைபெறுகிறது.

6. மண்ணின் கார அமிலத்தன்மை மாறுதல்:

தொடர்ச்சியான மண் ஈரப்பதத்தினால் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பினால் மண்ணின் கார அமிலத்தன்மை மாற வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு மாற்றமடையும் பொழுது ஒரு சில ஊட்டச்சத்துக்கள் மிகப்படியாகவும் மற்ற ஊட்டச்சத்துக்கள் முற்றிலும் செடிகளுக்கு கிடைக்காத வண்ணம் மண்ணில் நிலை நிறுத்தப்படும் . இதன் காரணமாகவும் ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் பயிர்களில் அதிகமாக காணப்படும்.

7. மண் இறுக்கம் அடைதல்:

தொடர்ச்சியாக மழை பெய்யும் பொழுது மண் இருக்கும் அடைவதால் வேறு வளர்ச்சி தடைப்படும் மேலும் ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு மண்ணிலிருந்து வேர்களுக்கு இடம் மாற முடியாமல் ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறி காணப்படும்.

ஊட்டச்சத்து பராமரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை:

  • முதன்மை நிலை, இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை இலை வழியாக குறிப்பிட்ட இடைவெளியில் கொடுத்து வர வேண்டும். பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் நீங்கும் வரை.
  • பயிர்களில் பனித் தண்ணீர் அல்லது மழையினால் ஏற்பட்ட ஈரப்பதம் காணப்படும் பொழுது இலை வழி தெளிப்பு மேற்கொள்ளக் கூடாது.
  • ஊட்டச்சத்துக்களை தெளிக்கும் பொழுது உடன் ஒட்டுப் பசை சேர்த்துக் கொள்ள  வேண்டும்.
  • தெளித்த மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு மழைப்பொழிவு இருக்கக் கூடாது. ஒருவேளை மழை பெய்து விட்டால் நாம் தெளித்த ஊட்டச்சத்துக்கள் பயனளிக்காது.
  • இயற்கை முறையில்  சாகுபடி செய்பவர்கள் கண்டிப்பாக வாரம் ஒருமுறை ஊட்டச்சத்துக்களை இலை வழியாக கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்துக்காக மீன் அமிலம், பஞ்சகாவியம், ஈயம் கரைசல், கடல்பாசி உரங்கள், தேமோர் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • வேர் பகுதியில் பூஞ்சான தொற்று மற்றும் வேர் வளர்ச்சியை ஊக்கப்படுத்த உயிர் பூஞ்சான கொல்லிகள் மற்றும் வேம் அல்லது ஹுமிக் அமிலம் போன்றவற்றை வேர் பகுதியில் கொடுத்து  வர வேண்டும்.
  • ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டு காரணமாக பயிர்களின் நோய் /பூச்சி எதிர்ப்பு திறன் மிகவும் குறைந்து காணப்படுவதால் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாத வண்ணம் பயிர்களை பாதுகாக்க வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


புதன், 6 நவம்பர், 2024

பயிர் சாகுபடியில் சரிவிகித ஊட்டச்சத்து மேலாண்மையின் முக்கியத்துவம்

1.மண்ணின் வளத்தை பேணி பாதுகாப்பதற்கும், பயிர்கள் மண்ணில் இருந்து ஊட்டச்சத்தை எடுத்து விளைச்சலை கொடுப்பதற்கும் மேலும் மண்ணை சார்ந்து வாழும் நன்மை செய்யும் உயிரினங்களுக்கு மண்ணில் இருக்க கூடிய சரிவிகித ஊட்டச்சத்து அடிப்படை ஆதாரமாக  திகழ்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. 


2.வளர்ந்து வரும் மக்கள் தொகை, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுருங்கி வரும் சாகுபடி நிலப்பரப்பு என பல்வேறு காரணங்களால் குறைந்த நிலப்பரப்பில் அதிக விளைச்சலை நாம் விடுவிக்க கூடிய சூழ்நிலையில் தான் ரசாயன உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.


3.இதனால் ஆரம்ப காலத்தில் பயிர்களில் நல்ல மகசூல் கிடைத்தது என்பது உண்மைதான் அதாவது இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக மகசூல் ஆனால் நாளடைவில் இது படிப்படியாக குறைந்து தான் வருகிறது.


4.மேலே கூறப்பட்டுள்ள பல்வேறு காரணங்களினால் தான் உர பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகின்றது என்பது என்னுடைய கருத்து ஆனாலும் உரங்களுக்கு என வழங்கப்படும் மானியத்தினால் தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில உரங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது உதாரணத்திற்கு யூரியா.... இதனாலும் கூட குறிப்பிட்ட சில உரங்கள் தொடர்ச்சியாக அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.


5.அளவுக்கு அதிகமான அதாவது பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உரம் இடுதல் மண்ணின் தன்மை மாறுதல் அதாவது கார அமிலத் தன்மையில் மாற்றம்,  மண் வளம் குன்றுதல் அதாவது அதிக அளவு குறிப்பிட்ட சில சத்துக்களை கொடுப்பதால் இதர சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் மாறுதல்,  மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்கள் அழிதல், நீர்நிலைகள் பாதிப்பு, பயிர்கள் மூலமாக ரசாயனங்கள் மனிதர்களுக்கு கால்நடைகளுக்கும் செல்வதால் எண்ணற்ற தீங்கு ஏற்படுகிறது.


6.இது மட்டும் இன்றி உரங்களிலிருந்து வெளியிடப்படும் நச்சுக்களால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதைத்தான் உண்மை


7.இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாம் ஒருங்கிணைந்த முறையில் உரங்களை பயன்படுத்துதல் அல்லது முற்றிலும் ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை வழியில் சாகுபடி மேற்கொள்வது நமக்கும் நமது சந்ததியினருக்கும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படுத்த இயலும். 

ஒருங்கிணைந்த உர மேலாண்மையில் நாம் கடைபிடிக்க வேண்டியவை:

1.ரசாயன முறையில் பயிர் சாகுபடி செய்வதை தவிர்த்து விட்டு முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு படிப்படியாக மாறலாம்.


2.அவ்வாறு மாறும் பொழுது சரிவிகித ஊட்டச்சத்தை மண்ணில் கண்டிப்பாக பராமரிக்க வேண்டும் இல்லை எனில் மகசூல் இழப்பீடு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. 


3.இயற்கை முறையில் சாகுபடி செய்யும் பொழுது ஊட்டச்சத்திற்காக தொழு உரம், மண்புழு உரம், கோழி எரு, பசுந்தாள் மற்றும் பசுந்தழை பயிர்கள், ஊடு பயிரிடுதல், கலப்பு பயிர் இடுதல், பயிர் சுழற்சி, வேளாண் மட்கு பொருட்கள், புண்ணாக்கு வகைகள், அமிர்த கரைசல், ஈயம் கரைசல், வேஸ்ட் டீ கம்போசர், உயிர் உரங்கள், ஜீவாமிர்தம், பஞ்சகாவியா, மீன் அமிலம் கடல்பாசி உரங்கள் என பல்வேறு வகையான இடுபொருட்கள் நமக்கு உள்ளது. 


4.நம் பகுதியில் திகழும் மண், தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் பயிர்களுக்கு ஊட்டச்சத்து தேவையின் அளவை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு இடு பொருட்களை தொடர்ச்சியான இடைவெளியில் பயன்படுத்தும் பொழுது மண்ணின் ஊட்டச்சத்து வளம் குறையாமலும், பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து ஆரோக்கியமான உணவும் கிடைக்க வழிவகை செய்யலாம்.


5.ஒருங்கிணைந்த முறையில் பயிர் சாகுபடியே மேற்கொள்ள நினைக்கும் விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் குறைந்தபட்ச ரசாயன உரங்களையும், அதிக அளவு மற்றும் தொடர்ச்சியாக இயற்கை இடு பொருட்களையும் பயன்படுத்துவதால் மகசூல் குறையாமல் பயிர் சாகுபடி மேற்கொண்டு கொள்ளலாம்.


6.இதே வழிமுறைகளில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை யுக்திகளையும் கடைபிடிக்கலாம் சரியான திட்டமிடனும் செயல் திறனும் இருந்தால்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வியாழன், 17 அக்டோபர், 2024

மழை பருவத்தில் பருத்தி சாகுபடியில் மெக்னீசியம் ஊட்டச்சத்து மேலாண்மை

முன்னுரை: 

  • பருத்தி சாகுபடியில் ஊட்டச்சத்து வேளாண்மை என்பது மிக இன்றியமையாதது ஏனெனில் பருத்தி தொடர்ச்சியான வளர்ச்சி, பூக்கள் மற்றும் மகசூலை தரவல்லது. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பருத்தி பெரும்பான்மையான மானாவரி முறையில் சாகுபடி செய்யப்படுவதால் மழை பருவத்தில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டில் முக்கியமானதாக மெக்னீசியம் சத்து கருதப்படுகிறது.
  • பொதுவாக மெக்னீசியம் சத்து குறைபாடு பயிர்களில் பெரிய அளவு மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவதில்லை ஆனால் இங்கு மெக்னீசியம் சத்து நேரடியாக பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் இழப்பீட்டில் பிரதான பங்கு வகிப்பதால் அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

பருத்தி சாகுபடியில் மெக்னீசியம் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்:

  • இலைகளுக்கு போதுமான பச்சையத்தை கொடுத்து அதிக உணவு உற்பத்தியை மேற்கொள்ள உதவுகிறது.
  • மெக்னீசியம் ஊட்டச்சத்து முறையான அளவு பயிரில் பராமரிக்கப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ளக்கூடிய தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து பயிர்களுக்கு பயனுள்ள வடிவில் மாறும்.
  • பருத்தியில் நார்ச்சத்தை அதிகப்படுத்துவதில் இதன் பணி அளப்பரியது. 
  • சீரான மற்றும் ஒருமித்த தருணத்தில் மகசூல் பெற உதவி புரிகிறது.
  • பயிர்களுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்ய மெக்னீசியம் தூண்டுவதுடன், நோய் மற்றும் பூச்சி தாக்குதலின் போது செல் அழிவதை மீட்டு கொடுப்பதிலும், எதிர்ப்பு சக்தியையும் பயிர்களுக்கு தரக்கூடியது.
  • சரிவிகித முறையில் இதனை கொடுக்கும் பொழுது நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். 

மெக்னீசியம் குறைபாட்டு அறிகுறிகள்:

  • மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாடு பிரதானமாக பயிரின் அடி இலைகளில் அதாவது முதிர்ந்த இலைகளில் தான் காணப்படுகிறது. 
  • அடி இலைகளில் உள்ள நரம்புகள் பச்சையானதாகவும் அதற்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும் மாறும்.
  • நாளடைவில் இந்த இலையின் விளிம்புகளில் இளஞ்சிவப்பு நிற சிறு சிறு புள்ளிகள் காணப்படும்.
  • ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் பொழுது இந்த இலையின் பெரும்பான்மையான பகுதி சிகப்பு நிறமாக காட்சியளிக்கும்.
  • இதனால் பயிரின் உணவு உற்பத்தி குறைந்து குன்றிய பயிர் வளர்ச்சி, சில நேரங்களில் வாடல் மற்றும் மகசூல் இழப்பீடு பெரிய அளவில் ஏற்படுகிறது. 

மெக்னீசியம் குறைபாட்டின் காரணங்கள்:

  • பருத்தி பிரதானமாக மானாவாரியில் சாகுபடி செய்வதால் மண்ணில் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருத்தல். 
  • அதிகமான மண் இறுக்கம், மணற்பாங்கான மண் மற்றும் சீரற்ற கார அமிலத்தன்மை நிலை உடைய மண்ணில் இதை பிரதானமாக காணப்படுகிறது. 
  • பயிர்களுக்கு அதிக அளவு தழைச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம்  ஊட்டச்சத்து கொடுக்கும் பொழுது இது மெக்னீசியம் ஊட்டச்சத்து கிடைப்பதை தடை செய்கிறது. 
  • இது எல்லாம் தவிர தொடர்ச்சியான மண் ஈரப்பதம் அல்லது மழைப்பொழிவு திகழும் பொழுது மெக்னீஷியம் ஊட்டச்சத்து குறைபாடு அதிக அளவு தென்படுகிறது.

மேலாண்மை யுக்திகள்:

  • கடைசி உழவின் போது போதுமான அளவு மக்கிய தொழு அல்லது மண்புழு உரம் மற்றும் மெக்னீசியம் சல்பேட் 25 கிலோ ஆகியவற்றை ஒன்றாக கலந்து 24 மணி நேரம் கழித்து இடவேண்டும்.
  • மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு சுண்ணாம்பு இடுவதன் மூலம் மெக்னீசியம் கிடைப்பதை மேம்படுத்தலாம்.
  • மழைப் பருவத்தில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்தி, ஊட்டச்சத்து மண்ணுக்கு அடியில் செல்வதை தடுக்க வேண்டும்.
  • முதல் மற்றும் இரண்டாவது களை எடுப்பின் போது சிஎம்எஸ் எனப்படும் உரத்தை ஏக்கருக்கு ஒரு மூட்டை என இடலாம். 
  • இதர ஊட்டச்சத்துக்களை சரிவிகித அடிப்படையில் மட்டுமே கொடுக்க வேண்டும் அதிகமாக கொடுக்கக் கூடாது குறிப்பாக தழைச்சத்து மற்றும் பொட்டாசியம். 
  • தேவையின் அடிப்படையில் நீரில் கரையக்கூடிய மெக்னீசியம் சல்பேட்டை இலை வழியாக அவ்வப்போது கொடுத்து வரலாம்.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

தக்காளியில் பூ முனை அழுகல் நோய் மேலாண்மை...

இது ஒரு சில வகையான காலநிலை அழுத்தம் மற்றும் சத்து குறைபாடு காரணங்கள் ஒருங்கிணைந்து பயிர்களை தாக்குவதால் ஏற்படக்கூடிய அறிகுறி ஆகும். இது பூஞ்சான அல்லது பாக்டீரியா வகை நோய்கள் கிடையாது.

பிரதான காரணங்கள்: 

  • தக்காளி காய்களின் செல் சுவர்கள் மிகவும் கடுமையானது, இந்த செல் சுவர் அமைப்பு ஏற்படுத்துவதில் கால்சியம் ஊட்டச்சத்தின் பங்களிப்பு இன்றியமையாததாகும். 
  • காய்களில் குறிப்பிட்ட இடத்தில் கால்சியம் குறைபாடு ஏற்படுவதால் இந்த நோய் உருவாகலாம்.கால்சியம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் போது அங்கு உற்பத்தி செய்யக்கூடிய புதிய செல்கள் பாதிப்படைந்து இருப்பதால் தான் இந்த அறிகுறி உருவாகிறது. 
  • வேர் மூலமாக உறிஞ்சப்பட்டு பயிரின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீருடன் செல்லும் கால்சியம் சத்து இலைகளினால் அதிகளவு உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதால் எளிதில் பற்றாக்குறை ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வெப்பநிலை திகழும் பொழுது. இதனால் பழத்தின் செல் சுவர் உற்பத்திக்கு தேவையான கால்சியம் சத்து கிடைப்பதில்லை. 
  • அதேபோன்று போதுமான அளவு மண் ஈரப்பதம் இல்லாமல் இருத்தல், அதிக வறட்சிக்கு பிறகு திடீரென மிகப்படியான ஈரப்பதம் உருவாதல், போதுமான அளவு மண்ணில் கால்சியம் சத்து இல்லாமல் இருத்தல் போன்ற பல காரணங்களால் இந்த நோய் உருவாகலாம்.

பூ முனை அழுகல் நோயின் அறிகுறிகள்:

  • தக்காளி பயிர்கள் காய் பிடிக்க தொடங்கியது முதல் இறுதி அறுவடை வரை கூட இதன் அறிகுறி காணப்படும்.
  • ஆரம்பத்தில் காய்களில் புள்ளிகள் தென்படும். 
  • பின்னர் புள்ளிகள் சற்று விரிவடைந்து பள்ளமான அமைப்புடன் பழுப்பு நிறத்தில் பிரதானமாக காய்களின் அடிப்புறத்தில் காணப்படும். எனவே தான் இதனை பூ முனை அழுகல் நோய் என குறிப்பிடுகிறோம்.
  • நாளடைவில் புள்ளிகள் பெரிதாகி காயின் மூன்றில் ஒரு பங்கு பகுதிக்குப் பரவி விடும். 
  • பழுப்பு நிறமாக இருந்த புள்ளிகள் விரைந்து கருப்பு நிறமாக மாறிவிடும்.

  • இதனால் பாதிக்கப்பட்ட தக்காளி காய்கள் விரைவில் பழுத்து விடும் மற்றும் அதன் உட்பகுதி பாதிப்படையும்.
  • கால்சியம் சத்து குறைபாட்டால் இலைகளில் பல்வேறு வகையான அறிகுறிகள் காணப்படும் உதாரணத்திற்கு இலை விளிம்புகள் பழுப்பு முதல் சிகப்பு நிறமாக மாறுதல், இலை சுருங்குதல் மற்றும் பல.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • அடி உரமாக போதுமான அளவு நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் கால்சியம் சல்பேட் இட வேண்டும்.
  • நிலத்தை வறட்சிக்கு உட்படுத்தாமல் மிதமான ஈரப்பதத்துடன் வைத்திருந்தால் இந்த நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • நிலப் போர்வை பயன்படுத்தி சாகுபடி செய்தால் மண் வெப்பநிலையை பாதுகாப்புத்துடன் அனைத்து பகுதிகளிலும் சராசரி ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்யலாம்.
  • அதிக அளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்கவும் குறிப்பாக அம்மோனியா வகை ஏனெனில் இது கால்சியம் ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதை மட்டுப்படுத்தும். 
  • அதிக எண்ணிக்கையிலான  இலைகள் உருவாவதை தடை செய்ய வேண்டும் இல்லை எனில் கண்டிப்பாக கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். 
  • மண்ணில் போதுமான அளவு கால்சியம் கொடுக்க வேண்டும் ஏனெனில் இது நன்கு கரைந்து வேர் மூலமாக மட்டுமே பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. 
  • எனவே நாம் இலை வழியாக தெளிக்கும் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் குறைந்த அளவு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

இது போன்ற வேளாண் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


திங்கள், 26 ஆகஸ்ட், 2024

டிஏபி (DAP) உரத்தை ஏன் அடி உரமாக பயன்படுத்த வேண்டும்...

முன்னுரை:

பயிர் சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை என்பது இன்றியமையாதது. குறைந்த வாழ்நாள் உடைய பயிர் சாகுபடியில் அடி உரத்தின் பங்கு அளப்பரியது. அதாவது குறைந்த வாழ்நாளில் பயிர்களை போதுமான அளவு வளர செய்து நல்ல மகசூல் கொடுக்க ஆதாரமாக அடி உரம் இடுதல் திகழ்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட பொதுவாக டிஏபி அடி உரமாக இட  ஏன் பரிந்துரை செய்யப்படுகிறது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

டி ஏ பி உரத்தை அடி உரமாக இடுதல்:

  • டி ஏ பி என்பதை ஆங்கிலத்தில் டை அமோனியம் பாஸ்பேட் (DAP) என்பார்கள். இவற்றில் 18 % தழைச்சத்து மற்றும் 46 % மணிச்சத்து நிறைந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. 
  • இதில் இருக்கக்கூடிய மணிச்சத்து பாஸ்பேட் உள்ளதால் இதன் கரைதிறன் மிகவும் அதிகம். அதாவது மண்ணில் இட்டு போதுமான அளவு நீர் கிடைக்கப் பெற்றால் விரைந்து செடிகளுக்கு தேவையான வடிவத்தில் கிடைக்கப்பெறுகிறது.
  • எந்த ஒரு பயிரின் வேர் வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழ்வது மணிச்சத்து ஊட்டச்சத்து ஆகும். DAP -ல் இருக்கக்கூடிய மணிச்சத்து பயிர்களுக்கு விரைந்து கிடைப்பதால் தான் இதனை அடி உரமாக பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. 
  • இது மட்டுமின்றி இதில் இருக்கக்கூடிய தழைச்சத்து படிப்படியாக கரைந்து பயிர்களுக்கு தேவையான பொழுது தேவையான அளவு மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. 
  • இந்த உரத்தை பயன்படுத்துவதால் பயிர்களில் நல்ல வேர் வளர்ச்சி கிடைக்கப்பெறுகிறது. நல்ல வேர் அமைப்பு உடைய பயிர்கள் அசாதாரண சூழ்நிலையை தாங்கி வளரும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. 
  • டிஏபி உரத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு பயிரின் ஆரம்ப வளர்ச்சியின் போது வேர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்தலும் அதன் பின்பு தண்டு இலை போன்றவற்றின் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்தை கொடுத்து உதவி புரிகிறது. 

இதன் இதர பயன்கள்: 

  • மண்ணின் கார அமிலத்தன்மை தான் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை செடிக்கு கிடைக்க வழிவகை செய்கிறது. அமிலத்தன்மை அதிகமானால் பெரும்பான்மையான ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதில்லை, அதே போன்று மண்ணின் காரத்தன்மை அதிகமானால் ஊட்டச்சத்து மிகைப் பாட்டினால் ஏற்படும் அறிகுறி காணப்படும். இந்த வகையில் டிஏபி உரம் இடுவதால் மண்ணின் கார அமிலத்தன்மையை சரி செய்து சராசரியாக பராமரிக்க உதவி புரிகிறது.
  • டி ஏ பி இருக்கக்கூடிய மணிச்சத்து எளிதில் பயிர்களுக்கு கிடைப்பதால் வேர் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கிறது. இதனால் ஆரம்ப காலத்தில் ஏற்படும் வறட்சி, சத்து பற்றாக்குறை, நாற்றுகள் இறத்தல் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். 
  • இது மட்டுமின்றி நல்ல வேர் அமைப்புடைய நாற்றுகள் தனக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் நீரை தேடி எடுத்துக் கொண்டும் வறட்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து எதிர்ப்பு திறன் புரிகிறது.
  • மேலும் டி ஏ பி உரம் மற்ற உரங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் உரம் வீணாவதை வெகுவாக குறைக்கலாம்.
  • நாம் சாகுபடி செய்யும் அநேக பயிர்களுக்கும் பி ஏ பி பயன்படுத்தலாம் இதில் எந்தவித அச்சமும் தேவையில்லை. 
  • அது மட்டுமின்றி டி ஏ பி இடுதல் மண் வளம் மற்றும் அதன் அமைப்பை மேம்படுத்தி மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்களுக்கு உதவியாக தான் திகழ்கிறது என பல்வேறு ஆய்வு அறிக்கை கூறுகிறது.

இதுபோன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


ஞாயிறு, 21 ஜூலை, 2024

பயிர் சாகுபடியில் வளர்ச்சி ஊக்கியின் பயன்பாடுகள்-2

Napthyl Acetic acid:

  • செல் பிரிதல் மற்றும் நீளமாதல் நிகழ்வின் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.
  • பயிர்களில் அதிக அளவு பக்கக் கிளைகள் உருவாவதற்கு துணை புரிகிறது. குறிப்பாக பருத்தி 
  • பெரும்பான்மையான பயிர்களில் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
  • காய்கள் முதிர்ச்சி அடையும் முன்பு உதிர்வதை குறைக்கிறது. உதாரணத்திற்கு திராட்சை.
  • காய்களின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. உதாரணத்திற்கு திராட்சை, மா மற்றும் அன்னாசி பழம்
  • இதை மற்ற ரசாயன மருந்துகளுடன் பயன்படுத்தும் போது கவனம் அவசியம் அதேபோல் சற்று பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பயன்படுத்தப்பட்டால் இலை மஞ்சள் நிறமாதல், இலை உதிர்தல் மற்றும் செடிகள் வாடுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
  • வணிக ரீதியாக Planofix என்ற பெயரில் கிடைக்கப்பெறுகிறது.

Ethylene:

  • இது இயற்கையாகவே பயிரில் உற்பத்தி செய்யப்படும் ஒரு வளர்ச்சி சீராக்கியாகும். 
  • கொடி வகை காய்கறி பயிர்களில் அதிக அளவு பெண் பூக்களை தூண்ட பயன்படுத்தப்படுகிறது.
  • வணிக ரீதியாக முதிர்ந்த காய்களை பழுக்க வைக்க, ஒருமித்த நேரத்தில் பழுக்க, நிறம் மாற்றத்தை தூண்ட பயன்படுத்தப்படுகிறது குறிப்பாக வாழை.
  • அதேபோன்று ரப்பர் பப்பாளி போன்ற பயிர்களில் பால் விளைச்சலை அதிகப்படுத்த தெளிக்கப்படுகிறது.
  • வணிக ரீதியாக Ethrel என்ற பெயரில் கிடைக்கப்படுகிறது.

Chlormequat chloride:

  • பயிரின் இலை வளர்ச்சிக்கு செல்லும் ஊட்டத்தை தடை செய்து வணிக ரீதியாக தேவைப்படும் பயிரின் பாகத்திற்கு மாற்றி அனுப்புகிறது.
  • சின்ன வெங்காயம் நிலக்கடலை போன்ற மண்ணிற்கு அடியில் விலை கூடிய பயிர்களுக்கு பிரமாதமாக செயல்படுகிறது. 
  • சரியான தருணத்தில் தெளித்து வருவதால் மற்ற பயிர்களிலும் மகசூலை அதிகரிக்க உதவி புரிகிறது.
  • அதிக வறட்சி,வெள்ளம் மற்றும் பல சூழ்நிலைகளில் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
  • குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிப்பதால் மகசூலை அதிகப்படுத்தலாம். 
  • வணிக ரீதியாக Lihocin என்ற பெயரில் கிடைக்கப்பெறுகிறது.

Paclobutrazol:

  • பயிரின் இலை மற்றும் நுனிப்பகுதி அதிகம் வளர்வதை தடை செய்து ஆரோக்கியமான பயிரை உருவாக்குகிறது. இதன் மூலம் இதன் உயரத்தை குறிப்பிட்ட அளவில் வைத்திருக்க உதவுகிறது. 
  • இதனால் பெரும்பான்மையான ஊட்டச்சத்து பூ மற்றும் காய் பிடிப்பதற்கு செல்வதால் மகசூல் அதிகரிக்க உறுதுணையாக உள்ளது.
  • இதனால் காய்களின் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் அதிகரிப்பதுடன் தரமும் உயர்கிறது. 
  • உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தத்தை தாங்கி வளரும் தன்மை பெறுகிறது. 
  • வணிகரீதியாக மா, நாவல், மாதுளை, பருத்தி போன்ற பல பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது.
  • இதை ஒரு முறை பயன்படுத்தினால் மீண்டும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு பயிர்கள் தள்ளப்படலாம். 
  • வணிக ரீதியாக Cultar என்ற பெயரில் விற்கப்படுகிறது.

Triacontanol:

  • பயிர்களை நாற்றங்காலில் இருந்து பிடுங்கி வயலில் நடவு செய்யும்போது ஏற்படும் தொய்வை சரி செய்ய பயன்படுத்தலாம்.
  • அதிக வெப்பநிலை வெள்ளம் மற்றும் உப்புத் தன்மையினால் ஏற்படும் அழுத்தத்தை விடுவிக்க பயன்படுத்தப்படுகிறது. 
  • பயிரின் உணவு உற்பத்தி திறனை அதிகரித்து பயிர் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. 
  • அதிக அளவு பூக்கள் பூப்பதற்கும் பூக்கள் உதிர்வதை தடுப்பதற்கும் இதனை பயன்படுத்தலாம் எதனால் மகசூல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. 
  • வணிக ரீதியாக Vipul, Rigal என்ற பெயரில் இதனை பெற இயலும்.

2,4-D:

  • மிக மிக குறைந்த அளவு பயன்படுத்தும் போது வளர்ச்சி முக்கியமாக செயல்படுகிறது. உதாரணத்திற்கு வாழை எலுமிச்சை போன்ற பயிர்களில் குறைந்த அளவு பயன்படுத்தும் போது  பூ உதிர்தல் குறைந்து மற்றும் காய் பிடித்தல் அதிகமாகிறது.
  • மிதமான மற்றும் அதிக அளவு பயன்படுத்தும் பொழுது களைக் கொல்லியாக பயன்படுகிறது குறிப்பாக அகன்ற இலை களைகளை அப்புறப்படுத்த. 
  • இது பல்வேறு நிறுவனங்களில் கிடைக்கப்பெறுகிறது. உதாரணத்திற்கு Salix என்ற பெயரில் Atul நிறுவனத்தில் கிடைக்கப்பெறுகிறது.


வெள்ளி, 19 ஜூலை, 2024

இளநீர்/தேங்காய் தண்ணீர் ஏன் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தப்பட வேண்டும்

  • நாம் ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சிக்காக குடிக்கக்கூடிய இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர் தென்னங்காய்கள் வளர்வதற்கு போதுமான ஊட்டச்சத்தை கொடுக்கும் ஆதாரமாக திகழ்கிறது.
  • இதில் நாம் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஒன்று இளநீர் மற்றொன்று முற்றிய/விளைந்த தென்னை காய்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர். இளநீர் பொதுவாக பருகுவதற்கும் மற்றும் பல பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது ஆனால் விளைந்த காய்களில் இருந்து கிடைக்கப்பெறும் தண்ணீர் பெரும்பான்மையாக  பயன்படுத்தப்படாமல் உள்ளது.
  • இளநீரில் அதிக அளவு நோய் எதிர்ப்பு காரணிகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் இருப்பதால் பாக்கெட் மட்டும் பாட்டில்களில் நிரப்பி விற்கப்பட்டு வருகிறது.
  • ஆனால் முற்றிய தேங்காய் தண்ணீரில் தான் அதிக அளவு தாது உப்புக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், வேதியல் பொருட்கள் மற்றும் சர்க்கரை சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த தண்ணீரில் தான் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகமாக இருப்பதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது.
  • இந்தப் பண்பை அடிப்படையாகக் கொண்டு இளநீரை பல்வேறு மருத்துவ மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்துவதுடன் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்த தேங்காய் தண்ணீரில் பல்வேறு வளர்ச்சி ஊக்கிகள் (உதாரணத்திற்கு சைட்டோகைன், ஜிப்ரலிக் ஆசிட், ஆக்ஸின் மற்றும் இதர), வேதிப்பொருட்கள்,ஊட்டச்சத்துகள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ளது. 
  • இது மட்டுமின்றி பல்வேறு விதமான வகைப்படுத்தப்படாத வளர்ச்சி ஊக்கிகள் இதில் நிறைந்துள்ளதால் இதன் முழுமையான பயனை நாம் எட்ட இயலவில்லை. 

  • பன்முகத் தன்மை வாய்ந்த வளர்ச்சி ஊக்கிய கருதப்படும் Brassinostroid, jasmonates மற்றும் சில வளர்ச்சி ஊக்கிகள் இருப்பதாக பல்வேறு ஆய்வு கட்டுரைகள் குறிப்பிடுகிறது.
  • எனவே நாம் இளநீரை விவசாய பணிகளுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
  • இயக்க வழி தயாரிப்பு பொருட்களான பஞ்சகாவியா, மீன் அமிலம், ஜீவாமிர்தம், துளசி தேங்காய் கரைசல் எந்த வகை கரைசலாக இருந்தாலும் அதனை தயார் செய்வதில் இளநீரை கலந்து பயன்படுத்தலாம். 
  • இதில் இருக்கக்கூடிய வளர்ச்சி ஊக்கிகள் ஆய்வுக்கூடங்களில் திசு வளர்ப்பில் பயன்படுத்தப்படுவதால் தற்போது இளநீர் திசு வளர்ப்பு செடிகளுக்கு வேர் மற்றும் தளிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
  • களைக்கொல்லி அல்லது தவறான மருந்துகள் அடித்து பயிர்களில் ஏற்படும் அறிகுறிகளில் இருந்து மீள பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வீதம் இளநீர் கலந்து தெளிப்பதால் உடனடியாக பயிர் புத்துணர்ச்சி பெறும். 
  • இளநீரில் இருக்கும் தாது பொருட்கள் உடனடியாக பயிர்களால் எடுத்துக் கொள்ளக் கூடியதால் தொடர்ச்சியாக பயிர்களுக்கும் தெளித்து வருவதால் உர பயன்பாட்டை குறைக்க வழி வகை செய்யும்.
  • USDA ஊட்டச்சத்து தகவலின் படி 100 மில்லி லிட்டர் தேங்காய் தண்ணீரில் கீழ்க்கண்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

  • இளநீரில் இருக்கும் பல்வேறு வேதிய பொருட்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் பயிர்களை வறட்சி, அதிக தண்ணீர் தேங்குதல், நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து காத்து உதவி புரிகிறது.
  • இது மட்டும் இன்றி ஒவ்வொரு பகுதியிலிருந்து வரக்கூடிய இளநீர் ஒவ்வொரு விதமான வளர்ச்சி ஊக்கி மற்றும் வேதிய பொருட்களைக் கொண்டுள்ளதால் எந்தெந்த பகுதியிலேயே பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
  • பயிர்களில் பூ பிடித்தலை ஊக்கப்படுத்துகிறது. பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்வதை தடை செய்கிறது. 
  • மகசூலின் தரம், நிறம் மற்றும் சுவையை மாற்றி அமைத்து மேம்படுத்துகிறது தருகிறது. 
  • காய்கறி பயிர்களில் இதனை தவிப்பதால் அதிக அளவு காய் பிடிப்பதை காண இயலுகிறது எனவே இதன் எண்ணற்ற பயனை நம்மால் முழுமையாக கூற இயலாது. 

  • இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

வியாழன், 18 ஜூலை, 2024

பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள்

முன்னுரை:

  • நாம் பயிரிடும் பயிர்களின் வளர்ச்சி முதல் மகசூலின் தரம் மற்றும் அளவு வரை வளர்ச்சி ஊக்கிகளின் பங்கு இன்றியமையாததாகும். 
  • நாம் பயன்படுத்தும் வளர்ச்சி ஊக்கிகளின் அடிப்படை செயல் திறனை தெரிந்து கொண்டால் போதுமானது அதுவே பெரிய அளவில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும். இந்தப் பதிவில் ஒரு சில வளர்ச்சி ஊக்கிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

  • பெரும்பான்மையான வளர்ச்சி ஊக்கிகள் இயற்கையாகவே தாவரங்களின் வேர், தளிர், விதை என பல்வேறு பாகங்களில் மிகக் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் செயல்பாடுகளை கண்டறிந்து ஆய்வுக் கூடங்களில் உற்பத்தி செய்து வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • வளர்ச்சி ஊக்கிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று பயிரின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது மற்றொன்று வளர்ச்சியை தடை செய்து பூ அல்லது பழங்களுக்கு அதிக அளவு ஊட்டச்சத்தை கொடுக்கக் கூடியது என இரண்டாக வகைப்படுத்தலாம்.

Brassinosteroid:

  • இது ஒரு பன்முக தன்மை வாய்ந்த வளர்ச்சி ஊக்கியாக கருதப்படுகிறது.
  • செல்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்திற்கு இதர வளர்ச்சி ஊக்கியுடன் இணைந்து செயல்பட்டு பயிர் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. 
  • செல் சுவர்களின் தடிமனை அதிகப்படுத்துகிறது. 
  • விதை முளைப்புத்திறன், இளம் தளிர் மற்றும் வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 
  • பயிர்களில் மகரந்தங்களின் செயல் திறனை நீட்டித்து அதிக அளவு கருவறுதலை உறுதிப்படுத்தும். 
  • இதனால் அதிக அளவு பூக்கள் மற்றும் காய்கள் உதிர்வது தடுக்கப்படுகிறது. 
  • காய்களின் அளவு, எடை, சுவை மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. 
  • இது மட்டும் இன்றி உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தத்திலிருந்து செடிகளை சற்று விடுவிக்கிறது.
  • பெரும்பான்மையாக அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய இந்த வளர்ச்சி ஊக்கி Double என்ற பெயரில் வணிகரீதியாக கிடைக்கப் பெறுகிறது.
  • பயிர்களின் வளர்ச்சியை பொறுத்து 10 லிட்டர் தண்ணீருக்கு 5 முதல் 10  மில்லி வரை பயன்படுத்தலாம்.

Gibberlic acid:(GA3)

  • பயிர்களில் செல் பிரிதல் மற்றும் நீளமாக்குதலில் முக்கிய பங்கு வகிப்பதால் வளர்ச்சிக்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. 
  • பயிர்களில் இடைவெளியை அதிகப்படுத்துகிறது உதாரணத்திற்கு கரும்பு
  • உறக்க நிலையில் உள்ள விதைகளை முளைக்க வைக்க இதனை பயன்படுத்தி நேர்த்தி செய்யலாம். 
  • கொடி வகை காய்கறி பயிர்களில் ஆண் பூக்களை அதிகரித்து விளைச்சலை மேம்படுத்துகிறது. 
  • வாழையில் காய்கள் திரட்சியாக வளர துணை புரிகிறது. 
  • திராட்சையில் மலர் கொத்துகளை விரிவடையச் செய்வதோடு பழங்களின் எண்ணிக்கை, எடை மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. 
  • வணிக ரீதியாக paushak, progibb என பல பெயர்களில் கிடைக்கப்பெறுகிறது.

Mepiquat Chloride:


  • இது ஒரு வளர்ச்சி தடை செய்யும் மருந்தாக செயல்படுகிறது. 
  • அதாவது ஒரு சில நேரங்களில் பயிர்களால் எடுத்துக் கொள்ளக்கூடிய மொத்த ஊட்டச்சத்து பயிரின் இலை மற்றும் தண்டு வளர்ச்சிக்கு செல்லும். 
  • அதை தடை செய்து ஊட்டச்சத்துக்களை கிழங்கு பகுதிக்கு அல்லது பழங்களுக்கு மாற்றி கொடுப்பதால் விவசாயிகளுக்கு  உதவியாக திகழ்கிறது.
  • அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 
  • Chamatkar என்ற வணிக பெயரில் இது கிடைக்கப்பெறுகிறது. 
  • உதாரணத்திற்கு சின்ன வெங்காயம் அல்லது நிலக்கடலையில் அதிக அளவு தாள்/இலை வளர்ச்சி காணப்படும் பொழுது கிழங்கு பகுதிக்கு கூட்டம் பெரியளவு செல்லாமல் காய்கள் சிறிதாக காணப்படும். இது போன்ற தருணத்தில் இதை பயன்படுத்தினால் காய்கள் திரட்சியாக உருவாக துணை புரியும்.

Cytokinins:

  • பயிர்களில் வேர் வளர்ச்சியை மேம்படுத்துவதால் பயிர்கள் அதிக அளவு ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வளர்கிறது. 
  • செல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதால் வளர்ச்சியை தூண்டுகிறது. 
  • பயிர்களின் அதிக அளவு கிளைகள் அல்லது மொட்டுக்கள் பிரிய உதவி புரிகிறது. 
  • இலைகளுக்கு போதுமான அளவு பச்சயத்தை பெற்று தருகிறது. இதனால் பயிர் வளர்ச்சி திடகார்த்தமாக இருக்கும்.
  • நாம் அறுவடை செய்யும் பொருட்களின் அறுவடைக்குப் பின் இருக்கும் காலத்தை அதிகப்படுத்துகிறது. 
  • பயிரில் தூர்களின் எண்ணிக்கை, பக்க கிளை பிரிதல் என பல்வேறு பணிகளை செய்து அதிக உற்பத்தியை கொடுக்க உதவி புரிகிறது.
  • வணிக ரீதியாக Spic Cytocyme, Dhanzyme Gold என்ன பல பெயர்களில் கிடைக்கப்பெறுகிறது.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA



சனி, 22 ஜூன், 2024

தென்னையில் போரான் ஊட்டச்சத்து மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை

தென்னையில் போரான் ஊட்டச்சத்து மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை:

  • அனைத்து வகையான மண்ணிலும் இதன் குறைபாடு தென்படும்.
  • எந்த வயதுடைய தென்னம் பிள்ளை அல்லது மரமாக இருந்தாலும் போரான் ஊட்டச்சத்து குறைபாடு கண்டிப்பாக தெரியும்.
  • நமது வயலில் போரான் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிய கண்டிப்பாக மண் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • மண் பரிசோதனையில் போரான் அளவு 0.30 ppm என்ற அளவிற்கு குறைவாக இருந்தால் மட்டுமே அதனை பற்றாக்குறை உள்ள மண் என்று தீர்மானிக்கலாம். 
  • போரான் பற்றாக்குறை உள்ள மண்ணில் இருக்கும் தென்னை மரங்கள் அல்லது பிள்ளைகள் உடனடியாக அறிகுறிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  • மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 8 மட்டுமே இருக்க வேண்டும். அதற்கும் குறைவாக இல்லை அதிகமாக இருக்கும் மண்ணில் கண்டிப்பாக போரான் ஊட்டச்சத்துக் குறைபாடு தென்படும். 
  • எனவே கார அமிலத்தன்மையை நடுநிலையாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • தொடர்ச்சியாக மழை பெய்யும் பொழுது போரான் ஊட்டச்சத்து மண்ணிற்கு அடியில் செல்வதால் அதனை தடுக்க ஏதுவாக போதுமான வடிகால் வசதி மற்றும் நீரை சேமித்து வைத்திருக்க கூடிய மண்புழு உரம், நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மூடாக்கு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். 
  • மண்ணை இறுக விடுவதால் அதில் இருக்கக்கூடிய சத்து செடிகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே அதற்கேற்றவாறு ஏதேனும் பயிர் சாகுபடி செய்து குறிப்பாக பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்தால் மண்வளம் பெருகும்.
  • இயற்கையாகவே மண்ணில் போரான் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் அதனை செடிகளுக்கு கிடைக்க ஏதுவாக வேஷ்டி கம்போசர் அல்லது இயற்கை வழி தயாரிப்பு திரவங்களான ஈ எம் கரைசல், ஜீவாமிர்தம் பஞ்சகாவியா போன்றவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.
  • பொதுவாக நமது வயலில் வளரக்கூடிய அனைத்து களை செடிகளும் ஊட்டச்சத்து மிகுந்தது எனவே அவற்றை பிடுங்கி சிறு துண்டுகளாக வெட்டி செடிகளுக்கு இட்டு நீர் பாய்ச்சலாம்.
  • மண் அல்லது பயிர்களுக்கு அதிக அளவு பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஊட்டச்சத்து கொடுத்தாலும் போரான் பயிர்களுக்கு கிடைக்காது. எனவே சரிவிகித ஊட்டச்சத்து மேலாண்மை இன்றியமையாததாகும். 
  • எருக்கு கரைசல் அல்லது எருக்கு செடிகளை சிறு துண்டுகளாக வெட்டி தென்னையின் தண்டுப் பகுதியிலிருந்து ஒரு மீட்டர் தள்ளி மண்ணில் இட்டு நீர் பாய்ச்சலாம். 
  • போரான் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்தின் எந்த ஒரு பாகமும் அதன் இயல்பு நிலைக்கு திரும்பாது. 
  • அதேபோன்று இழை வழியாகவோ அல்லது வேர் வழியாகவோ போரான் ஊட்டச்சத்து கொடுத்த பிறகு உடனடியாக அதன் செயல்பாடு இருக்காது. மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் பயிரில் அதன் குறைபாட்டால் தோன்றும் அறிகுறிகள் குறையும்.
  • உரக்கடைகளில் பல்வேறு வடிவங்களில் போரான் ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுகிறது உதாரணத்திற்கு Disodium octaborate, Boric acid, Sodium tetraborate மற்றும் பல. 
  • இந்த வகை போரான் வடிவத்தை ரசாயன உரம் அல்லது மருந்துகளுடன் கலந்து தெளிக்கலாம் அல்லது மண்ணில் இடலாம். 
  • தென்னை மரங்களை அதிக அளவு காய்ச்சலில் விட்டாலும் போரான் ஊட்டச்சத்து பயிர்களுக்கு கிடைக்காது. எனவே போதுமான ஈரப்பதம் இருக்கும் பொழுது இதனை இடுவது சிறந்தது.
  • அதிக அளவு போரான் ஊட்டச்சத்து கொடுப்பதும் தவறான செயலாகும் இது பயிர்களில் நச்சுத்தன்மை அறிகுறியை ஏற்படுத்தும் அது போன்ற தருணத்தில் போதுமான அளவு துத்தநாகம் பயன்படுத்தினால் போரான் செயல்பாட்டை குறைக்கலாம்.
  • குருணை பவுடர் மற்றும் திரவ வடிவில் போரான் ஊட்டச்சத்தை கிடைக்கப்பெறுகிறது அதனை பரிந்துரைக்கப்பட்ட செடிகளுக்கு இடுவதால் வெகுவாக இதன் பற்றாக்குறையில் இருந்து விடுபடலாம்.

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


தென்னையில் போரான் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்

முன்னுரை:

  • தென்னை சாகுபடியில் பிரதானமாக தழைச்சத்து,மணிச்சத்து, சாம்பல் சத்து, போரான், மாங்கனிசு மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டு அறிகுறிகள் தென்படுகிறது. இதில் நுண்ணூட்ட சத்தான போரான் தென்னையின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் அறிகுறிகளை வெளிப்படுத்துவதுடன் மகசூல் இழப்பீட்டை பெரிய அளவில் ஏற்படுகிறது. 
  • இயற்கையாகவே மண், தண்ணீர், பாறை, மணல் போன்றவற்றில் போரான் ஊட்டச்சத்து மிகக் குறைந்த அளவில் உள்ளது. எனவே இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான மண்  வகைகளில் போரான் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகவே கருதப்படுகிறது.

தென்னையில் சாகுபடியில் போரான் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட காரணங்கள்:

  • தேவையான அளவு போரான் ஊட்டச்சத்து இடாமல் இருத்தல்.
  • தொடர் மழையினால் மண்ணில் இருக்கக்கூடிய போரான் வேர்களுக்கு கிடைக்காத வண்ணம் மண்ணுக்கு அடியில் செல்லுதல். 
  • மணல் அமைப்பு உடைய மண் வகைகளில் போரான் கிடைக்கப் பெறாத வண்ணம் இருத்தல்.
  • மண்ணின் கார அமிலத்தன்மை அதிகமாக இருத்தல். அதாவது pH 7.5க்கு மேல் செல்லும் பொழுது இதன் பற்றாக்குறை தென்படும்.
  • தொடர்ச்சியாக பயிரை வறட்சியில் அல்லது நீர் பற்றாக்குறையில் விடும் பொழுது மண்ணில் இருக்கக்கூடிய போரான் ஊட்டச்சத்து செடிகளுக்கு கிடைக்காமல் மண் துகள்களுடன் ஒட்டிக் கொள்ளுதல். 
  • அதிகளவு பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஊட்டச்சத்து இடுவதால் போரான் செடிகளுக்கு கிடைக்கப் பெறாது.

போரான் பற்றாக்குறையின் அறிகுறிகள்:

இலைப் பகுதியில் காணப்படும் அறிகுறிகள்:

  • பொதுவாக போரான் ஊட்டச்சத்து பயிர்களில் அதிக அளவு ஊடுருவி செல்வதில்லை எனவே இதன் பற்றாக்குறை பயிரின் குருத்துப் பகுதியில் அதிகம் தென்படுகிறது.
  • முழுமையாகத் திறக்கப்படாத நுனி இலைகள் வளைந்து நெளிந்து காணப்படுதல். 
  • இந்த இலைகளின் நடு நரம்பு மற்றும் இலை காம்பும் வளைந்து நெளிந்து காணப்படும்.
  • குருத்துப் பகுதியில் தோன்றும் இலைகளின் எண்ணிக்கை குறைவதுடன் இலை காம்பின் நீளம் குறைந்து காணப்படும். அரிதாக குருத்துப் பகுதியில் குறைந்த நீளம் மற்றும் குறைந்த இடைவெளியில் அதிக எண்ணிக்கையிலான ஓலைகளை காண இயலும்.
  • ஓலைகளின் ஒரு பக்கத்தில் உள்ள இலைகள் ஊக்கு போன்று வளைந்து காணப்படும் இதில் சில நேரங்களில் பிசின் காணப்படலாம். மிகவும் அரிதாக இலைகள் இரண்டு முறை வளைந்து இரண்டு ஊக்குகள் இருப்பது போன்று காட்சி அளிக்கும்.
  • சில நேரங்களில் ஓலைகளில் உள்ள அனைத்து இலைகளும் உதிர்ந்து குச்சி போன்று காட்சியளிக்கும். ஓலைகளின் ஒரு புறத்தில் உள்ள இலைகள் மட்டும் கூட உதிரும்.
  • ஓலைகளின் நுனிப்பகுதி கருகி ஒடிந்து தொங்கும்.
  • ஓலைகள் விசிறி அமைப்பு போன்றும், படகு அமைப்பு போன்றும், துடைப்பம் போன்றும், மீன்களின் எலும்பு அமைப்பு தோன்றும் கூட சில நேரங்களில் அறிகுறிகள் காணப்படலாம்.

பாலை மற்றும் காய்களில் தோன்றும் அறிகுறிகள்:

  • குருத்துப் பகுதியில் குன்றிய வளர்ச்சி காணப்படும், குருத்துப் பகுதி ஒரு புறமாக சாய்தல்.
  • குருத்து பகுதியில் அழுகல் அல்லது காய்தல் தென்படலாம்.
  • பாலையில் உள்ள பூங்கொத்துகளில் எண்ணற்ற கிளைகள் அடர்த்தியாக தோன்றும். 
  • சிதைவடைந்த பூங்கொத்து காணப்படுதல்.
  • பாலை விரிந்தவுடன் பூங்கொத்துகள் கருப்பு நிறமாக மாற்றமடைந்து உதிர்தல். 
  • பூங்கொத்துகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் பெண் மலர்கள் காணப்படுதல். 
  • குரும்பை உதிர்தல் ஒரு சில குரும்பை மட்டுமே காணப்படுதல்.
  • ஒல்லி காய்கள் தோன்றுதல்.
  • காய்களில் பருப்புகள் இல்லாமல் இருத்தல், அரைகுறையாக உருவாதல் அல்லது ஒழுங்கற்ற வடிவில் உருவாதல்.
  • மட்டையில் வெடிப்புகள் தோன்றுதல். 
  • மட்டையில் வெடிப்புகள் இல்லையெனில் உரித்த காய்களில் வெடிப்புகள் காணப்படலாம். இந்த வெடிப்புகள் நீள் வட்ட வடிவில் இருக்கும்.
  • மட்டையில் திட்டு திட்டாக கருப்பு நிற மாற்றத்தை காண இயலும்.
  • பருப்புகள் நிறமாற்றம் அடைதல், ஒழுங்கற்ற வடிவ காய்கள், பாலையில் சிறிய மற்றும் பெரிய காய்கள் ஒரே நேரத்தில் தென் படுதல்.

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்....

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வியாழன், 20 ஜூன், 2024

நிலக்கடலையில் துத்தநாக ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்

முன்னுரை:

  • இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் எண்ணெய் வித்துப் பயிர்களில் மிகவும் முக்கியமானது நிலக்கடலை. உலக அளவில் இந்தியா நிலக்கடலை சாகுபடியில் முதலிடம் வகித்தாலும் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் வகிக்கிறது. 
  • நிலக்கடலையில் இந்தியாவின் சராசரி உற்பத்தி திறன் 1400 கிலோ/ஹெக்டேர் ஆகும்.தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை 70 சதவீதம் மானாவாரியிலும் முப்பது சதவீதம் இறவையிலும் சாகுபடி செய்யப்படுகிறது.

நிலக்கடலையில் துத்தநாகம் ஊட்டச்சத்தின் பற்றாக்குறை அறிகுறிகள்:


  • நுனி இலைகளின் மைய நரம்பு பகுதியில் இருந்து விளிம்புகளை நோக்கி மஞ்சள் நிற நிற மாற்றத்தை காண இயலும். 
  • மைய மற்றும் இதர இலை நரம்புகள் பச்சை நிறமாகவே இருக்கும். 
  • சில நேரங்களில் வெளிர் பழுப்பு நிற இலை புள்ளிகள் காணப்படும்.
  • இலையின் அடிப்புரத்தில் உள்ள இலை நரம்புகள் நிறம் மாறி வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
  • குன்றிய பயிர் வளர்ச்சி 
  • மற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறுவதில் பின்னடைவு. 
  • மகசூலின் அளவு மற்றும் தரத்தில் பாதிப்பு ஏற்படுதல்.

துத்தநாகம் ஊட்டச்சத்தின் பணிகள்:

வேர் வளர்ச்சி:

துத்தநாகம் நிலக்கடலையில் பல்வேறு வளர்ச்சிதை மாற்றம் மற்றும் நொதிகளை ஊக்குவித்து வேர் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ துத்தநாகம் சல்பேட் இடுவதால் பயிரின் ஆரம்ப நிலையில் வேர்களின் எண்ணிக்கை, அடர்த்தி மற்றும் அது ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ளும் திறனை அதிகப்படுத்தி நல்ல பயிர் வளர்ச்சியை காண இயலும். எனவே அடி உரமாக எந்தவித மண்ணாக இருந்தாலும் மண் பரிசோதனையின் அடிப்படையில் ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ இடலாம்.

பயிர் வளர்ச்சியை அதிகரித்தல்: 

நிலக்கடலை பயிருக்கு தேவையான துத்தநாகம் கிடைக்கப்பெறும் வளர்ச்சி ஊக்கியான இண்டோல் அசிட்டிக் ஆசிட் IAA உற்பத்தி செய்யப்பட்டு பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைவ உதவி புரிவதுடன் இலைகள் நன்கு பச்சை நிறத்தில் இருப்பதை காண இயலும்.

தழைச்சத்தை கிரகித்து கொடுத்தல்: 

பயிறு வகை பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை அதன் வேர் பகுதியில் நிலை நிறுத்தி பயிர்களுக்கும் மண்ணிற்கும் பல்வேறு பயன்களை அளிக்கிறது என்பது நாம் அறிந்ததே. போதுமான அளவு துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் ஊட்டச்சத்து கொடுக்கும் பொழுது வேர்களில் வேர் முடிச்சுகளை உருவாக்கும் நொதிகளை ஊக்கப்படுத்தி அதிக வேர் முடிச்சுகள் உருவாவதை காண இயலும். 

ஊட்டச்சத்துக்களை கிடைக்கச் செய்தல்: 

போதுமான அளவு துத்தநாகம் கொடுப்பதால் நல்ல வேர் வளர்ச்சி இருக்கும்பொழுது பெரும்பான்மையான ஊட்டச்சத்துக்களை வேர்கள் எடுத்து செடிகளுக்கு கொடுக்கிறது. துத்தநாகத்துடன் போரான் ஊட்டச்சத்து கலந்து இடுவதால் செடிகளுக்கு செடிகளுக்கு கிடைக்க பெறும் தழைச்சத்து மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து அதிகமாகிறது. இது மட்டுமின்றி பயிரில் கடலையின் எண்ணிக்கை மற்றும்  அளவு அதிகமாகின்றது.

மகசூல் அதிகரித்தல்: 

பயிர்களுக்கு போதுமான அளவு துத்தநாகம் கிடைக்கப்பெறும் பொழுது விழுதுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு அதன் நீளமும் அதிகரிப்பதால் அவை எளிதில் மண்ணிற்கும் சென்று வளர்வதால் அதிக காய் பிடிப்பு திறன் காண முடியும் இதனால் அதிக மகசூல் எதிர்பார்க்கலாம்.

புரதச்சத்து அதிகரித்தல்: 

நிலக்கடலை பருப்பில் உள்ள புரதச்சத்தின் அளவு துத்தநாகம் இடுவதால் அதிகரிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. உணவுக்காக சாகுபடி செய்யும் பொழுது இதனையும் கருத்தில் கொண்டு ஊட்டச்சத்து மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.

எண்ணெய் சதவீதம் அதிகரித்தல்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்து உர அளவுடன் மண்ணின் தன்மையை பொறுத்து துத்தநாகம் மற்றும் சல்பேட் ஆகியவற்றை துத்தநாகம் சல்பேட் என்ற வடிவில் இடும் பொழுது இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை கடலை பருப்பில் உள்ள எண்ணெய் சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

புதன், 5 ஜூன், 2024

மரவள்ளி சாகுபடியில் இரும்பு சத்து பற்றாக்குறையும் அதன் மேலாண்மையும்

முன்னுரை:

சாகுபடியில் உள்ள மரவள்ளி/குச்சி கிழங்கு, கரும்பு, கருவேப்பிலை, உளுந்து மற்றும் பல பயிர்களில் நுண்ணூட்ட சத்து, குறிப்பாக இரும்பு சத்து குறைபாடு தென்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு விவசாயிகளின் வயல்கள் கள ஆய்வு செய்யப்பட்டு இது தொடர்பாக விரிவான கட்டுரை கீழ்க்கண்டவாறு பதிவிடப்படுகிறது.

இரும்புச்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள்: 

  • குன்றிய பயிர் வளர்ச்சி
  • குறிப்பாக நுனி இலைகளின் வளர்ச்சி குறைந்து காணப்படும் ஆனால் இலைகளில் உருமாற்றம் இருக்காது. 
  • நுனி/ தளிர் இலைகள் முழுவதுமாக மஞ்சள் நிறமாக மாறுதல். ஆனால் மாங்கனிசு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிற மாற்றமடைந்து காணப்படும்.
  • இரும்பு பற்றாக்குறையின் ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட இலைகளின் நடு நரம்பு மற்றும் இதர நரம்புகள் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும்.
  • நாளடைவில் தளிர் இலைகள் தீவிர வெளிர் மஞ்சள் நிறமாக மாறுதல் இலை நரம்புகள் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறமாக மாற்றமடையும்.
  • இதற்கு அடுத்தப்படியாக இலையின் ஓரங்களில் இருந்து கருகல் தென்படும் தீவிரமடையும் பொழுது இலை முழுவதும் பரவுகிறது. மேலும் இலை காம்புகள் வெளிர் மஞ்சள் முதல் வெள்ளை நிறத்தில் மாற்றம் அடையும்.
  • தடுப்பு நடவடிக்கை எடுக்காத வயல்களில் கருகல் அதிகரித்து மற்ற இலைகளுக்கு பரவுகிறது இதனால் கண்டிப்பாக மகசூல் இழப்பு ஏற்படும்.

ஏன் இரும்பு பற்றாக்குறை ஏற்படுகிறது: 

  • அதிக அளவு ரசாயன உரங்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் ஏற்பட்ட உப்பு படிதல் காரணமாக இரும்பு சத்து பற்றாக்குறை ஏற்படும்.
  • பொதுவாகவே அமில தன்மை கொண்ட மண் மற்றும் களர் நிலங்களில் அதிக அளவு உப்பு மற்றும் கால்சியம் சத்து இருப்பதால் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
  • இது மட்டுமின்றி மண்ணில் அதிக அளவு மாங்கனிசு துத்தநாகம் மற்றும் காப்பர் ஊட்டச்சத்து இருப்பதாலும் இரும்புச்சத்து  பற்றாக்குறையின் அறிகுறிகள் ஏற்படும்.
  • பயிர்களில் போதுமான வேர் வளர்ச்சி இல்லாததாலும்
  • தொடர்ச்சியான மண் ஈரப்பதம் மற்றும் இறுக்கமான மண் அமைப்பு 
  • மண்ணின் அதிக கார அமிலத்தன்மை மற்றும் அதன் இறுக்கத்தினால் மண்ணில் உள்ள இரும்பு சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்காத வண்ணம் நிலை நிறுத்தப்படுவதால் 
  • அதிகமாக பாஸ்பரஸ் எனப்படும் மணிச்சத்து உரத்தை பயன்படுத்துவது குறிப்பாக டிஏபி (DAP). இது போன்று பல்வேறு காரணங்கள் உள்ளது. 

தற்போது இதை எவ்வாறு சரி செய்யலாம்: 

  • பயிரின் வேர் வளர்ச்சிக்கு ஏற்ப நிலத்தில் இருக்கக்கூடிய மண்ணை மாற்றியோ அல்லது புதிதாக மண்ணை சேர்த்து பயிரிடலாம். 
  • போதுமான அளவு மண் மற்றும் மர துகள்களை அவ்வப்போது பயன்படுத்துவதால் வெகுவாக உப்பு தன்மையை குறைக்க முயற்சிக்கலாம். 
  • உப்பு தண்ணீருக்கு பதிலாக நல்ல தண்ணீரை அல்லது மழை நீரை சேகரித்து பயன்படுத்துவதால் பயிர் வளர்ச்சி ஊக்கப்படுத்துவதுடன் மண்ணில் உள்ள உப்பை குறைக்கலாம்.
  • பயிரிடும் போது மேட்டுப்பாத்திகளை தயார் செய்து நடவு மேற்கொள்வதால் உப்பு நீர் நேரடியாக வேர் வளர்ச்சியை பாதிப்பதை தவிர்க்கலாம்.
  • அதிகளவு நன்கு மக்கிய தொழு உரம் இட வேண்டும். இதனை உயிர் உரங்களுடன் ஊட்டமேற்றி பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
  • Chelated வடிவத்தில் இரும்பு சத்தை இலை வலியாக தெளிக்கலாம். பத்து நாட்களுக்கு ஒரு முறை என இரண்டு அல்லது மூன்று முறை 
  • ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் ஈயம் கரைசல் அல்லது வேஸ்ட் டி கம்போசர்(Waste decomposer) நீரில் விட வேண்டும். மாதம் ஒரு முறை என இரண்டு முறை. 
  • இது மண்ணின் கார அமிலத்தன்மையை குறைக்க உதவி புரிகிறது இதனால் இதர ஊட்டச்சத்துக்களும் செடிகளுக்கு எளிதில் கிடைக்கும் 
  • ரசாயன உரங்களை இடுவதற்கு முன்பதாக இதனை தொழு உரம் அல்லது மன் புழு உரம் பயன்படுத்தி 15 முதல் 30 நாட்கள் ஊட்டமேற்றி இடுவதால் ரசாயன உரங்கள் இடுவதால் இவை செடிகளுக்கு எளிதில் கிடைக்க பெறுவதுடன் மண்ணில் நிலை நிறுத்தப்படுவதில்லை.
  • வடிகால் வசதி ஏற்படுத்தி உப்பு தண்ணீரை நிலத்திலிருந்து வெளியேற்ற முயற்சிக்கலாம். 
  • இயற்கை வழி தயாரிப்பான பஞ்சகாவியா, மீன் அமிலம், ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் தண்ணீரில் ஊற்றி விடலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.



Recent Posts

Popular Posts